Published:Updated:

``சச்சின், டிராவிட்டைவிட புஜாரா இதில் சிறந்தவர்” - ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர்

``சச்சின், டிராவிட்டைவிட புஜாரா இதில் சிறந்தவர்” - ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர்
``சச்சின், டிராவிட்டைவிட புஜாரா இதில் சிறந்தவர்” - ஆஸ்திரேலிய கோச் ஜஸ்டின் லாங்கர்

டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின்னர் முதல் முதலாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புஜாராவின் ஆட்டம் குறித்து வியந்து பேசினார்.

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் தொடர் நாளை சிட்னியில் தொடங்கவுள்ளது. அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. 

டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின்னர் முதல் முதலாக செய்தியாளரைச் சந்தித்தார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அப்போது அவர் ஒருநாள் தொடரில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ``2001 -ல் கிடைத்த தோல்விக்குப் பின்னர் 2004-ம் ஆண்டில் நாக்பூரில் இந்தியாவில் வென்றோம். எனது கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான போட்டியாக அதை நான் பார்க்கிறேன். 

இந்திய அணி மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் இந்தப் போட்டியை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் ஒருநாள் போட்டியில் சிறந்த அணியாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத் திட்டங்கள் வகுத்து வருகிறோம். டெஸ்ட் தொடரில் விளையாடியதை விடச் சிறப்பாக விளையாடுவோம். 

பந்தைக் கவனித்து ஆடுவதில் புஜாரா மாதிரி ஒரு வீரரை நான் இதுநாள் வரை பார்த்ததில்லை. பந்தைக் கவனித்து ஆடுவதில் அவர் சச்சின் மற்றும் டிராவிட்டைவிட சிறந்தவீரர் என்பேன். ஒரே ஒரு ஸ்பின்னர் வைத்துக்கொண்டு ஆடும்போது எதிரணி இரண்டு நாள் பேட் செய்தால் ஒரு அணியாக நமது எனர்ஜியை இழந்துவிடுவோம். மெல்போர்ன் மற்றும் சிட்னியில் அதுதான் நடந்தது.
 
நாதன் லயன் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த முடிவு வரும் உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு, வெள்ளை நிறப் பந்தில் லயன் செயல்படுவதை காண ஆவலுடன் உள்ளேன். உலகக்கோப்பைக்கு முன்னர் 10 போட்டிகளுக்கு மேல் விளையாட உள்ளோம். அதனால் உலகக்கோப்பை தொடருக்கான அணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா எப்போதும் போல் சிறப்பாகச் செயல்படும்” என்றார்.