Published:Updated:

புதிய உத்திகள், புதிய டிரஸ்ஸிங் ரூம், புதிய டீம் இந்தியா..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0! #AUSvIND

புதிய உத்திகள், புதிய டிரஸ்ஸிங் ரூம், புதிய டீம் இந்தியா..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0! #AUSvIND
புதிய உத்திகள், புதிய டிரஸ்ஸிங் ரூம், புதிய டீம் இந்தியா..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0! #AUSvIND

10 டெஸ்ட் போட்டிகள் கூட விளையாடாத ரிசப் பன்ட், தன்னைவிட சுமார் 10 வயது மூத்த ஜடேஜாவை ``கமான் ஜட்டு" என்கிறார். புஜாராவைக் கலாய்த்து டான்ஸ் ஆடுகிறார். அவரோடு கோலியும் சேர்ந்து ஆடுகிறார். அந்த டிரஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களுக்கும் எல்லாச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து, ``இப்படி ஒரு டிரஸ்ஸிங் ரூம் கலாசாரமெல்லாம் இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிது" என்று கவாஸ்கரே வியக்கிறார்.

விராட்டின் நம்பிக்கையும் பௌலர்களின் எழுச்சியும்..! கேப்டன் கோலி வெர்ஷன் 2.0 ; பாகம் - 1 http://bit.ly/2D1EZ2S

இதற்கு முன்புவரை `கேப்டன்' கோலியை யாரும் இவ்வளவு புகழ்ந்ததில்லை. சொல்லப்போனால், விமர்சனங்கள் மட்டுமே இந்திய கேப்டன்மீது வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால், இப்போது..? இயான் சேப்பல், மைக்கேல் கிளார்க், சுனில் கவாஸ்கர் முதற்கொண்டு அனைவரும் கோலியை, அவர் கேப்டன்சியைப் பாராட்டுகின்றனர். எப்படி?! ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியினால் ஏற்பட்ட மாற்றமா இது? நிச்சயமாக அதுமட்டுமல்ல. களத்தில், டிரெஸ்ஸிங் ரூமில், பிரஸ்மீட்டில்... ஒவ்வோர் இடத்திலும் இந்தத் தொடரின்போது தெரிந்தது புதிய விராட். அசத்தல் ஃபீல்டிங் செட் அப், புத்திசாலித்தனமான பௌலிங் மாற்றங்கள், தீர்க்கமான முடிவுகள் என தன் 2.0 வெர்ஷனை வெளிக்காட்டினார் கோலி. ஆம், இது கேப்டன் கோலி 2.0!

அசத்தல் ஃபீல்டிங் பிளான்கள்!

பிட்சின் தன்மையை, தன் பௌலர்களை, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் திட்டத்தை மிகச் சிறப்பாகக் கணித்திருந்தார் விராட். அதற்கேற்ப தன் ஃபீல்டர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், ஆரோன் ஃபின்ச்-கு இன்ஸ்விங் வீச முயற்சி செய்தார் இஷாந்த். இந்தத் தொடரில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்சாகி இன்ஸ்விங்கான பந்துகளுக்கு அவர் தடுமாறியதால், அதைத் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால், ஆட்டத்தின் மூன்றாம் நாள் காலை, மெல்போர்ன் ஆடுகளம் ஸ்விங்குக்கு ஒத்துழைக்கவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளை கவர் டிரைவ் மூலம் பௌண்டரி அடித்தார் ஃபின்ச். 11-வது ஓவர்... இஷாந்திடம் பேசிவிட்டு, கவர் ஃபீல்டராக நின்றிருந்த அகர்வாலை, ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நிற்கவைக்கிறார். அதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக்கொண்டிருந்த இஷாந்த், ஸ்டம்ப் லைனில் வீச, அகர்வாலிடம் கேட்சாகி வெளியேறினார் ஃபின்ச். கோலியின் பிளான் கைமேல் பலன் கொடுத்தது.

மயாங்க் அகர்வால் - ஷார்ட் மிட்விக்கெட்டில்...

