Published:Updated:

ஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND

ஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND
News
ஓர் இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்... #AUSvIND

இது மிகப்பெரிய வெற்றி என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இதை சாதனையாக நினைக்கவேண்டிய தேவையும் இல்லை. இந்த இந்திய அணிதான் சிறந்த அணி என்ற முடிவுக்கும் வரவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் செய்திருப்பது, 72 ஆண்டுகளில் எந்த அணியும் செய்யாத விஷயம். கடந்த 15 ஆண்டுகளில், நம் தலைமுறை ஏங்கிக்கொண்டிருந்த விஷயம். இந்த அணி ஒரு தலைமுறை கண்ட கனவை நிறைவேற்றிவிட்டது.

பார்டர்  - கவாஸ்கர் கோப்பையோடு இந்திய அணி உற்சாகமாக நிற்க, மயாங்க் அகர்வால் கோப்பையை உயர்த்திப் பிடித்த அந்த நொடி... ரோமங்கள் மொத்தமும் சிலிர்த்துப் போயிருந்தது. வெறும் வெற்றிக்கொண்டாட்டத்துக்கான தருணம் மட்டுமா அது? இல்லை, அது கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவுத் தருணம். `கனவிலும் நடந்துவிடாதா' என்று ஏங்கிய தருணம். சிட்னியில் பெய்த மழைத்துளிகளின் ஊடே அந்தக் கனவுகளின் பிம்பம் இன்று உயிர்பெற்றுவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றிருக்கிறது... ஒரு தலைமுறையின் ஏக்கம் நிறைவேறியிருக்கிறது!

கங்குலி, கும்பிளே, தோனி, கோலி என அனைவரின் தலைமையிலும் அந்தக் கோப்பையை வென்றிருக்கிறது இந்தியா. ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய அணிகளை வென்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் இருந்ததைவிட இப்போது அளவுகடந்த கொண்டாட்டம். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாத அணியை, டிம் பெய்ன் தலைமை தாங்கிய ஓர் சுமாரான அணியை வென்றதில் இவ்வளவு கொண்டாட்டம். அதற்கு ஒரே காரணம்... இந்தியா கோப்பையைத் தூக்கிப் பிடித்த இடம். 72 ஆண்டுகள் சொப்பனமாக விளங்கிய கங்காரு தேசத்தில், உரக்கக் கர்ஜித்துள்ளன இந்தியப் புலிகள்! ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் நெடுநாள் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது கோலி அண்ட் கோ!

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பது என்பது தனி அனுபவம். காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, தொலைக்காட்சியின் முன் அமர்ந்தால்... அந்த ஆடுகளத்தை லாங் ஷாட்டில் காட்டும் காட்சியே அவ்வளவு அழகாக இருக்கும். மிகப்பெரிய மைதானத்தில், பச்சைப் புற்கள் நிறைந்திருக்க, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கும் அந்த ரசிகர்களின் ஆரவாரம் - உலகக் கோப்பைப் போட்டிகளையே மிஞ்சும். பல் துலக்குதல், இஸ்திரி செய்வது, உடை மாற்றுவது, காலை உணவு எல்லாமே டி.வி-யின் முன்புதான். ஷூவுக்கு சாக்ஸ் மாட்டுவதுகூட. டெஸ்ட் போட்டிதான்... ஆனால், ஒவ்வொரு பந்தையும் பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறி அடங்காது. ஆனால், இத்தனை ஆர்வமாகப் பார்த்ததெல்லாம் எதை? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய வீரர்கள் சதங்கள் அடித்துக் குவித்ததையா? ஆஸி பேட்ஸ்மேன்களை, இந்திய பௌலர்கள் பந்தாடியதையா? இல்லை! மெக்ராத், டேமியன் ஃபிளமிங் வீசும் ஸ்விங்கும் வேகமும் கலந்த முதல் ஸ்பெல்லில், இந்திய டாப் ஆர்டர் ஆட்டம் காணுவதை, தொடரின் கடைசிப் போட்டியில் யாரை ஓப்பனராக இறக்குவதெனத் தெரியாமல், லட்சுமண், எம்.எஸ்.கே. பிரசாத் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் இறங்கித் திணறியதை, சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமண் அடங்கிய `Fatal 4' பௌன்சருக்கும், யார்க்கருக்கும் தடுமாறியதை, வாஹ் சகோதரர்களின் சதங்களை, பாண்டிங்கின் இரட்டைச் சதங்களை... அந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் கம்பீரமாக ஆடிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை. 

