Published:Updated:

ஆஸி., மண்ணில் வரலாற்று வெற்றி -தேர்வுக் குழுவினருக்கு பரிசுத் தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ

ஆஸி., மண்ணில் வரலாற்று வெற்றி -தேர்வுக் குழுவினருக்கு பரிசுத் தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ
ஆஸி., மண்ணில் வரலாற்று வெற்றி -தேர்வுக் குழுவினருக்கு பரிசுத் தொகையை அறிவித்த பி.சி.சி.ஐ

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிய அடுத்ததாகத் தொடங்கிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் தனதாக்கியது.

Photo: Twitter/BCCI

அதன் பின்னர் தொடங்கிய ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி பெற்ற மகத்தான வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு வீரர்கள் மற்றும் மற்ற உதவிக்குழுக்களுக்கு பி.சி.சி.ஐ பரிசுத்தொகையை அறிவித்தது. 

Photo: Twitter/BCCI

இந்த நிலையில், தற்போது இந்தத் தொடரை வெல்ல, மிகச்சரியான அணியைத் தேர்வு செய்ததற்காகத் தேர்வுக்குழு உறுப்பினர் 5 பேருக்கும்  தலா ரூ 20 லட்சம் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், சரன்தீப் சிங், ஜட்டின், ககன் கோடா, தேவாங் காந்தி ஆகிய 5 பேருக்கும் இந்தப் பரிசுத்தொகை கிடைக்க உள்ளது. 

இதுதொடர்பாக தலைவர் வினோத் ராய் கூறுகையில்,  ``ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். முன்னதாக வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாகச் சென்ற குழுவினருக்கும் பரிசுத்தொகைகளை அறிவித்தோம். அந்த அணியைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றிய தேர்வுக்குழுவைச் சேர்ந்த 5 பேருக்கும் தற்போது பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு செய்த இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயமில்லாமல் பொறுப்பாக விளையாடினார்கள்” என்றார். 

இந்தத் தொடரின்போது இந்திய தேர்வுக் குழுவினரும் பல்வேறு நெருக்கடியான சூழலைச் சந்தித்தனர். ப்ரித்வி ஷாவின் காயம், ராகுல், விஜய் ஆகியோரின் ஃபார்ம் என பல்வேறு சிக்கல்கள் வர, அடுத்தடுத்து தரமான மாற்று வீரர்களை அணிக்கு வழங்கினர் இந்த தேர்வுக் குழுவினர். மாற்று வீரராகக் களமிறங்கிய மயங் அகர்வல் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடருக்கு முன்னதாக ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் சர்ச்சையான கருத்தின் காரணமாக, அணியிலிருந்து நீக்கப்பட, அந்த இடமும் உடனடியாக சரியான வீரர்கள் கொண்டு நிரப்பப்பட்டது. இதன் காரணமாகத்தான் தேர்வுக்குழுவினருக்கும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.