Published:Updated:

`யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை!’ - மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்ட்யா

`யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை!’ - மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்ட்யா
`யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை!’ - மன்னிப்பு கேட்ட ஹர்திக் பாண்ட்யா

தனியார் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள் குறித்துப் பேசிய கருத்துகளுக்காக இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மன்னிப்புக் கோரியிருக்கிறார். 

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில், விராட் கோலி குறித்துப் பேசிய கே.எல்.ராகுல், `என்னைப் பொறுத்தவரை விராட் கோலி கொஞ்சம் அமைதியாக வேண்டும். நான் அவரிடம் அடிக்கடி சொல்வதுண்டு, அவர் விடுமுறை மோடுக்குச் சென்றதே இல்லை. விராட் எப்பொழுதும் வேலை வேலை வேலை என்ற மோடிலேயே இருக்கிறார். இதையே அவர் விரும்புகிறார்’ என்றார். சச்சினைவிட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவருமே கருத்து தெரிவித்திருந்தனர். 


மேலும், அந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் இனவெறி குறித்து பாண்ட்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாண்ட்யா, ``காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியின் இயல்பை கருத்தில் கொண்டே நான் பேசினேன். எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை’’ என்று பதிவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற்றிருக்கிறார். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி, சிட்னியில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.