Published:Updated:

`பன்ட் ரசிகர்கள்தான் காரணம்!’- குஷியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னின் மனைவி

`பன்ட் ரசிகர்கள்தான் காரணம்!’- குஷியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னின் மனைவி
`பன்ட் ரசிகர்கள்தான் காரணம்!’- குஷியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்னின் மனைவி

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் என்னும் விளையாட்டைத் தாண்டி நடக்கும் ஜாலியான ஸ்லெட்ஜிங் மற்றும் அதற்கான பதிலடி என பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக மெல்போர்ன் மைதானத்தில் நடந்த பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் பன்ட் ஆகியோர் மோதிக்கொண்டது, ஆஸ்திரேலிய பிரதமர் கேட்கும் அளவுக்கு வைரல் ஆனது. 

ஆம், மெல்போர்ன் மைதானத்தில் பன்ட் பேட் செய்யும்போது பெய்ன்,  ``இந்திய அணியின் தற்காலிக கீப்பர். சின்னப் பையன். நான் என் மனைவியுடன் வெளியே செல்லும்போது என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டிங் பணியை செய்வியா” என தொடர்ந்து வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். அதன் பின்னர் பெய்ன் பேட்டிங் செய்ய வந்தபோது பன்ட் தக்க பதிலடி கொடுத்தார்.  ``தற்காலிக கேப்டன் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இதோ நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” எனச் சொல்ல இவர்களுக்குள் நடந்த காரசாரமான விவாதம் பெரும் வைரல் ஆனது. 

இதற்கிடையில் பெய்னின் மனைவி போனி பெய்ன், தன் குழந்தைகளுடன் பன்ட் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து  `பெஸ்ட் பேபி சிட்டர்’ எனப் பதிவு செய்ய, அது வேற லெவல் வைரல் ஆனது. `இதுதான் ஆரோக்கியமான கிரிக்கெட்' என  ரிஷப் பன்ட்டுக்கு லைக்ஸ் குவிந்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியிலும் இந்திய ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் பன்ட்-ஐ பார்த்து, `நீங்கள் தானே போட்டியில் வம்பிழுத்தீர்கள்' எனக் கேட்கும் அளவுக்கு இந்தத் தொடரில் நடக்கும் ஜாலி ஸ்லெட்ஜிங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.


 

இந்த நிலையில், தன் புகைப்படம் வைரலான பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளதாகப் போனி பெய்ன் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படத்துக்கு முன் இன்ஸ்டாகிராமில் அவரை 5,000  பேர் பின் தொடர்ந்த நிலையில் தற்போது அது 35,600 பேர் பின் தொடர்கிறார்கள்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒருவர் கேள்வி கேட்க, அதற்குப் பதிலளித்த போனி பெய்ன்,  ``ஆம். அதற்கு  `பன்ட்’ ரசிகர்கள்தான் காரணம் என நினைக்கிறேன்” என்றார் குஷியாக...