Published:Updated:

`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை!’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்

`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை!’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்
`பாகிஸ்தான் அணியில் மகிழ்ச்சியான சூழல் இல்லை!’ - வெடிக்கும் பேட்டிங் கோச் கிராண்ட் ஃப்ளவர்

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வு, டிரெஸ்ஸிங் ரூம் சூழல் மற்றும் வீரர்களின் ஃபிட்னெஸ் ஆகியவை குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் விமர்சித்திருக்கிறார்.

Photo Credit:ICC

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது. 3 நாள்களுக்காகவே போட்டி முடிந்தது, பாகிஸ்தான் பேட்டிங் குறித்த விமர்சனத்தை அதிகரித்திருந்தது. அதேபோல், பாகிஸ்தான் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்கள் சிலரிடம் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கோபத்தில் ஆவேசமாகப் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மிக்கி ஆர்தருக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் நிலவும் சூழல் தற்போதைய நிலையில் சரியானதாக இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிராண்ட் ஃப்ளவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. பாகிஸ்தான் அணியுடனான எனது பயணம், கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கிறது. இதுபோன்ற சூழல்களை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். இது எனக்குப் புதிதல்ல.

ஆனால், வீரர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது. சில கசப்பான உண்மைகளை மிக்கி ஆர்தர் கூறியிருக்கிறார். வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களின்போது ஒரு அணியாக, குடும்பமாகக் கூட்டு முயற்சியுடன், அதேநேரம் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அணியில் வீரர்களுக்கிடையே நிலவும் சூழல் சிறப்பானதாக இல்லை. வீரர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் நான் தலையிடுவது இல்லை. ஒரு சில வீரர்களின் இடம் பறிபோகும் அபாயத்தில் இருக்கிறது. அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களின் ஃபிட்னெஸ் கவலை அளிக்கிறது. அவர்கள் 100 சதவிகிதம் ஃபிட்னெஸுடன் இல்லை.