காலையில் அத்தனை அலப்பறைகள் செய்துவிட்டுப் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். உணவு இடைவேளை வரை அந்தக் காலை செஷன் பற்றிய விவாதமாகத்தான் இருக்கும். `பௌன்ஸ் பயங்கரமா இருந்துச்சுல' என்று ஆச்சர்யத்தைப் பகிர்ந்துகொள்வோம். பௌன்சர், ஷார்ட் லென்த் பால், பாடி லைன் அட்டாக் போன்ற பல விஷயங்களை அப்போதுதான் கற்றுக்கொண்டோம். `ஸ்லெட்ஜிங்' என்ற அதிபயங்கர ஆயுதம் அறிமுகம் ஆனதும் அப்போதுதான். மற்ற தொடர்களைக் காட்டிலும், அந்த ஆஸ்திரேலிய தொடர் எப்போதுமே வேறு ஒரு தளத்தில்தான் இருந்தது. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதிலிருந்தே ஒரு வகையான பயம் தொற்றிக்கொள்ளும். செய்தித்தாள்களை எடுத்துப் பார்த்தால், `ஆஸ்திரேலியா, இந்தியாவை வைட்வாஷ் செய்யும்' என்று அந்த அணியின் முன்னாள் வீரர்கள் நம்பிக்கையும் கர்வமும் கலந்து சொன்ன கட்டுரைகள்தான் விளையாட்டுப் பக்கத்தின் தலைப்புச் செய்தியாக இருக்கும். சில ஆஸி சீனியர்கள் மட்டும் கொஞ்சம் தயவு பார்த்து 3-0, 3-1 என ஆருடம் சொல்வார்கள். ஆனால், இந்திய முன்னாள் வீரர்களிடம் அப்படியான பேட்டிகள் இருக்காது. `இந்தியா பெரும் சவாலாக இருக்கும்' என்று ஒன்றுபோல் முடித்துக்கொள்வார்கள். இந்தியாவும் அதற்கு ஏற்றார்போல், பயிற்சிப் போட்டியில் குயின்ஸ்லாந்து, போர்டு பிரசிடென்ட் அணிகளையெல்லாம் 400, 500 ரன்கள் அடிக்கவிடும். `அடிலெய்டில் ஆஸி அமர்க்களம்', `சிட்னியில் இந்தியா சட்னி' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலைப்புகளுக்குக் காரணமாக இருந்ததும் இந்தத் தொடர்தானே! இத்தனையும் பார்த்து உடைந்துபோன பிறகும், `ஏதோ ஒரு அதிசயம் நடந்துவிடாதா' என்ற ஆசையோடு, அதை விடாமல் பார்ப்போம். 

2001-ம் ஆண்டு ஈடனில் அந்த ஆகச்சிறந்த அதிசயம் நடந்தபிறகு, நம்பிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, கங்குலியின் தலைமையில், பிரிஸ்பேனில் கொஞ்சம் கெத்துக் காட்டி, அடிலெய்டில் ஆஸிக்கு இந்தியா வைத்த அந்த அடி... பாண்டிங்கின் கையில் இருந்த உலகக் கோப்பையைப் பிடுங்கியதுபோல் இருந்தது. அதைவிடப் பேரானந்தம் அப்போது எதுவுமே இருந்திருக்காது. அதுவும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் காலை, டிராவிட் வைத்த ஒவ்வொரு ஸ்ட்ரோக்குக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அலறியதெல்லாம்... வாழ்நாளுக்கான நினைவு. 

