Published:Updated:

பாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி 

பாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி 
பாண்ட்யா, ராகுல் `சர்ச்சை’ கருத்து - சிட்னியில் மனம் திறந்த கேப்டன் கோலி 

பிரபல டி.வி நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா மற்றும் ராகுலின் சர்ச்சை கருத்து தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில்  `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த கேள்விகளுக்கும் பர்சனல் பக்கங்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அண்மையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்கள் தொடர்பாக பாண்ட்யா தெரிவித்த கருத்துக்கு அவர் ட்விட்டர் மன்னிப்புக் கோரினார். பாண்ட்யா மற்றும் ராகுல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ -யின் நிர்வாகக் குழுவின் வினோத் ராய், இருவருக்கும் தலா 2 போட்டிகள் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இதுதொடர்பான இறுதி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. 

இந்த நிலையில், நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் குறித்து சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, பாண்ட்யா மற்றும் ராகுலின் கருத்து தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தார். ``நாங்கள் ஒரு கிரிக்கெட் அணியாகவும் பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாகவும் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அது அவர்கள் இருவரின் தனிப்பட்ட கருத்து. அணி நிர்வாகத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். 

இந்திய அணியைப் பொறுத்தவரை, இந்தச் சர்ச்சை எங்கள் நம்பிக்கையைக் குலைக்காது. கிரிக்கெட் வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து முதல் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும்” என்றார். 

இதனால் முதல் ஒருநாள் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட பட்டியல் பிசிசியின் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் அமையும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் பாண்ட்யா, ராகுல் கலந்துகொண்ட குறிப்பிட்ட எபிசோடு ஸ்ட்ரீமிங்  தளமான ஹாட்ஸ்டாரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.