Published:Updated:

`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி!

`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி!
`என்றாவது ஒரு நாள் இது முடிந்துவிடும்' - ஓய்வுகுறித்து மனம்திறந்த விராட் கோலி!

கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு என்பதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். 

விராட் கோலி, கடந்த 2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். மொத்தம் 5 போட்டிகள். அந்தத் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், நான்காவது போட்டியில் அரை சதம் அடித்து இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர், இன்று இந்திய கிரிக்கெட்டின் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். பேட்ஸ்மேனாக அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரும் இவர், இந்திய அணியின் கேப்டனாகவும் சாதித்துவருகிறார். 

இதுவரை இந்திய அணியின் எந்த கேப்டனும் சாதிக்காத பல சாதனைகளைச் செய்துவருகிறார். இதனால் நாளுக்கு நாள் அவரது கிராஃப் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வுபெறுவது; எதிர்காலத் திட்டங்கள்  குறித்து கோலி பேசியுள்ளார். தனது 'விராட் கோலி மொபைல் அப்ளிகேஷன்' மூலம் இதுகுறித்துப் பேசியுள்ள அவர், ``எட்டு ஆண்டுகளுக்குப் பின் அனுஷ்கா மற்றும் எனது குடும்பத்துக்கே முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும். 

ஆனால், எல்லா நேரங்களிலும் குடும்பத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால், வாழ்க்கையை விட எதுவும் பெரியது கிடையாது. கிரிக்கெட்டை தீவிரமாக நேசிக்கவில்லை என்றால், சரியாகச் செயல்பட முடியாது எனக் கூறுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. அதை நம்பவும் இல்லை. ஒரு பெரிய பகுதிதான் எப்போதும் வாழ்க்கையாக இருக்க வேண்டும். எங்கு, என்ன நடந்தாலும் வீட்டுக்குத்தான் வர வேண்டும். 

அதனால்தான், குடும்பத்துக்கு முன்னுரிமைகொடுக்க விரும்புகிறேன். கிரிக்கெட் என்பது எனது வாழ்க்கையின் சிறப்பான ஒரு பகுதி. ஆனால், மிக முக்கியமானது இல்லை என்று நான் பார்க்கவில்லை. இப்போது, கிரிக்கெட் விளையாடிவருவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைக்கிறேன். கிரிக்கெட் வாழ்க்கை என்றாவது ஒரு நாள் முடிந்துவிடும். அநேகமாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவேன் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.