கடைசி 20 ஆண்டுகளில் இந்தியா அப்படி விளையாடியதில்லை. அந்தத் தொடரை நாம் வென்றிருக்கவேண்டும். ஆனால், கைநழுவிவிட்டது. `ஸ்டீவ் வெற்றியோடு விடைபெறவில்லை. இந்தியா அந்தப் பெருமையை அவருக்கு வழங்கவில்லை' என்று மார்தட்டினார்கள் சில ரசிகர்கள். ஆனால், தன் கடைசிப் போட்டியில், இந்தியாவின் வரலாற்று வெற்றியைத் தடுத்துச் சென்றார் அந்த மகத்தான வீரர். இந்தியாவின் அந்தச் செயல்பாடு, இந்த 15 ஆண்டுக்கால கனவுக்கான விதை. `இந்தியா இனி ஆஸ்திரேலியாவில் கம்பீரமாக விளையாடும்' என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த தொடர்கள்... 

இலங்கை, நியூசிலாந்து அணிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவாலாக மாறியது. உலகின் முதல் டி-20 சாம்பியன் ஆனது, நம்பர் 1 டெஸ்ட் அணியானது, உலக சாம்பியன் ஆனது, சாம்பியன்ஸ் டிராபி வென்றது, இந்திய மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. ஆனால்... ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் தடுமாறியது. 2007/08 தொடரில் ஸ்டீவ் பக்னர் தோண்டிய குழியில், அடுத்தமுறை தாங்களாக விழுந்து, குழியை மூடியும் கொண்டார்கள் இந்திய வீரர்கள். வைட் வாஷ். அன்று அடிலெய்ட் ரசிகர்களை அலறவிட்ட டிராவிட்டின் கால்களை உரசி, ஸ்டம்புகளைப் பதம் பார்த்தன பந்துகள். இந்தியாவின் பெருஞ்சுவர் மொத்தமாகச் சரிந்ததைப் பார்த்ததெல்லாம், இந்திய கிரிக்கெட் ரசிகனின் சாபக்கேடு. அதுவரை `ஆஸ்திரேலியானாலே அடிப்பேன்' மோடில் இருந்த லட்சுமண், திணறுகிறார்... கிரிக்கெட்டின் கடவுளும் தடுமாறுகிறார். 

புத்தகப் பைகளோடு கவலையையும் சுமந்துகொண்டே சென்றோம். அதுவரை கிரிக்கெட்டால் நிரம்பி வழிந்த வகுப்புகளில், கிரிக்கெட் வாசமே இல்லாமல் இருந்தது. சச்சின், டிராவிட், கோலி, தோனி என எந்த வீரரின் ரசிகர்களும் கிரிக்கெட் பற்றிப் பேசவில்லை. யாராலும் பேச முடியவில்லை. அவ்வளவு கனம். அந்த கிரிக்கெட்டால், எதுவுமே வந்துவிடப்போவதில்லைதான். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 10 ஆண்டுக்கால நம்பிக்கை மொத்தமாக உடைந்தது. அவமானம், கேட்காமல் வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டது. செய்தித்தாள்களின் கடைசிப் பக்கத்தைத் திருப்ப பயமாக இருந்தது. அதுவரை கத்தரிக்கோலால் வெட்டுப்பட்டுக்கொண்டிருந்த ஆங்கிலத் தாள்களின் கடைசிப் பக்கங்கள், முழுதாக அலமாரியை அடைந்திருந்தன. டிராவிட் ஸ்டம்புகள் சிதறி போல்டாகும் படத்தையும், மைக்கேல் கிளார்க் முச்சதம் அடித்ததைக் கொண்டாடும் படத்தையும் எப்படிப் பார்ப்பது? எப்படிச் சேகரிப்பது? பெர்த், சிட்னி, மெல்போர்ன், அடிலெய்ட் - இந்த நகரங்கள், நரகங்களாகத் தெரிந்தன. அந்த ஆடுகளங்கள் கிரிக்கெட்டை வெறுக்கச் செய்தன. சிறுவயதுக் கனவுகளை உடைக்கும் இடத்தை யாருக்குத்தான் பிடிக்கும்?

