Published:Updated:

பாடி லைன் அட்டாக்.. அசத்தல் பேட்டிங்.. 'ஆல்ரவுண்டர்' கம்மின்ஸ்?! #AUSvIND

ஸ்டார்க், ஹேசில்வுட் இருவரும் செய்ய முடியாததைச் சரியாக, மிகச் சிறப்பாகச் செய்தார் கம்மின்ஸ். அந்தச் சிவப்பு கூக்கபரா பந்தைத் தன் பேச்சைக் கேட்கவைத்தார். 

பாடி லைன் அட்டாக்.. அசத்தல் பேட்டிங்.. 'ஆல்ரவுண்டர்' கம்மின்ஸ்?! #AUSvIND
பாடி லைன் அட்டாக்.. அசத்தல் பேட்டிங்.. 'ஆல்ரவுண்டர்' கம்மின்ஸ்?! #AUSvIND

'மெல்போர்னில் ஸ்டார்க், லயான் இருவரையும் கவனமாகக் கையாண்டால் போதும்' என்றுதான் இந்தியர்கள் ஒவ்வொருவரும் நினைத்திரிப்பார்கள். முதல் இரண்டு போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியதால், லயான் மீதுதான் அனைவரின் பார்வையும் இருந்தது. ஆனால், 'அவுட் ஆஃப் சிலபஸ்' பௌலராக இந்திய பேட்ஸ்மேன்களைப் பதம் பார்த்தார் பேட் கம்மின்ஸ். 'சரி, 399 ரன் எடுக்கவேண்டும், கவாஜா, ஷான் மார்ஷ் இரண்டு பேரையும் சீக்கிரம் அவுட்டாக்கினால் போதும்' என நினைத்தால், மீண்டும் வெற்றிக்குக் குறுக்கே வந்து நிற்கிறார் கம்மின்ஸ். 

லயானை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ள, அவர்களின் புதிய பலவீனத்தைக் கண்டறியவேண்டிய தேவை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது. அதைச் சரியாக வெளிக்கொண்டுவந்தார் கம்மின்ஸ். இரண்டாம் இன்னிங்ஸில் வேகமாக ஆடவேண்டும் என்ற மனநிலையில் வந்த இந்திய வீரர்களை, தன் லெக் சைட் பௌன்சர்களால் திணறடித்தார். பெர்த் டெஸ்ட் போட்டியில், லெக் சைட் உடலை ஒட்டி வீசப்பட்ட பந்தில்தான் புஜாரா வெளியேறுவார். அதன்பிறகு அதை ஆஸி வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்தனர். லெக் கல்லி ஃபீல்டர் ஒருவரை நிற்கவைத்து, விக்கெட் வீழ்த்த நினைத்தனர். ஆனால், அவர்களால் சரியான லென்த்தை தொடர்ச்சியாக வீசமுடியவில்லை. தொடர்ச்சியாக ஒரே லைனில், லென்த்தில் வீசும்போதுதான், அந்த பேட்ஸ்மேன், தடுப்பாட்டத்தை விட்டுவிட்டு அடிக்க முற்படுவார். ஆனால், அவர்கள் தொடர்ச்சியாக வீசத் தவறியதால், அந்தத் திட்டத்திற்குப் பலன் கிடைக்கவில்லை. 

அதைத்தான் தன் ஆயுதமாக கம்மின்ஸும் பயன்படுத்தினார். ஆனால், அவரால் லைன், லென்த், பௌன்ஸ், வேகம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது. முதல் இன்னிங்ஸில் பெரிதாக விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் , தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். அவர் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தியதால், 6 ஓவர், 7 ஓவர் ஸ்பெல்களெல்லாம் கொடுத்தார் ஆஸி கேப்டன் டிம் பெய்ன். கம்மின்ஸ், தொடர்ந்து பந்துவீசிக்கொண்டே இருந்தார். அதற்கெல்லாம் இரண்டாம் இன்னிங்ஸில் பலன் கிடைத்தது. 

