Published:Updated:

`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்!’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்

`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்!’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்
`ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம்!’ - தோனி பாட்னர்ஷிப் குறித்து தினேஷ் கார்த்திக்

`இறுதி ஓவரில் வெற்றிக்கு ஒரே அடிதான் மீதமுள்ளது என்பது எனக்கும் தோனிக்கும் தெரியும். அதனால்தான் நாங்கள் இருவரும் பதற்றமடையவில்லை'' எனத் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது இந்தியா. போட்டியின் இறுதிகட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தோனி. தோனியின் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். `பெஸ்ட் ஃபினிஷர்' `தோனி இஸ் பேக்' என்பன போன்ற பதிவுகள் தெறித்தன. இந்த ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் கோலி, `அவரை யாராலும் கணிக்க முடியாது; ஹேட்ஸ் ஆஃப் தோனி' என்று புகழ்ந்தார். மேலும், தினேஷ் கார்த்திக்கையும் கோலி பாராட்டினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் நேற்றை ஆட்டம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அவர், ``தோனி இன்னிங்கஸை ஃபினிஷிங் செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற இன்னிங்ஸை அவர் மீண்டும் மீண்டும் விளையாடுகிறார்.போட்டியின்போது ஏற்படும் அழுத்தத்தை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு, சரியான நேரம் வரும்போது அதை அப்படியே எதிர் அணிக்கு திருப்பிவிடுகிறார். அதுதான் அவருடையே மிகப்பெரிய பலம். நேற்றைய ஆட்டம் அதற்கு ஓர் உதராணம். களத்தில் அவர் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்; நான் ஒரு திட்டத்தை வைத்திருந்தேன்; இருவரும் சரிவர ஒத்துழைத்து விளையாடினோம். இறுதி ஓவரில் வெற்றிக்கு ஒரே ஒரு ஷாட் போதும் என்பதை நாங்கள் இருவருமே உணர்ந்துகொண்டோம். அதனால்தான் இருவரிடமும் பதற்றமில்லை. ஆஸ்திரேலியா பௌலர்கள், நாங்கள் நெருக்கடியில் இருக்கிறோம் என எண்ணினார்கள்.

அவர்கள் 6 பந்துகளை வீசியாக வேண்டும். ஒருபந்தில் தவறு செய்தாலும் அவர்கள் மேல் பாய்ந்துவிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியும். சூழல் இப்படியிருக்க தோனி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தோனிக்கு சதைப்பிடிப்பு இருந்தது. கடும் உஷ்ணத்தால் எங்கள் அனைவருக்கும் நீர் தேவைப்பட்டது. நான் ரன்களை ஓடியே எடுத்ததால், சதைப்பிடிப்பால் அவர் ஓடுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். அடுத்த முறை அவரும் நானும் பேட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், எதிர்முனையில் அவர் என்னைவிட பவுண்டரிகளை அடிக்கும் வீரரைத்தான் விரும்புவார் என நினைக்கிறேன். நீண்டநாள்களுக்குப் பிறகு அவருடன் விளையாடியது மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.