Published:Updated:

`இதுதான் ஆரோக்கியமான கிரிக்கெட்!' - ரிஷப் பன்ட்டுக்கு குவியும் லைக்ஸ்

`இதுதான் ஆரோக்கியமான கிரிக்கெட்!'  -  ரிஷப் பன்ட்டுக்கு குவியும் லைக்ஸ்
`இதுதான் ஆரோக்கியமான கிரிக்கெட்!' - ரிஷப் பன்ட்டுக்கு குவியும் லைக்ஸ்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்திய வீரர் ரிஷப் பன்ட் பேட் செய்துகொண்டிருந்தபோது, அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் சீண்டினார். `ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தோனி தேர்வுசெய்யப்பட்டிருப்பது தெரியுமா? இதனால், உங்களின் ஆஸ்திரேலிய விடுமுறை நாள்களின் எண்ணிக்கை குறையும். நீங்கள் ஏன் ஹோபார்ட் ஹரிக்கேன் அணிக்காக விளையாடக் கூடாது? ஹோபார்ட் பொழுதுபோக்க சிறந்த நகரம். நீங்கள் என் குழந்தையைக் கவனித்துக்கொண்டால், நான் என் மனைவியுடன் சினிமாவுக்குச் சென்றுவருவேன்’ என்று டிம் பெய்ன் பேசியிருந்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது. 

இதற்குப் பதிலடிகொடுத்த பன்ட், `தற்காலிக கேப்டன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவரை அவுட்டாக்க நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. அவர் செய்வதெல்லாம் பேசுவது... பேசுவது... பேசிக்கொண்டே இருப்பது; இதை மட்டும்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்’’ என்று டிம் பெய்ன் பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது பேசினார். இது வைரல் ஆனது. 

ஆனால், இந்த மோதல்கள் எல்லாம் களத்தில்தான். களத்துக்கு வெளியே மோதல் கிடையாது, அனைவரும் நண்பர்கள்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. டிம் பெய்ன் கேட்டுக்கொண்டதுபோலவே, அவரது குழந்தைகளைச் சந்தித்துள்ளார் ரிஷப். இதை, பெய்னின் மனைவி பாம் பெய்ன் குழந்தைகளுடன், ரிஷப் பன்ட் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சிறந்த  பேபி சிட்டர் ரிஷப் பன்ட் ” என்று குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை வரவேற்று, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆரோக்கியமான விஷயம்; இதுதான் ஆரோக்கியமான கிரிக்கெட் என்று குறிப்பிட்டு ரிஷப்பைப் பாராட்டி வருகின்றனர்.

முன்னதாக, இந்தத் தொடர் முழுவதுமே இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங் செய்வதாகவும், ஸ்லெட்ஜிங் செய்வதற்கே பெயர் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்களே கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும், இந்தமுறை இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தவிடுபொடியாக்கும் பொருட்டும் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.