சிட்னி டெஸ்ட்டில் லாபுசேன் விக்கெட்டை வீழ்த்தியது ஆசம் மாஸ்டர் பிளான்! தொடர்ந்து ஸ்டம்ப் லைனில் பந்துவீசிக்கொண்டிந்தார் முகமது ஷமி. அதுவரை, கோலி, ரஹானே இருவரும் ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நின்றுகொண்டிருந்தனர். சரியாக, நான்காவது பந்துக்கு முன்னால், மிட் ஆன் திசைக்குச் செல்கிறார் கோலி. ரஹானேவை, பெயரே இல்லாத ஒரு ஃபீல்டிங் பொசிஷனில்... ஷார்ட் மிட்விக்கெட்டுக்கு ஸ்கொயராக நிற்கவைக்கிறார். ரஹானே அங்கு நின்ற மறுநொடி, அடுத்த பந்தே அவர் கைகளில் விழுகிறது. விக்கெட்..! இப்படி மிகத் தெளிவாக, தன் ஆடுகளத்தை, பௌலர்களை, ஆஸி பேட்ஸ்மேன்களைக் கணித்து அதற்கேற்ப தன் திட்டங்களை வகுத்தார். 

ரஹானே - ஷார்ட் மிட்விக்கெட்டுக்கு ஸ்கொயரில்...

அந்த இரு விக்கெட்டுகளுக்காக மட்டுமல்ல... தொடர் முழுதுமே ஃபீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தினார் விராட். மெல்போர்ன் போட்டியில், ஆஸ்திரேலிய ஸ்லிப் ஃபீல்டர்கள், வழக்கமான இடத்தைவிடத் தள்ளியே நின்றிருந்தினர். ஆடுகளத்தின் சீரற்ற பௌன்சால், அவர்கள் அப்படி நின்றிருந்தனர். ஆனால், அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. கோலியோ, அதை வேறு விதமாக அணுகினார். இந்திய ஸ்லிப் ஃபீல்டர்கள் வழக்கமான இடத்தைவிட கொஞ்சம் முன்பாகவே நின்றிருந்தினர். ஒவ்வொரு நாளும் அதற்காகத் தனி பயிற்சியும் மேற்கொண்டனர் இந்திய ஃபீல்டர்கள். ஒவ்வொரு தொடரிலும் ஸ்லிப் ஃபீல்டிங்குக்காகவே வசைவாங்கும் இந்திய ஃபீல்டர்கள், ஸ்லிப்பில் பக்காவாக நின்றனர். புஜாரா, ரஹானே, கோலி அனைவரும் ஸ்லிப்பில் ஷார்பாக அசத்தினர். ஃபீல்டிங்கில் இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றார் இந்திய கேப்டன்!

ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்

சமீப காலமாக இந்திய அணியில், ஃபிட்னஸ் ஒரு மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. வீரர்கள் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே அவர்களை அணியில் சேர்க்கிறது நிர்வாகம். ஆனால், தொடர்ந்து வீரர்கள் காயத்தினால் அவதிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா என்று வீரர்கள் காயமடைவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உலகக் கோப்பை வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர்களின் தேவை முக்கியம் என்பதற்காக ``ஐ.பி.எல் தொடரின்போது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை" என்று கேட்டுக்கொண்டிருந்தார் கோலி. அப்போது அதுவும் விமர்சனம் செய்யப்பட்டது. ``இவர் ஓய்வு எடுப்பாரா?" என்று கேள்விகள் எழுப்பினர். ஆனால், கோலி பௌலர்களின் ஃபிட்னசை எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்பதற்கும் இந்தத் தொடர் உதாரணமாக அமைந்தது.

டிம் பெய்ன், தன் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதற்கும் கோலி, தன் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதற்காக, ஒருசில இன்னிங்ஸ்களில் அவரை 7 ஓவர் ஸ்பெல்வரை வீசச் செய்தார் பெய்ன். ஆனால், கோலி அப்படிச் செய்யவில்லை. எந்த வேகப்பந்துவீச்சாளருக்கும் 5 ஓவர்களுக்கு மேல் ஒரு ஸ்பெல்லில் கொடுக்கவில்லை. சில சமயங்களில் 2-3 ஓவர் ஸ்பெல்களே கொடுத்தார். பும்ரா தொடர்ந்து விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருந்தபோதும், 5-வது ஓவர் முடிந்ததும் ஸ்பெல்லை மாற்றிவிடுவார். குறைந்த ஓவர் ஸ்பெல்கள் வீசியதால்தான் அவர்களால் அடுத்தடுத்த ஸ்பெல்களையும் சிறப்பாகப் பந்துவீசமுடிந்தது. மெல்போர்ன் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காததற்கும் கோலி சொன்ன காரணம் ``எங்கள் பௌலர்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்க நினைத்தோம்" என்பதுதான்.

