Published:Updated:

வார்னர், ஸ்மித்தை மிஸ் செய்வது உண்மைதான்! - டிம் பெய்ன் சூசகம் #AUSvIND

வார்னர், ஸ்மித்தை மிஸ் செய்வது உண்மைதான்! - டிம் பெய்ன் சூசகம் #AUSvIND
வார்னர், ஸ்மித்தை மிஸ் செய்வது உண்மைதான்! - டிம் பெய்ன் சூசகம் #AUSvIND

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி மிஸ் செய்வதாக அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் சூசகமாகத் தெரிவித்தார்.

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி 2 விக்கெட்டுகளை 27 பந்துகளில் வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது 150 வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. சிறப்பாகப் பந்துவீசி 9 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமடித்த பேட் கம்மின்ஸ் தவிர, ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அந்த அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் டிம் பெய்னும் இந்த கருத்தை வழிமொழியும் வகையில் பேசினார். 

அவர் கூறுகையில், ``பெர்த் டெஸ்டில் இருந்த முன்னேற்றம், இந்தப் போட்டியில் இல்லை; இது ஏமாற்றமளிக்கிறது. சிறந்த பௌலர்களை எதிர்த்து நாங்கள் விளையாடுகிறோம். அதனால், சிட்னி டெஸ்டுக்கு முன்னர் நேர்மறையான சில விஷயங்களை கண்டறிந்தாக வேண்டும். மற்றொரு மிகப்பெரிய சவால் எங்களுக்குக் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். ஆனால், சிட்னியில் சூழல் வேறுமாதிரியாக இருக்கும் என்பதால், நல்ல திட்டத்துடன் களமிறங்குவோம். ஒரு சிலர் ஆடுகளம் குறித்து விமர்சித்திருந்தாலும், அது நல்ல நிலையிலேயே இருந்தது. 

டாஸ் ஜெயிக்காதது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் டாஸ் ஜெயித்திருந்தாலும் ஃபீல்டிங்கையே தேர்வு செய்திருப்பேன். கம்மின்ஸ் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மெல்போர்னில் மக்கள் அதைக் கண்கூடாகப் பார்த்தார்கள். அவருடன் கைகோத்து இன்னும் சிலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த வருடத்தில் மிகவும் கடினமான சூழல்களை எதிர்க்கொண்டோம். இன்னும் சில மாதங்களில் உலகின் சிறந்த வீரர்கள் சிலர் அணித் தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள் என்பது ஆறுதலான விஷயம். அவர்களால் ஏற்படப்போகும் தாக்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது போகப்போகத் தெரியும். 

பேட்டிங்கைப் பொறுத்தவரை சரியான அனுபவம் இல்லை என்று நினைக்கிறேன். மிகப்பெரிய அழுத்தம் எங்களுக்கு இருக்கிறது. எங்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை எதிர்க்கொண்ட அணிகளை விட சிறந்த பந்துவீச்சாளர்களை இந்திய அணி கொண்டிருக்கிறது. உலகின் எந்த அணியை எடுத்துக்  கொண்டாலும், அவர்களின் பேட்டிங் ஆர்டரிலிருந்து 2 அல்லது 3சிறந்த வீரர்களை எடுத்துவிட்டால், அந்த அணியால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது’’ என்றார். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியின்போது பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதில், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. பான் கிராப்ட் மீதான 9 மாத தடைக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கான ஓராண்டு தடைக்காலம் வரும் மார்ச் 29ம் தேதி முடிகிறது.