Published:Updated:

`வீட்டைவிட்டு வெளியேறவில்லை; செல்போனை எடுப்பதில்லை!’ - சர்ச்சையால் சோகமான பாண்ட்யா

`வீட்டைவிட்டு வெளியேறவில்லை; செல்போனை எடுப்பதில்லை!’ - சர்ச்சையால் சோகமான பாண்ட்யா
`வீட்டைவிட்டு வெளியேறவில்லை; செல்போனை எடுப்பதில்லை!’ - சர்ச்சையால் சோகமான பாண்ட்யா

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, சொந்த ஊர் திரும்பியதிலிருந்து வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை என்று அவரது தந்தை ஹிமான்ஷூ தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை பி.சி.சி.ஐ சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். சம்பவம் தொடர்பாக இருவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிறகும், அவர்கள் பதிலில் திருப்தியடையாத பி.சி.சி.ஐ, இருவருக்கும் கடுமையான தண்டனை அளிக்கும் முடிவில் இருக்கிறது. 

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா திரும்பிய பாண்ட்யா, தனது செயலால் கடுமையான அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதனால், அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை என்றும், ஆனால், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்ததாகவும் பாண்ட்யாவின் தந்தை கூறியிருக்கிறார். இதுகுறித்து ஆங்கில ஊடகமான மிட்-டேவுக்கு அளித்துள்ள பேட்டியில் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷூ கூறுகையில், ``ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர், அவர் வீட்டைவிட்டே வெளியேறவில்லை. அதேபோல், தனக்கு வரும் போன் கால்களுக்கும் அவர் பதிலளிப்பதில்லை. முழு ஓய்வில் இருக்கிறார் பாண்ட்யா. 

எங்கள் பகுதியில் இது பண்டிகைக் கொண்டாட்ட காலமாகும். இந்தக் காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பட்டம் விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்ததால், பாண்ட்யாவால் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இயலவில்லை. ஆனால், இந்த ஆண்டு வீட்டில் இருந்தும் அவர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை. அந்த சர்ச்சை குறித்து வீட்டில் பேசுவதில்லை என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். காபி வித் கரண் நிகழ்ச்சி குறித்து பாண்ட்யாவின் மூத்த சகோதரர் குர்ணால்கூட அவருடன் ஆலோசிக்கவில்லை. பி.சி.சி.ஐ-யின் முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார்.