போட்டி வெற்றி, டிரா என எதை நோக்கி நகர்ந்தபோதும், பௌலர்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் விராட். அதனால்தான் இப்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒருநாள் போட்டித் தொடர்களில் பும்ராவுக்கு ஓய்வளித்திருக்கிறது அணி நிர்வாகம். அவர் ஐ.பி.எல் தொடரில் பௌலர்களுக்கு ஓய்வு தரச் சொன்னதும் அதனால்தான். அவர் பௌலர்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்திய கேப்டன்! 

முடிவுகள் சரியா, தவறா?

பெரும்பாலும் கோலி எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. கேப் டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ரஹானேவுக்குப் பதில் ரோஹித்தைக் களமிறக்கினார். இங்கிலாந்தில் புஜாராவை வெளியே அமர்த்தினார். மிகவும் மோசமான முடிவுகள். இந்தியாவைத் தோல்விக்கு வித்திட்ட முடிவுகள். ஆனால், பெர்த் போட்டியில், உமேஷ் யாதவுடன் களமிறங்கிய முடிவையும் கேப் டவுன் முடிவையும் எப்படி ஒப்பிட முடியும்? பெர்த்தில் செய்ததை விராட், ஜோகன்னஸ்பெர்க் போட்டியிலும் செய்தார். ஹர்டிக் உட்பட 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார். அந்தப் போட்டியில் வெற்றி கிடைத்தது. பெர்த்தில் கிடைக்கவில்லை. போட்டியின் முடிவுதான், அவரது முடிவை இங்கு தவறு என்று சொல்லவைக்கிறது. அது சரியான போக்கல்ல. 

பெர்த் போட்டியின் முதல் நாள், 451 பந்துகளை வீசியிருந்தார்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள். அதில் 14 பந்துகள் மட்டுமே துல்லியமாக ஸ்டம்பை பதம் பார்க்கும் லைனில் வீசப்பட்டிருந்தன. அதாவது வெறும் 3%. மிகச் சிறப்பாகப் பந்துவீசிய அந்த ஆண்டில், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சறுக்கிய ஒரு போட்டி. அது கோலி எதிர்பாராத ஒன்று. ஆனால், அங்கு அவர் எடுத்த முடிவு - ஜோகன்னஸ்பெர்க் போல் அங்கும் ஜெயிக்க முடியும் என்பதுதான். அதனால்தான், ``அஷ்வின் ஃபிட்டாக இருந்திருந்தாலும் நாங்கள் 4 பௌலரோடு விளையாடியிருக்க வாய்ப்புண்டு" என்றார். அந்த இடத்தில் வேறு மாதிரியான பதில் சொல்லி சமாளித்திருக்கலாம். ஆனால், தன் முடிவை, நேர்மையாக வெளிப்படுத்தினார். உண்மையில் அதுதான் அவரது பலம். 

மெல்போர்ன் போட்டியில், அவர் பேட்டிங் தேர்வு செய்தபோது ``இது தவறான முடிவு. இந்த பிட்சில் யாராவது முதலில் பேட்டிங் செய்வார்களா?" என்று ஆலன் பார்டர் முதல் ஷேன் வார்ன் வரை கேள்வி எழுப்பினர். ஆனால், கோலி தீர்க்கமாக இருந்தார். 400 என்ற ஒரேயோர் இலக்கை மட்டும் நிர்ணயித்துக் களமிறங்கியது இந்தியா. புஜாராவின் மெதுவான ஆட்டத்தை முன்பெல்லாம் விமர்சிப்பார் கோலி. ஆனால், இப்போது அதைத்தான் ஆயுதமாக நம்பினார். எத்தனை ஓவர்கள் ஆடினாலும், 400 என்ற ஸ்கோர் மனதளவில் தங்களை ஜெயிக்கவைக்கும் என்று நம்பினார். அதனால்தான், முதல் இன்னிங்ஸில் தான் அவுட்டாவதற்கு சில ஓவர்கள் முன்புவரை... முதுகுவலி ஏற்படும்வரை புஜாராவைவிட மெதுவாக விளையாடினார். மிகவும் தாமதமாக டிக்ளேர் செய்தார்.

