Published:Updated:

`தாதாவுக்கே உரிய நக்கல்' - ஸ்டீவ் வாஹ்கை கலாய்த்த சவுரவ் கங்குலி!

`தாதாவுக்கே உரிய நக்கல்' - ஸ்டீவ் வாஹ்கை கலாய்த்த சவுரவ் கங்குலி!
`தாதாவுக்கே உரிய நக்கல்' - ஸ்டீவ் வாஹ்கை கலாய்த்த சவுரவ் கங்குலி!

இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போட்டு வழிகாட்டும் நிலைமைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் தள்ளப்பட்டுள்ளது என இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கிண்டல் அடித்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம். வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் பால் டேம்பரிங் புகாரில் சிக்கி ஓராண்டு தடையில் இருக்கிறார்கள். இதனால் இளம் வீரர்களைக் கொண்டு அந்த அணி திண்டாடி வருகிறது. எந்தத் தொடரில் பங்கேற்றாலும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து வந்த அந்த அணி, 287 நாள்களுக்குப் பிறகு, கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில்தான் வெற்றியை ருசித்தது. அதேநிலைமைதான் டெஸ்ட்டிலும். நீண்ட நாள்களுக்குப் பிறகுதான் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற்றது.

இதனால் ஆஸ்திரேலிய விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றனர். முன்னாள் வீரர்கள், கேப்டன்கள், ஆலோசகர்கள் எனப் பலரும் ஆஸ்திரேலிய வீரர்களை விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், சிட்னியில் நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி எப்படி அமைய வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அதில், ஹாரிஸ், ஷான் மார்ஷ், கவாஜா, ஹெட், பெய்ன், லபுஷான், மிட்செல் மார்ஷ், கமின்ஸ், ஸ்டார்க், லயன், ஹேசல்வுட் போன்ற பிளேயர்களை டிக் செய்திருந்தார். இதை இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கிண்டலடித்துள்ளார். ஸ்டீவ் வாஹ்கின் பட்டியலை ட்விட்டரில் பதிவிட்டு, ``ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வீரர்கள் தேர்வு மிகமோசமான நிலையில் உள்ளது. முன்னாள் ஜாம்பவான்கள் தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போட்டு வழிகாட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்று கிண்டல் அடித்துள்ளார்.

இதை கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். கங்குலியின் பதிவுக்குக் கீழ், ``17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும்கூட தாதா ஸ்டீவ் வாஹ்கை கலாய்க்கிறார்; தாதாவுக்கே உரிய நக்கல்" என்பன போன்ற கமென்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.