Published:Updated:

``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது?!’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive

``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது?!’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive

"நாங்கள் இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தபோது, இந்தியாதான் சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட இந்தியாவிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது நடக்கும் என்று நான் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன்."

``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது?!’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive

"நாங்கள் இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தபோது, இந்தியாதான் சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட இந்தியாவிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது நடக்கும் என்று நான் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன்."

Published:Updated:
``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது?!’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive

டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன், ஹேட்லி, இம்ரான் கான், போத்தம் போன்ற வேகப் புலிகளின் பெளன்சர்களை ஹெல்மெட் இல்லாமல் ஹுக் செய்வார். ஸ்கோர் 2/2 என்றிருந்தாலும் சரி, 200/2 என்றிருந்தாலும் சரி, கிரீஸில் ரிலாக்ஸாக நின்று பெளலர்களைக் கதறவிடுவதை ஒரு கலை போலவே செய்தார். ஆன் டிரைவ்கள் மூலம் கிரிக்கெட்டில் அழகியல் உணர்வைப் புகுத்தியவர்களில் முதன்மையானவர். இவர் இல்லாத `ஆல் டைம் ஃபேவரைட்’ அணியைத் தேர்ந்தெடுப்பது சிரமம். சர் விவியன் ரிச்சர்ட்ஸ் அவரது சகாக்கள் இணைந்து மிரட்டியது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் பொற்காலம். தன் 66 வயதிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் மனிதர். `அவர் செய்வதில் என்ன தவறு’ என விராட் கோலியின் அணுகுமுறைக்கு தம்ஸ் அப் காட்டுகிறார். புருவம் உயர்த்தி பும்ராவின் பெளலிங் ஆக்ஷனை வியக்கிறார். 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர், இப்போது ஆன்டிகுவா மருத்துவக் கல்லூரியின் அம்பாசிடர். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம். 

``1970, 80-களில் வேகப் பந்துவீச்சுதான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடையாளமாக இருந்தது. ஆனால், போகப்போக அந்த நிலை மாறிவிட்டது. அதன்பின் லாரா, சந்தர்பால், கிறிஸ் கெய்ல் போன்றவர்கள்தான் கொண்டாடப்பட்டனர். மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது ஒஷேன் தாமஸ், கார்ட்ரல், கீமோ பால் என இளம் வீரர்கள் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களை சரியாக வார்த்தெடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் அடையாளத்தை மீட்க முடியுமா?"

``நிச்சயமாக. அதை எப்போதோ செய்திருக்கவேண்டும். எப்போதோ... கடந்த காலத்தில் எது எங்கள் அடையாளம் என்பதை உணர்ந்து, அதை இப்பொழுதும் தொடர்ந்திருக்க வேண்டும். அவ்வளவு திறமைசாலிகள் இருந்தனர். சிலபல ஆண்டுகள் தொடர்ந்து திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஏதோவொரு புள்ளியில், அது நின்றுவிட்டது. இதை மோசமான மேனேஜ்மென்ட் என்றுதான் சொல்வேன். தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் ஏற்பட்டிருக்கும் விளைவு இது. உங்கள் அணியின் வெற்றிக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அதை ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும். இனியாவது அதைச் சரிசெய்யவேண்டும். அதுதான் எங்களுக்கு வெற்றிகளையும் அடையாளத்தையும் தந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு நினைவிருக்கிறது... நாங்கள் இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தபோது, இந்தியாதான் சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட இந்தியாவிடம் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இது நடக்கும் என்று நான் முன்பு ஒருமுறை சொல்லியிருந்தேன் (சிரிக்கிறார்). அது நடப்பதைப் பார்த்துவிட்டேன்!"

``கிரிக்கெட் போர்டும், வீரர்கள் டி-20 லீகில் பங்கேற்பதுமே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றுதான் எப்போதும் சொல்லப்படுகிறது. அவை மட்டும்தான் காரணம் என்று நினைக்கிறீர்களா?"