வருடங்கள் உருண்டன... பள்ளிக் கல்லூரியாகியிருந்தது. செய்தித்தாள் செல்போன் ஆகியிருந்தது. ஆனால், அந்தத் தாகம் அப்படியே இருந்தது. ஸ்டீவ் வாஹ் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித், மெக்ராத் இடத்தில் ஸ்டார்க், சச்சின் இடத்தில் கோலி, டிராவிட் இடத்தில் புஜாரா... ஆஸ்திரேலியா இன்னும் அப்படியே இருந்தது. இந்தியாவும் ஓரளவு அப்படியே. ஆடுகளங்களும் அப்படியே இருந்தன. எதுவுமே மாறவில்லை. 2014/15 தொடரின் முடிவும் மாறவில்லை. மீண்டும் தோல்வி. இம்முறை ஃபிலிப் ஹியூஸ் மரணத்துக்கு மரியாதை செலுத்திய வார்னர், ஸ்டீவ் ஸ்மித் படங்கள், கோலி ஒருபுறம் போராட, மற்றவர்கள் டாடா காட்டி வெளியேறிய வீடியோக்கள். ஆஸ்திரேலியா கனவாகவே தொடர்ந்தது. ... 

தொடக்கப்பள்ளியில் கண்ட கனவு மேல்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்தது. கல்லூரிக்குள் நுழைந்தபோதும் அது நிறைவேறவில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்க, மாணவப் பருவம் முடிந்து, அலுவலக வாழ்க்கை தொடங்கிவிட்டது. மகளிர் கிரிக்கெட் முன்னேற்றம் கண்டுவிட்டது, ரோஹித் ஷர்மா சிலபல இரட்டைச் சதங்கள் அடித்துவிட்டார், சி.எஸ்.கே தடைசெய்யப்பட்டு, கம்பேக் கொடுத்து, மீண்டும் கோப்பை வென்றுவிட்டது, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுவிட்டது, பாண்டிச்சேரி ரஞ்சிக் கோப்பையில் ஆடத் தொடங்கிவிட்டது. இருந்தும், அந்த ஏக்கம் மட்டும் மாறாமலேயே இருந்தது. ஆனால், கோலி ஆண்ட் கோ அந்த 15 ஆண்டு கனவுக்கு உயிர் கொடுத்துவிட்டது. 

`ஸ்மித், வார்னர் இல்லை. ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே இது மோசமான அணி. இதை வென்றது பெரிய விஷயம் இல்லை" என்கிறார்கள் சிலர். இது மிகப்பெரிய வெற்றி என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இதைச் சாதனையாக நினைக்கவேண்டிய தேவையும் இல்லை. இந்த இந்திய அணிதான் சிறந்த அணி என்ற முடிவுக்கும் வரவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் செய்திருப்பது, 72 ஆண்டுகளில் எந்த அணியும் செய்யாத விஷயம். கடந்த 15 ஆண்டுகளில், நம் தலைமுறை ஏங்கிக்கொண்டிருந்த விஷயம். இந்த அணி ஒரு தலைமுறை கண்ட கனவை நிறைவேற்றிவிட்டது. ஆஸ்திரேலியக் கொடி பறக்கும் மிகப்பெரிய மைதானத்தில், பச்சை ஆடுகளத்துக்கு மத்தியில்... 10 மணிக்கு அலுவலகத்துக்குள் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு, கோப்பையை உயர்த்திப்பிடித்துவிட்டது இந்திய அணி. 

அதே 5 மணி அலாரம். மீண்டும், தொலைக்காட்சியின் முன் பல் துலக்கி, துணி தேய்த்து, சாப்பிட்டு, உடை மாற்றி, சிக்னலில் நின்று ஸ்கோர் பார்த்து... அதேதான். ஆனால், இப்போது பார்த்ததெல்லாம், பும்ராவின் வேகத்துக்குத் தடுமாறிய ஆஸி டாப் ஆர்டர், புஜாராவின் நேர்த்திக்கு முன் அடிபணிந்த ஆஸி வேகங்கள், என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய ஆஸ்திரேலிய வீரர்கள், தொடர் முடியும் முன்னே தோல்வியை ஒப்புக்கொண்ட கங்காருக்களின் கேப்டன், தேநீர் இடைவேளையில் ஆஸி வீரர்களைக் குறை சொன்ன முன்னாள் ஆஸி கேப்டனின் கமென்ட்ரி, ஆஸ்திரேலிய போர்டிலிருந்து வீரர்கள் வரை அனைவரையும் திட்டிய முன்னாள் வீரர்களின் பேட்டிகள்... இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்..?!