Published:Updated:

``உலகக் கோப்பையை ஜெயிச்சப்ப புரியல; இப்போ புரியிது”- கேப்டன் கோலி நெகிழ்ச்சி

``உலகக் கோப்பையை ஜெயிச்சப்ப புரியல; இப்போ புரியிது”- கேப்டன் கோலி நெகிழ்ச்சி
``உலகக் கோப்பையை ஜெயிச்சப்ப புரியல; இப்போ புரியிது”- கேப்டன் கோலி நெகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவில், 72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது, கோலி படை. 

தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது பாராட்டு மழையில் நனைந்துவருகிறது. 4-வது போட்டியின் 5-வது நாள் ஆட்டம், மழை காரணமாக முழுமையாகத் தடைப்பட, ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன்பின் நடைபெற்ற கோப்பை வழங்குதல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் கோலி, `தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் தற்போது மிகப்பெரிய சாதனை' என்றார். 

மேலும் அவர்,  ``இதைவிட எனது அணியை நினைத்து பெருமைப்படுவதற்கு வேறு தருணம் இல்லை என நினைக்கிறேன். எனது வீரர்களை வழிநடத்துவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்கள், எனக்கு வெற்றியை பெற்றுத்தருகிறார்கள். இது, நிச்சயமாக கொண்டாடுவதற்கான தருணம்தான். இதுநாள் வரையிலான எனது கிரிக்கெட் வாழ்க்கையில், இது மிகப்பெரிய சாதனை எனக் கருதுகிறேன். 

உலகக்கோப்பை வென்ற அணியிலும் நான் இருந்தேன். அந்த அணியில் இருந்த இளம்வீரர் நான். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்று மூத்த வீரர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், அந்த இடத்தில் என்னால் அவர்களின் எமோஷனலான உணர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், மூன்று முறை நான் ஆஸ்திரேலியா வந்து, இப்போது தொடரை வெல்லும்போது... என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

இந்தத் தொடர் வெற்றி, இந்திய அணிக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது. புஜாரா குறித்து இந்த இடத்தில் நான் சொல்லியே ஆக வேண்டும். சவால்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய வீரர் அவர். கடந்த முறை இங்கு கிடைத்த மோசமான அனுபவத்தை ஏற்றுக்கொண்டு தற்போது சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பன்ட் மற்றும் மயங்க் அகர்வால் குறித்தும் குறிப்பிட வேண்டும். முதல் முறையாக ஆஸ்திரேலியா வந்து, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அவர்கள் எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்களையும் பாராட்டியாக வேண்டும். கடந்த இரண்டு மூன்று தொடர்களாக அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி, அந்நிய மண்ணில் 4 பந்துவீச்சாளர்களுடன் இறங்கி வெற்றிபெறுவது என்பது முன்னர் அதிகம் பார்த்திராதது. அணியில், இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். அணியின் சராசரி வயது குறைவாக உள்ளது. இது நல்ல விஷயம். 

நாம், நமது அணியின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா தொடரில் அணி சரியான பாதையில் செல்வதாக நம்பினோம். இங்கிலாந்திலும் நம்பினோம். இப்போது, பாசிட்டிவ் முடிவுகள் கிடைக்கிறது. நமது எண்ணமும் செயல்பாடும் நேர்மையாக இருந்தால், எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். 

ஆஸ்திரேலியா, சவாலான அணி என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் அணியிலும் சில மாற்றங்கள் நடைபெற்றுவருகிறது. அவர்கள் மீண்டும் பலம் வாய்ந்த அணியாக வருவார்கள். தினமும் அதிக அளவில் ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து, வெளிநாட்டில் விளையாடுவது போல இல்லாத உணர்வை அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர். அதற்கு மிகப்பெரிய நன்றி” என்றார்.