ஃபாலோ ஆன் கொடுக்காமல், இந்தியாவைக் களமிறக்கினார். கோலி - தன் முடிவுகளில் அவ்வளவு தீர்க்கம். அதே முடிவுகள் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டால் தவறுதான். ஆனால், அந்த விஷயத்தில் கோலி அப்படி நடந்துகொள்வதில்லை. 3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடியும் தருவாயில், ரஹானேவிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் ஆல் அவுட் ஆனதும், அவரிடம் பேசிக்கொண்டுதான் பெவிலியன் திரும்பினார். தான் நினைத்த முடிவு என்பதைவிட, ஒவ்வொன்றையும் அணிக்குத் தேவையான முடிவு என்று கருதியே எடுக்கிறார். 

அதேசமயம், அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே சரி என்று சொல்வதற்கில்லை. இன்னும் சில தவறான முடிவுகள் எடுக்கிறார். ஐந்தாவது பௌலிங் ஆப்ஷன் பற்றி யோசிப்பதில்லை. லிமிடட் ஓவர் போட்டிகளில், ஆறாவது பௌலிங் ஆப்ஷன் இல்லாமலேயே களமிறங்குகிறார். 4-வது வீரர் ஸ்லாட்டுக்குச் சரியான ஆளைப் பயன்படுத்துவதில்லை. இந்த விஷயத்தில் கோலி இன்னும் கொஞ்சம் மாறவேண்டும். ஆனால், இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் - மோசமான முடிவுகள் எடுத்தவர், இப்போது தவறான முடிவுகள் எடுக்கிறார். அந்த வார்த்தைப் பிரயோகம், கோலியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைத் தெளிவாகச் சொல்லும். 

``ஆஸ்திரேலியாவில் தன் முதல் போட்டியை வழிநடத்திய கோலிக்கும், இப்போது இருக்கும் கேப்டன் கோலிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர் நன்றாக மாறியிருக்கிறார். தன் தவறுகளை மாற்றிக்கொண்டுள்ளார்" என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். நிச்சயமான உண்மை. கோலி, இந்திய அணிக்குள் வந்தபோது ஒரு திறமையான இளம் பேட்ஸ்மேன் மட்டும்தான். டெக்னிக்கலாக நிறைய பலவீனங்கள் இருந்தன. ஆனால், இந்த 10 ஆண்டுகளில் தன்னை உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்டார். கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரையிலுமே சுமாரான கேப்டனாக இருந்தவர், இப்போது அதிலும் மேம்பட்டிருக்கிறார். டெக்னிக்கலாக, தன்னைச் சிறந்த கேப்டனாக உருமாற்றிக் கொண்டிருக்கிறார் விராட். இன்னும் சில தொடர்களில், தன் சொச்ச தவறுகளையும் அவர் திருத்திக்கொண்டால், அற்புதங்கள் பல படைக்கலாம். 

வீரர்களை அதற்றும், அரவணைக்கும், வழிநடத்தும், வார்த்தெடுக்கும் எத்தனையோ விதமான கேப்டன்களைக் கண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட். ஆனால், முதன்முறையாக தன் வீரர்களுக்கு மைதானத்துக்குள்ளேயே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள்முன், கோடிக்கணக்கான கேமராக் கண்களுக்கு முன் தலைவணங்கும் ஒரு கேப்டனை இப்போதுதான் இந்திய அணி பெற்றிருக்கிறது. பும்ரா, சர்ஃபராஸ் கான் என யாரையுமே நெஞ்சாரப் பாராட்டுகிறார்.

களத்தில் வீரர்களிடம் சிலமுறை கத்தினாலும், அடுத்து அவர்களிடம் ஜாலியாக விளையாடுகிறார். 10 டெஸ்ட் போட்டிகள் கூட விளையாடாத ரிசப் பன்ட், தன்னைவிட சுமார் 10 வயது மூத்த ஜடேஜாவை `கமான் ஜட்டு’ என்கிறார். புஜாராவைக் கலாய்த்து டான்ஸ் ஆடுகிறார். அவரோடு கோலியும் சேர்ந்து ஆடுகிறார். அந்த டிரஸ்ஸிங் ரூமில் அவருக்கு எல்லாச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து, ``இப்படி ஒரு டிரஸ்ஸிங் ரூம் கலாசாரமெல்லாம் இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிது" என்று கவாஸ்கரே வியக்கிறார். கோலி வேறு விதமான இந்திய கிரிக்கெட்டைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேப்டன்சியில் இப்போது தெரியும் இந்த மாற்றம், இந்திய கிரிக்கெட்டை மாபெரும் சக்தியாக நிச்சயம் மாற்றப்போகிறது!

அடுத்த கட்டுரைக்கு