Published:Updated:

சச்சின் டெண்டுல்கரின் ஆசான் ரமாகாந்த் அச்ரேகர் மரணம்!

சச்சின் டெண்டுல்கரின் ஆசான் ரமாகாந்த் அச்ரேகர் மரணம்!
சச்சின் டெண்டுல்கரின் ஆசான் ரமாகாந்த் அச்ரேகர் மரணம்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆசான் ரமாகாந்த் அச்ரேகர், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

Photo: Twitter/tushnemma

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்டவர். இவர், பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கு முக்கியக் காரணம், அவரின் இளம்வயது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர். சிறுவயது சச்சினுக்கு அச்ரேகர் அளித்த பயிற்சிதான், அவர் பல்வேறு உச்சங்களைத் தொட காரணமாக அமைந்தது. இதைப் பல்வேறு மேடைகளில் சச்சினும் கூறியுள்ளார். இந்நிலையில், பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகருக்கு வயது 86. வயது மூப்பின் காரணமாகக் கடந்த சில நாள்களாகவே சிகிச்சைபெற்றுவந்த அவர், இன்று மாலை மும்பையில்  காலமானார். இந்தத் தகவலை அவரின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

Photo: Twitter/tushnemma

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யார் விருதை 1990-ம் ஆண்டு பெற்றார், அச்ரேகர். இதேபோல, பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சச்சின் மட்டுமல்லாமல், வினோத் காம்ப்ளி, பிரவின் அம்ரே, சமீர் டிகே மற்றும் பால்விந்தர் சிங் சந்து போன்ற சிறந்த வீரர்களையும் உருவாக்கியுள்ளார். 

Photo: Twitter/tushnemma

சச்சின் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், ஜூனியர் டீமில் விளையாடிக்கொண்டிருந்தார். ராமகாந்த், பயிற்சி ஆட்டம் ஒன்றை அவருக்கு  ஏற்பாடுசெய்திருந்தார். ஆனால் சச்சின் அதற்குச் செல்லாமல், சீனியர் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளைக் கைதட்டி கண்டுகழித்தார். ராம்காந்த், ''பயிற்சி ஆட்டத்துக்குச் சென்றாயா?'' என சச்சினிடம் கேட்க, ''இல்லை, நம் சீனியர் அணிகளின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தேன்'' என்றார் சச்சின். ராம்காந்த் மிகவும் கோபமாக, ''மற்றவர்களின் ஆட்டத்துக்குக் கைதட்டுவதை நிறுத்திவிட்டு, நீ கைதட்டல் வாங்கும்படி ஏதாவது செய்'' என்றார். இன்றும் சச்சினுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும் கைதட்டல்களுக்கெல்லாம் முதல் விதை, ராம்காந்த் போட்டதுதான்!