Published:Updated:

`இவர்தான் உண்மையான ஹீரோ' - ஆப்கன் வீரர் ரஷீத் கானை கொண்டாடும் ரசிகர்கள்!

`இவர்தான் உண்மையான ஹீரோ' - ஆப்கன் வீரர் ரஷீத் கானை கொண்டாடும் ரசிகர்கள்!
`இவர்தான் உண்மையான ஹீரோ' - ஆப்கன் வீரர் ரஷீத் கானை கொண்டாடும் ரசிகர்கள்!

தந்தை இறந்த துக்கத்திலும் கிரிக்கெட் விளையாடிய ஆப்கன் இளம் வீரர் ரஷீத் கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

photo credit: @StrikersBBL

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்துவீச்சாளர் ரஷீத் கான். இன்றைய தேதியில் கிரிக்கெட் உலகில், எதிரணிகளை மிரட்டும் வகையில் பந்துவீசும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னராக அறியப்படுகிறார். மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமைகளை தட்டிச் சென்றுள்ளார். தற்போது ரஷீத் கான் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் ரஷித் கான் அடிலெய்ட் ஸ்டிரைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் ரஷீத் கானின் தந்தை மரணமடைந்தார். 

இந்தச் செய்தியை மிக உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், ``நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்து விட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் எனத் தெரிந்து விட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை மிஸ் செய்கிறேன்" என்று கூறியிருந்தார். தொடர்ந்து தன் தந்தையின் இறுதிச்சடங்குக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு செல்லாமல் நேற்றைய டி20 போட்டியில் விளையாடி தன் தந்தைக்கு மரியாதை செலுத்தினார். 

photo credit: @StrikersBBL

தனது கனவுக்கு உறுதுணையாக இருந்த தந்தையின் செயலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்றைய போட்டியில் பங்கேற்றார். சிறப்பாகச் செயல்பட்ட அவர் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். முன்னதாக அடிலெய்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் ரஷீத் 9வது ஓவரை வீச வந்தார். அப்போது மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி அவரை வரவேற்றதுடன், அந்த ஓவர் முடியும் வரை அவருக்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

photo credit: @StrikersBBL

இதேபோல் வலைதளங்களிலும் ஆஸ்திரேலிய ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ``தந்தை இறந்த பின்பும் அவரின் கனவுக்காக தான் சார்ந்த அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர்தான் உண்மையான ஹீரோ" ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர். இதேபோல்  அடிலெய்ட் ஸ்டிரைகர்ஸ் அணியைச் சேர்ந்த சக வீரர்களும் ரஷீத்தைப் பாராட்டியுள்ளனர். அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே கூறுகையில், “ என்னுடைய சக வீரரையும், சகோதரருமான ரஷீத் கானின் செயலைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆஸ்திரேலியாவே ரஷீத்தை வரவேற்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒருவர் ரஷீத்” எனத் தெரிவித்தார்.