முதல் இன்னிங்ஸிலேயே, விஹாரியை பௌன்சர்களால் மிரட்டியதால், இந்த முறை விஹாரி மிகவும் கவனமாக அவரை எதிர்கொண்டார். ஆனால், எவ்வளவு கவனமாக இருந்தும் அவரால் தன் விக்கெட்டைக் காப்பாற்ற முடியவில்லை. புயல் வேகத்தில் வந்த பௌன்சரை சுதாரிப்பதற்குள் கேட்சானார். அடுத்து, புஜாரா... லெக் சைட் டெலிவரி... லெக் கல்லியில் கேட்ச். இந்தத் தொடரில் அதுவரை 883 பந்துகள் பேட்டிங் செய்திருந்த இந்தியாவின் சுவரை, முதல் பந்திலேயே வெளியேற்றினார் கம்மின்ஸ்! "இந்தத் தொடரின் மிகப்பெரிய ஆச்சர்யம் நடந்தேறியிருக்கிறது. புஜாராவை அவுட்டாக்கிவிட்டனர். இங்கு நடந்ததை நம்பமுடியவில்லை. கம்மின்ஸாலேயே அதை நம்பமுடியவில்லை" என்று அலறினார்கள் வர்ணனையாளர்கள்.

அந்த ஆச்சர்யம் அடங்கும் முன்பே, உலகின் சிறந்த பேட்ஸ்மேனை டக் அவுட் ஆக்கினார். லெக் சைட் சென்ற ஷார்ட் பாலில், லெக் கல்லியில் நின்ற ஹார்சிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் இந்தியக் கேப்டன். அவர் வீசிய அடுத்த பந்து... அதே லைன், அதே லென்த், கொஞ்சம் வளைந்து ஆடியதால், லெக் கல்லிக்கு கேட்ச் கொடுக்காமல், கீப்பருக்குக் கொடுத்தார் ரஹானே. 32 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்தியா. முக்கியமாக புஜாரா, கோலி, ரஹானே மூவரையும் இழந்தது. இந்தியாவின் 4 விக்கெட்டுகளையும் சுருட்டி வீசினார் கம்மின்ஸ்.

அன்று இந்தியாவின் டாப் 4 விக்கெட்டிகளைப் பதம் பார்க்க, கம்மின்ஸ் பயன்படுத்தியது ஷார்ட் பால் என்ற ஒரே ஆயுதம்தான். விஹாரிக்கு தலைக்கு மேலே வீசியவர், மற்றவர்களுக்கு பௌன்ஸை கொஞ்சம் குறைத்து, பந்தை லெக் சைட் நகரச் செய்தார். அவர்களுக்கு வீசப்பட்ட பந்துகளில், 89 சதவிகித பந்துகள் 'ஷார்ட் லென்த்' ஏரியாவில் பிட்சானவை. மீதம், 11 சதவிகித பந்துகள் குட் லென்த்தான். ஒரு பந்துகூட ஃபுல் லென்த்தில் இல்லை. அதிலும் ஒரு பந்து மட்டுமே ஆஃப் ஸ்டம் லைனுக்கு வெளியே. அதுமட்டுமல்லாமல், எல்லாப் பந்துகளும் முழங்காலுக்கு மேலேதான்! கோலி, ரஹானே, புஜாரா யாரையும் டிரைவ் செய்ய விடவில்லை.

இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கம்மின்ஸ் பந்துவீசிய லைன் % லென்த்

ஒரு சிறந்த வீரர், எப்போதும் ஒரே ஆயுதத்துடன் களமிறங்கமாட்டார். யாருக்கு எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். கம்மின்ஸ் அதிலும் ஷார்ப்! மூன்றாம் நாள் பௌன்சர்களால் இந்தியாவின் அனுபவ பேட்ஸ்மேன்களைத் திணறடித்தவர், நான்காம் நாள் அகர்வாலுக்குப் பயன்படுத்தியது வேறு ஆயுதம். மெல்போர்ன் ஆடுகளித்தின் 'uneven bounce'-யைச் சரியாகப் பயன்படுத்தினார். விஹாரியின் முகத்தைப் பதம்பார்த்த பந்துகள், அகர்வால் முழங்கால் அளவுகூட எழும்பவில்லை. சில பௌன்சர்களுக்கு நடுவே அப்படியான பௌன்ஸ் ஆகாத பந்துகளையும் கலந்தார். லயான் ஓவரில், இறங்கி இறங்கி சிக்சர்கள் பறக்கவிட்ட அகர்வால், தடுமாறத் தொடங்கினார். விக்கெட் - சீக்கிரமே வீழ்ந்தது. பௌன்ஸ் ஆகாத அந்தப் பந்தில் இன்சைட் எட்ஜாகி வெளியாறினார் அந்த அறிமுக வீரர். ஸ்டார்க், ஹேசில்வுட் இருவரும் செய்ய முடியாததைச் சரியாக, மிகச் சிறப்பாகச் செய்தார் கம்மின்ஸ். அந்தச் சிவப்பு கூக்கபரா பந்தைத் தன் பேச்சைக் கேட்கவைத்தார். 

முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 11 ஓவர்கள்... 270 பந்துகளிலும் தன் முழு உழைப்பையும் கொடுத்தார். அவ்வளவு உழைத்தவர் நிச்சயம் சோர்ந்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சமும் சோர்வைக் காட்டிக்கொள்ளாமல் இப்போது 103 பந்துகளைச் சந்தித்து, இந்திய வெற்றிக்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறார். 'பாடி லைன்' அட்டாக்கால் இந்திய பேட்ஸ்மேன்களைப் பந்தாடியவர், இப்போது புரொஃபஷனல் பேட்ஸ்மேன் போல் ஆடி, பௌலர்களை வதைத்துக்கொண்டிருக்கிறார். 

இந்திய பேட்ஸ்மேன்களை பௌன்சர்களால் சோதித்த கம்மின்ஸுக்கு, பௌன்சர் வைத்தியம் பார்க்க நினைத்தார் இஷாந்த். ஒரே ஓவரில் மூன்று பௌன்சர்கள். ஆனால், மிகவும் கவனமாக, ஒரு தேர்ந்த பேட்ஸ்மேன் போல் விளையாடினார் கம்மின்ஸ். ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த பௌன்சர்களை, ஸ்ட்ரெயிட் பேட் கொண்டு ஸ்ட்ரோக் செய்தார். மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப் லைனில் வந்த பந்துகளை, முன்னரே சுதாரித்துக்கொண்டு குனிந்துகொண்டார். பௌன்சர்களின் லைனை, சரியாக கணித்தார். அதனால், இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகள் எதையும் அவர் செய்யவில்லை. 

இஷாந்த் வீசிய ஒரு பந்தை, அவர் ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடிய விதம்.. கிளாஸ்! "ஃபின்சுக்குப் பதில் கம்மின்ஸை ஓப்பனராகக் களமிறக்கலாம்" என்றார்கள் வர்ணனையாளர்கள். அந்த அளவுக்கு அற்புதமான, அழகான ஷார்ட். பேட் 'face' முழுவதையும் கொண்டு அடித்த பந்து, அழகாக நேர்க்கோட்டில் சென்று பௌண்டரியைத் தொட்டது. எட்டாவது வீரராகக் களமிறங்கிய ஒருவரின் ஷாட் போலவே தெரியவில்லை. ஜடேஜாவின் பந்துகளை மிகவும் நிதானமாகக் கையாண்டார். மற்ற பேட்ஸ்மேன்கள்போல் அவசரம் காட்டவில்லை. குழப்பமில்லை. அவரது ஆட்டத்தில் அவ்வளவு தெளிவு. ஸ்லிப்புக்கும் கல்லிக்கும் இடையில் இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி நிறைய சிங்கிள்கள், டபுள்கள் எடுத்தார். ஃபீல்டிங் பொசிஷனையும் மிகச் சிறப்பாக உணர்ந்து விளையாடினார். ஒரு தரமான பேட்ஸ்மேன் போலவே! 

கம்மின்ஸின் இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு 'இவர் உலகின் சிறந்த ஆல்ரவுண்டரா?' எனக் கேட்கிறார்கள் சிலர். 'அவர் டெய்ல் எண்டர்லாம் இல்லை. டாப் ஆர்டர்லயே இறக்கலாம்' என்கிறார்கள் சிலர். 'டிம் பெய்ன் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு சதம்தான் அடித்திருக்கிறார். கம்மின்ஸ், ஆறாவது வீரராகக் களமிறங்கினால் அதற்கு மேலேயே அடித்திருப்பார்' என்கிறார் மைக்கேல் கிளார்க். இந்த டெஸ்ட் தொடரைக் கவனித்து வரும் அத்தனை பேரும் இப்போது கம்மின்ஸ் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகள் முன்பு... எத்தனை எத்தனை கேள்விகள்? எவ்வளவு விமர்சனங்கள்? பேட் கம்மின்ஸ் - இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் பௌலர்களுக்கும் மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும் தான் யார் என்பதைக் காட்டிக் கொண்டிருக்கிறார். 

