Published:Updated:

`வழிகாட்டும் ஒளி அவர்!’ - தோனி குறித்து ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி

`வழிகாட்டும் ஒளி அவர்!’ - தோனி குறித்து ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி
`வழிகாட்டும் ஒளி அவர்!’ - தோனி குறித்து ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி

மகேந்திரசிங் தோனி, இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளிபோன்று இருப்பவர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியிருக்கிறார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்று ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்தது. இதையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சிட்னியில் வரும் 12-ம் தேதி நடக்கிறது. 

போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தோனியின் இருப்பு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், ``விக்கெட் கீப்பரான அவர் கேப்டனுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறார். இந்திய அணியில் தோனி இடம்பெற்றிருப்பது எல்லாவகையிலும் உதவக் கூடியது. வீரர்கள் மத்தியில் சிறந்த வழிகாட்டியாக அவர் இருப்பார். அதேபோல், பேட்டிங்கிலும் அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இறுதி ஓவர்களில் அவரது பேட்டிங் பங்களிப்பு அணிக்குத் தேவையானது. எங்களுக்காக அவர் பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். அவரது இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஃபீல்டிங்கின்போது கேப்டனுக்கு அவர் பல்வேறு வகையிலும் உதவக் கூடியவர். இந்திய அணியின் கேப்டனாக பல வருடங்கள் செயல்பட்ட அவர், கேப்டன் பதவியைத் துறந்த பின்னர் அணிக்காக முக்கியமான பங்களிப்பை அளித்து வருகிறார்’’ என்று கூறியிருக்கிறார். 

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வரலாற்று வெற்றி பெற்றது. அதேபோல், ஆசியக் கோப்பையை வென்றது மற்றும் வெஸ்ட் அணிக்கெதிரான தொடரையும் சொந்த மண்ணில் வென்றது. ஆனால், 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி, 275 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், தோனியின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.