``உண்மையில் இந்த விஷயத்தில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான முறையில் கவனிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான முடிவை எடுக்கத்தான் செய்வார்கள். கிரிக்கெட் போர்டைப் பொறுத்தவரை, அவர்கள் மற்றவர்களைக் கைகாட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். பிரச்னைகளுக்கான தீர்வைப் பற்றி யோசிப்பதேயில்லை. இதில் வீரர்களைக் குறைசொல்லக் கூடாது. நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பு, நல்ல முறையில் இயங்கினால் எல்லாமே சுமுகமாக இருந்திருக்கும். வீரர்களும் டி-20 தொடர்களையும், தேசிய அணியையும் சரியாக பேலன்ஸ் செய்திருப்பார்கள். இந்தப் பிரச்னை சரியாகக் கையாளப்படவில்லை. யாரையும் கைகாட்டாமல், தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்".

``இந்தப் பிரச்னைகளையெல்லாம் தாண்டி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் `லீடர்ஷிப்' என்பது மிகப்பெரிய பிரச்னையாகத் தெரிகிறதே. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்தியச் சுற்றுப்பயணத்தின்போது, 3 ஃபார்மட்களிலும் சேர்த்து 27 வீரர்கள் விளையாடினர். அதிலும் கீமோ பால், ஒஷேன் தாமஸ் போன்ற அறிமுக வீரர்கள் ஓரிரு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டனர். தொடர்ந்து பிளேயிங் லெவன் மாறிக்கொண்டே இருந்தது. இப்போது அணிக்கு நிரந்தரப் பயிற்சியாளரும் இல்லை. இதுவும் ஒரு சர்வதேச அணிக்குப் பிரச்னைதானே?"

``27 வீரர்களா...? இந்தச் செய்தியைச் சொன்னதற்கு நன்றி... (பலமாகச் சிரிக்கிறார்). இது மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம்தான். அதுவும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடக்கவிருக்கும்போது, இப்படியான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அணிக்கு இதெல்லாம் பெரும் பாதிப்புதான். இங்கு எதுவுமே ஒழுங்காகத் திட்டமிடப்படவில்லை என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏதாவது ஆச்சர்யம் நடக்கும் என்று வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்".

``இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரு வேறு கேப்டன்கள் இருக்கிறார்கள். இந்தியத் தொடரின்போது மொத்தம் 3 வீரர்கள் அணியை வழிநடத்தினார்கள். இந்த `2 கேப்டன்' ஃபார்முலா அணிகளுக்குக் கைகொடுக்குமா?"

``யாராவது ஏதாவது செய்தால் நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். என் காலத்தில் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மட்களிலும் சிறப்பாக வழிநடத்திய கேப்டன்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு வீரர் மனரீதியாக உறுதியாக இருந்தால் டெஸ்ட், ஒருநாள், டி-20 என எல்லா வகையான போட்டிகளிலும் அணியை வழிநடத்தமுடியும் என்று நான் நம்புகிறேன். சில சமயங்களில், சில முடிவுகள் தேவைக்காக எடுக்கப்படுவதில்லை. இன்னொருவர் செய்ததைப் பார்த்தே அவை எடுக்கப்படுகின்றன".

``வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு பற்றி..."

``நான் பொதுவாக இப்படியெல்லாம் எதையும் கணிப்பதில்லை. (சிரிக்கிறார்). அதிர்ஷ்டம் இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்குப் போகும். போகும் என்று நம்புவோம் (மீண்டும் பலத்த சிரிப்பு). ஆனால், அதற்கு முன் மாற்றவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஸ்டுவார்ட் லா (முன்னாள் பயிற்சியாளர்) வெளியேறியிருக்கிறார். வங்கதேசத்திடம் தோற்றிருக்கிறோம். சில பின்னடைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு நல்ல பயிற்சியாளரை முதலில் பணியமர்த்தவேண்டும். அணியின் தேவை என்ன என்பதைச் சரியாக ஆலோசித்த அவற்றைச் சரிசெய்ய வேண்டும். அணியில் திறமையான வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை சரியான முறையில் தயார் செய்வது அவசியம். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் மற்ற அணிகளோடு சரிசமமாகப் போட்டியிட முடியும். அதற்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்".

``கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிவருவதாகப் பலத்த விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. நீங்களும் பல இடங்களில், மைதானங்களிலுள்ள சிறிய பௌண்டரி எல்லை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். கிரிக்கெட், பேட்ஸ்மேன்களின் கேமாக மாறிவருகிறது என்று நீங்களும் நினைக்கிறீர்களா?"

``பௌலர்களுக்கான பாதுகாப்பு இன்னும் கொடுக்கப்படவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். இப்போதெல்லாம், பந்துகள் சிக்ஸருக்குப் பறப்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை விக்கெட் எடுப்பதைப் பார்ப்பதுமே அழகுதான். கிரிக்கெட்டின் அந்தப் பாதியையும் ரசிக்க வேண்டும். பேட்டிங், பௌலிங் இரண்டும் சேர்ந்ததுதான் கிரிக்கெட். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. அதனால், அந்த இரண்டுக்கும் சம்மான முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்".

``டெனிஸ் லில்லி - நீங்கள் எப்போதுமே வியந்து பேசும் ஒரு பௌலர். இந்தத் தலைமுறை பௌலர் யாராவது, லில்லி போல் உங்களைக் கவர்ந்திருக்கிறார்களா"

``இப்போது பும்ராவை மிகவும் பிடித்திருக்கிறது. I love him. அவரிடம் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பெரும்பாலான பௌலர்களின், பௌலிங் ஆக்ஷனில் இருக்கும் நேர்த்தியும் அழகும் அவரிடம் இல்லை. பந்தை எக்ஸ்ட்ரா பௌன்ஸ் செய்யவைக்கும் பௌலர்களை (Hitting the deck) எனக்குப் பொதுவாகவே பிடிக்கும். பும்ரா அதிலும் எக்ஸ்ட்ரா பௌன்ஸ் ஏற்படுத்துகிறார். மிகப்பெரிய ரன் - அப் இல்லை. மெதுவாகவே ஓடிவருகிறார். தன் ஆற்றலைச் சரியாகச் சேமித்துவைக்கிறார். பலமாகப் பந்தை பிட்ச் செய்கிறார். கொஞ்சம் கூட அவரிடம் பயமில்லை. பேட்டிங் செய்வது யார் என்பது பற்றிய கவலை இல்லை. அதுதான் அவரை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு அவர் மிகப்பெரிய பொக்கிஷம். அவர் மற்ற பௌலர்களைவிட வித்தியாசமானவர். ஆனால், அந்த வித்தியாசம்தான் அவர் பலம்!"

``இந்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை பற்றி உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எந்த அணி கோப்பை வெல்லும்?"

``ஒரு அணியைத் தேர்வு செய்யும் தவற்றை நான் செய்ய மாட்டேன். நிறைய அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து மிகவும் பலமாக இருக்கிறது. சொந்த ஊரில் நடப்பதால், முன் எப்போதையும்விட நல்ல வாய்ப்பு இருக்கிறது. எப்போதுமே அரையிறுதி, இறுதியில் வந்து வீழ்ந்துவிடுவார்கள். இந்த முறை முயற்சி செய்தால் கோப்பை வெல்லலாம். அதேபோல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் பலமாக இருக்கின்றன. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவையும் இந்தப் போட்டியிலிருந்து விலக்கிவிட முடியாது. ஆரோக்கியமான போட்டி இருக்கப் போகிறது. அனைத்து அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்புவோம்.(சிரித்துக்கொண்டே தொடர்கிறார்). எப்போதுமே ஒரு குதிரை, எதிர்பாராத வகையில் எல்லையை முதலில் தாண்டும். இந்த முறை அந்தக் குதிரை வெஸ்ட் இண்டீசாக இருந்தால் நன்றாக இருக்கும்."

``இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே விளையாடப்போகின்றன. அசோசியேட் அணிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியே உலகக் கோப்பையைத் தவறவிடும் நிலையில் இருந்தது. உலகக் கோப்பை 10 அணிகள் தொடராக நடப்பது பற்றிய உங்கள் கருத்து..."

``அசோசியேட் அணிகள்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்களின் முன்னேற்றத்துக்கு, ஐ.சி.சி திட்டங்கள் வகுப்பது அவசியம். உண்மையில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும். இன்று இல்லாவிட்டாலும், சீக்கிரமே அந்த அணிகள் பலமான அணிகளாக உருவெடுக்கக்கூடும். கிரிக்கெட் சமூகம் அதற்கு வழிவகை செய்யவேண்டும். இதற்கு முன் பல உலகக் கோப்பை தொடர்களில், அந்த அணிகளால் மிகப்பெரிய `அப்செட்' ஏற்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பது அவசியம். அந்த அணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யப்படுகின்றன. அதற்கான பலன் இதுபோன்ற தொடர்களில்தானே தெரியும்?!"

``இந்த உலகக் கோப்பையில் அசத்தப் போகும் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பௌலர் என நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?"

``நான் ஆல்ரவுண்டர்கள்தான் இந்த உலகக் கோப்பையில் ஜொலிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பு இப்போது அதிகமாகத் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்ப இப்போது நிறைய ஆல்ரவுண்டர்கள் மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய முதல் சாய்ஸ் ஆண்ட்ரே ரஸல். அவர் உலகக் கோப்பையில் விளையாடினால், நிச்சயம் அசத்துவார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், மேக்ஸ்வெல் போன்றவர்களும் பட்டையைக் கிளப்புவார்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் எந்த அணிக்காக விளையாடப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அதேபோல், இந்தியாவின் ஹர்டிக் பாண்டியா - கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், தன் திறமையை நிரூபித்துள்ளார். அவர் ஃபிட்டாக இருந்தால், அவரிடமும் நிறைய எதிர்பார்க்கலாம்".

``ஜோஃப்ரா ஆர்ச்சர் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய பிரச்னைகள். இப்போது அவர் இங்கிலாந்துக்காக விளையாடச் சென்றால், அது இன்னும் மோசமான பிம்பத்தை ஏற்படுத்தும் அல்லவா?"

``அவர் எந்த அணிக்கு விளையாடப்போகிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதுபோன்று, முன்பே நடந்துள்ளதுதானே. வெஸ்ட் இண்டீஸ் பூர்வீகம் கொண்ட நிறைய வீரர்கள், இங்கிலாந்து அணிக்காக ஆடியிருக்கிறார்கள். கிறிஸ் லீவிஸ் - அருமையான வீரர். அவர் இங்கிலாந்துக்காக ஆடியிருக்கிறார். சமீபத்தில் கிறிஸ் ஜோர்டான்கூட, ஆர்ச்சர் இருக்கும் நிலையில்தான் இருந்தார். அவர் இங்கிலாந்தைத் தேர்வு செய்துவிட்டார். இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதைச் சரிசெய்ய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு சரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வீரர்களுக்கு அவர்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்படும் வகையில், போர்டு செயல்படவேண்டும்".

``வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் சரியான சாய்ஸ்?"

``நிறைய பயிற்சியாளர்களைப் பார்த்துவிட்டோம். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறைய பேர் பயிற்சியாளராக இருந்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் அந்தப் பொற்காலத்தின்போது, அணியோடு இருந்த ஒரு அனுபவசாலி அணிக்குப் பயிற்சியாளராகவேண்டும் என்பது என் விருப்பம். `வெஸ்ட் இண்டீஸ்' எப்படி ஆடினால் ஜெயிக்கும் என்று அறிந்தவராக இருக்க வேண்டும். இதுவரை யாரும் அதைப் பின்பற்றவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்திய அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ரவி சாஸ்திரி எவ்வளவு சிறப்பான பணியைச் செய்துகொண்டிருக்கிறார். ஏன்...? அவருக்கு இந்திய கிரிக்கெட்டின் வரலாறும் கலாசாரமும் தெரியும். 83' உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்தவரல்லவா. அந்த வெற்றியின் அனுபவத்தைத்தானே, இப்போது இந்தத் தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்குத் தேவை".

``வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் என்ற இடத்தில் உங்களை நினைத்துப் பார்த்ததுண்டா?"

``இல்லை. (சிரித்துக்கொண்டே) எனக்காக அந்த வேலையை இன்னொருவர் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்"

``1983 உலகக் கோப்பை பற்றிய நினைவுகள்"

``அது மிகவும் மோசமான நினைவு. மறக்க நினைக்கும் கனவு. அப்போது எல்லா அணிகளும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தன. கொண்டாட வந்த நூற்றுக்கணக்கான இந்திய ரசிகர்களை விலக்கி, உள்ளே செல்வதே பெரும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு இந்திய ரசிகர் எங்களைப் பார்த்து, ``இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது" என்று எங்களுக்கு ஆறுதல் சொன்னார். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதைக் கடந்து செல்வது கடினமாக இருந்தது. திடீரென்று இரவு தபேலா சத்தம் வேறு. ஓட்டலுக்கு உள்ளே, வெளியே ஒரே கொண்டாட்டம்தான். அந்தச் சத்தம் நிற்கவே இல்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை சோமர்செட் நகரில் ஒரு மேட்ச் இருந்தது. அதனால் எப்படியாவது தூங்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அந்தத் தபேலா சத்தத்தால் தூங்க முடியவில்லை. மிகவும் நல்ல இசைதான். ஆனால், அப்போது இருந்த மனநிலையில், அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அன்று முழுதும் அந்தச் சத்தம் என்னைத் தூங்கவிடவில்லை. இப்போதும்கூட எனக்கு அந்தத் தபேலா சத்தம் கேட்பதுபோல் இருக்கிறது" (பலமாகச் சிரிக்கிறார்). 

``யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி அப்போது கோப்பை வென்றது. அந்த வெற்றிக்கான `X Factor' என்று எதை நினைக்கிறீர்கள்?"

``கபில்! அவர்தான் இந்திய அணியின் முகத்தை மொத்தமாக மாற்றியவர். மிகவும் தீர்க்கமான வீரர். நான் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் அந்த வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருப்பார். அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி கிடையாது. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்கு முன் அவர்களிடம் பெரிதாகப் போராட்ட குணத்தைப் பார்த்ததில்லை. ஆனால், கபில் தேவ் அதையெல்லாம் மாற்றினார். களத்தில் தன் வீரர்கள் சோர்ந்துபோகவே விடமாட்டார். அந்த மொத்த அணியின் திறனையும் அந்த ஒற்றை ஆள் தூக்கி நிறுத்தினார். நிச்சயம் அவர்தான் அந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணம்".

``ஃபைனலில், நீங்கள் அடித்த அந்த ஷாட்டை கபில் பிடித்துவிடுவார் என்று நினைத்தீர்களா?"

``உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த இடத்தில் நான் அமர்நாத், கவாஸ்கர் போன்றவர்களில் யாரையாவது பார்த்திருந்தால், `நிச்சயம் எனக்கு வாய்ப்பு இருக்கிறது' என்று நினைத்திருப்பேன். ஆனால், அந்த இடத்தில் கபில்தேவைப் பார்த்த நொடியே எனக்கு வாய்ப்பு இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். அவர் கேட்சைப் பிடிப்பதற்கு முன்பே என் கிளவுஸ்களை நான் கழற்றி நடக்கத்தொடங்கிவிட்டேன். ரசிகர்கள் எழுப்பிய பெரும் சத்தம், அவர் அதைப் பிடித்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. கபில் நிச்சயம் அதைத் தவறவிடமாட்டார் என்று எனக்குத் தெரியும்".