நவம்பர் 2011. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைகிறது ஆஸ்திரேலியா. ஜோஹன்ன்ஸ்பெர்க் நகரில் நடக்கும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் ஃபேவரிட் பௌலர ரயான் ஹாரிஸ் ஃபிட்டாக இல்லை. முக்கியமான போட்டியில் மிகப்பெரிய பின்னடைவு. அணியின் கீ - பிளேயரின் இடத்தில், புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் 'baggy green' டெஸ்ட் தொப்பி கொடுத்துக் களமிறக்கப்படுகிறார் 18 வயது பேட் கம்மின்ஸ். 

கிரீம் ஸ்மித், ஹஷீம் அம்லா, ஜேக் காலிஸ், டி வில்லியர்ஸ் அடங்கிய பேட்டிங் லைன் அப். முதல் இன்னிங்ஸில் சுமாராகப் பந்துவீசிய கம்மின்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்தார். தன் பௌன்சர்களால் தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டரை நிலைகுலையச் செய்தார். அந்த இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள். தன் முதல் போட்டியிலேயே காலிஸ், அம்லா, டி வில்லியர்ஸ், ருடால்ஃப் என முன்னணி பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, ஆஸி வெற்றிக்கு வழிவகுத்தார். தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன். 

அதன்பின் அந்த தொப்பியை அணிந்து, டெஸ்ட் போட்டியில் விளையாட அவருக்கு 6 ஆண்டுகள் ஆனது. அவரது முதல் டெஸ்ட் போட்டிக்கும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குமான இடைவெளி 1946 நாள்கள்! தொடர்ச்சியான காயங்கள் அவரை வெளியிலேயே அமர வைத்தது. ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடினாலும், டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாமலேயே இருந்தார். 'தொடர்ந்து ஐந்து நாள்களெல்லாம் கம்மின்ஸால பந்துபோட முடியாது' என்று விமர்சித்திர்காள். மூன்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினாலே, 'அடுத்த மேட்ச்ல அவரால ஆடமுடியுமா?' என்று கேள்வி எழுப்பினார்கள். 2015 உலகக் கொப்பையில், இரண்டு போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டார். அவரது ஃபிட்னஸ் அவரை 'பெஞ்ச் பிளேயரா'கவே வைத்திருந்தது. ஆனால், இப்போது..!

ஏற்கெனவே இந்தத் தொடரில் 7 மணி நேரம் பேட்டிங் செய்திருந்தவர், இன்று 2 மணி நேரம் களத்தில் நின்றிருக்கிறார். நாளையும் நிற்கப்போகிறார். 106 ஓவர்கள் பௌன்சர்களாக வீசித்தள்ளியிருக்கிறார். டிம் பெய்ன் அழைத்தபோதெல்லாம் நீண்ட ஸ்பெல்கள் பந்துவீசினார். மிடில் ஆர்டர் சொதப்பித்தள்ளியபோதெல்லாம் மற்ற பௌலர்களோடு இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கிறார். கம்மின்ஸ் எந்திரமாய் சுழன்றுகொண்டிருக்கிறார். அவரது ஃபிட்னஸைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர்கள், விமர்சித்தவர்கள் இப்போது வாயடைத்துப் போயிருக்கிறார்கள். கம்மின்ஸின் இந்தப் பெர்ஃபாமன்ஸ் இந்தியாவுக்கான பதில் அல்ல.. அவரை விமர்சித்த உலகக் கிரிக்கெட்டுக்கான பதில்! 

தன் அறிமுக போட்டியில் கம்மின்ஸ் அட்டநாயகன் விருது வாங்கியதும், மைக்கேல் கிளார்க் சொன்ன வார்த்தை இது : "இனி கம்மின்ஸை சரியாகக் கையாண்டு, அவரை உலகின் 'ஆல் டைம் கிரேட்'களுள் ஒருவராக மாற்றுவதுதான் நாங்கள் செய்யவேண்டியது" என்றார். அவர் சொல்லி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. சொன்னவர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று வர்ணனையும் செய்யத் தொடங்கிவிட்டார். ஆனால், கம்மின்ஸ் இன்னும் தலைசிறந்த வீரராக மாற முடியும். 25 வயதுதான். அணி நிர்வாகம் அவரை சரியாகக் கையாண்டால், டெனிஸ் லில்லி, மெக்ராத் வரிசையில் அவரது பெயரும் நிச்சயம் இடம்பெறும்!