Published:Updated:

`இதோடு நின்றுவிட மாட்டோம்; வெற்றி தொடரும்!’ - கான்ஃபிடன்ட் விராட் கோலி #AUSvIND

`இதோடு நின்றுவிட  மாட்டோம்; வெற்றி தொடரும்!’ - கான்ஃபிடன்ட் விராட் கோலி #AUSvIND
`இதோடு நின்றுவிட மாட்டோம்; வெற்றி தொடரும்!’ - கான்ஃபிடன்ட் விராட் கோலி #AUSvIND

சிட்னி டெஸ்டிலும் வெற்றிபெற முயற்சிப்போம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருக்கிறார். 

Photo Credit:ICC

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ரன்களும், ஆஸ்திரேலியா அணி 151 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், தாமதமாகத் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் கடைசி 2 விக்கெட்டுகளை 27 பந்துகளில் வீழ்த்திய இந்திய அணி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் தனது 150 வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 3 போட்டிகள் முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. சிறப்பாகப் பந்துவீசி 9 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

போட்டிக்குப் பின்னர் பேசிய விராட் கோலி, ``இந்த வெற்றியுடன் நாங்கள் நின்றுவிட மாட்டோம். இதன் மூலம் எங்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. சிட்னி டெஸ்டில் நேர்மறை எண்ணங்களுடன் விளையாட ஒரு உந்துதலைக் கொடுத்திருக்கிறது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். அதனால்தான் பார்டர் - கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்க முடிந்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடரவே விரும்புகிறோம். இதேபோலவே தென்னாப்பிரிக்காவிலும் நாங்கள் விளையாடினோம். 

ஆஸ்திரேலிய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்காதது குறித்து எந்த ஒரு கருத்தையோ, விமர்சனத்தையோ நான் படிக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் கூடுதலாக ரன் குவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் கடைசி 2 நாள்களில் ரன் குவிப்பது கடினம். ஆஸ்திரேலிய அணி கடினமான சூழலில்தான் இருந்தது. ஆனால், எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக ஜஸ்ப்ரீத் பும்ரா. பந்துவீச்சாளர்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பந்துவீசுவது குறித்து ஒரு கேப்டனாக நான் பெருமை கொள்வதுண்டு. எங்களது மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசினர். 

Photo: cricket.com.au

எங்களது முதல்தர கிரிக்கெட் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. இந்த வெற்றிக்கான முக்கியமான காரணம் இந்தியாவின் முதல்தர கிரிக்கெட். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு அது மிகப்பெரும் சவாலை அளிக்கிறது. இதன்மூலம் வெளிநாடுகளில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. முதல்நாளில் மயங்க் அகர்வால் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவின் பங்களிப்பும் நினைவுகூரத்தக்கது. முதல் இன்னிங்ஸில் விஹாரி, நீண்ட நேரம் களத்தில் நிலைத்து  நின்றது, மற்ற வீரர்கள் நம்பிக்கையுடன் விளையாட உதவிகரமாக இருந்தது. ரோஹித் ஷர்மாவின் ஸ்கோரும் முக்கியமானது’’ என்றார். 

அப்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் கேப்டனாக நீங்கள் இருப்பீர்களா என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``உண்மையாக என்னால் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க இயலாது. அதேநேரம், சிட்னி டெஸ்டை வெல்லுவதில் இருந்து எங்கள் கவனத்தை எதுவும் திசை திருப்பாது’’ என்றார்.