``இப்போதைய இந்திய அணி பற்றி உங்கள் அபிமானம் என்ன?"

``உலகின் மிகவும் கடினமான அணி. வீழ்த்த முடியாத அணி. மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளனர். பெரிய மாற்றம் காட்டியுள்ளனர். மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் ரொம்ப சொதப்புவார்கள். ஆனால், இன்றைய வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அணிக்குத் தேவையான அனைத்துமே இந்திய அணியிடம் இருக்கிறது. கேப்டனாக விராட் கோலி! வேறு என்ன வேண்டும் ஒரு அணிக்கு?"

``விராட் கோலி...."

``நான் அவரது ரசிகன். சவால்களை மிகவும் விரும்புகிறார். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதுதான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. எல்லோரும் அவருடைய ஆட்டிட்யூடைக் குறை சொல்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுவீர்களா என்ன? நிச்சயம் இல்லை. கண்டிப்பாக நாம் அவர்களைத் தாக்கவேண்டும். இதுநாள்வரை, எதிராளியின் கன்னத்தைப் பதம்பார்த்துக்கொண்டே இருந்தவர்களை (ஆஸ்திரேலிய அணி), யாரேனும் எதிர்த்துத்தானே ஆகவேண்டும். நாங்களும் அவர்களை எதிர்த்திருக்கிறோம். இப்போது விராட் அதைச் செய்கிறார். அதனால் அவரை எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது. 

``ஆனால், இப்போதெல்லாம் வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்தாலோ, ஓவர் ரியாக்ட் செய்தாலோகூட ரசிகர்கள் அவர்கள்மீது பாய்கிறார்களே?"

``அது கிரிக்கெட்டோடு ஒன்றிப்போனது. இதற்கு முன்பும் இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். அது எல்லை மீறினால்தான் தவறு. எதிரணி வீரர்களை பெர்சனலாகத் தாக்குவது, குடும்பத்தை இழிவுப் படுத்துவதுபோல் பேசுவது போன்ற செயல்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், மற்ற சின்னச் சின்ன தகராறுகள், வாக்குவாதங்கள் இருக்கத்தான் செய்யும். நல்ல ஆரோக்கியமான மோதல்கள் நிச்சயம் விளையாட்டுக்கு நல்லது என்றுதான் நான் சொல்வேன்".

``நீங்கள் லிவர்பூல் ரசிகர். இந்த சீசனில் லிவர்பூல் அணியின் அசத்தல் பெர்ஃபாமன்ஸ் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது?"

``நான் மட்டுமல்ல... (அருகில் இருந்த ஒருவரைக் கைகாட்டி) என் உதவியாளர் ஜோஷ் கூடத்தான். இந்த சீசனில் அவர்களின் ஆட்டம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சீசன் சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடியபோது, இந்தப் பல்கலைக்கழக ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்தோம். அப்போது ஜோஷ் வந்து `நாம் தோற்றுவிட்டோம்' என்று சொன்னபோது சற்று வருத்தமாக இருந்தது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஃபைனலுக்குச் சென்றதே பெரிய சாதனைதான். அப்போது விட்டதைப் பிடிக்க, இப்போது சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். பயிற்சியாளர் ஜோர்ஜான் கிளாப், வீரர்கள்மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறார். வீரர்களும் அவர்மீது மரியாதை வைத்துள்ளனர். அது வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்".

``உங்களின் ஆல் டைம் டெஸ்ட் லெவன்?"

``இல்லை. நான் எப்போதும் அப்படித் தேர்வு செய்ய மாட்டேன். வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம். என்னுடைய ஓப்பனர் - சுனில் கவாஸ்கர். அவருக்குப் பிறகான ஒவ்வொன்றும் போனஸ்தான்!"

``உங்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ?"

``முகமது அலி!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism