Published:Updated:

13 ஷார்ட் பால், ஒரு ஸ்லோ யார்க்கர்... மார்ஷை வெளியேற்றிய பும்ராவின் பியூட்டி! #AUSvIND

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
13 ஷார்ட் பால், ஒரு ஸ்லோ யார்க்கர்... மார்ஷை வெளியேற்றிய பும்ராவின் பியூட்டி! #AUSvIND
13 ஷார்ட் பால், ஒரு ஸ்லோ யார்க்கர்... மார்ஷை வெளியேற்றிய பும்ராவின் பியூட்டி! #AUSvIND

அதுவரை பும்ராவின் பந்துவீச்சில் மார்ஷ் சந்தித்த 14 பந்துகளில். 13 ஷார்ட் பால்கள், ஒரு பந்து மட்டும் குட் லென்த்தில் பிட்சானது. பெரும்பாலான பந்துகள் பிட்சானதும் ஸ்விங் ஆகியே சென்றன. கிட்டத்தட்ட 14 பந்துகளும் ஒரே மாதிரியானவை. அதன்பிறகுதான் அந்த ஜீனியசின் அந்த மாயப் பந்து.

``பும்ராவைப் பார்க்கும்போது எனக்கு கர்ட்லி அம்ப்ரோஸ் நினைவு வருகிறது" என்று ட்வீட் செய்கிறார் ஒரு இங்கிலாந்து ரசிகர்.

``எனக்கு எப்போது விக்கெட் வேண்டுமானாலும் ரயான் ஹாரிஸ் கையில் பந்தைக் கொடுப்பேன். எனக்கு ஹாரிஸ் எப்படியோ, அப்படி கோலிக்கு பும்ரா" என்று பழைய நினைவுகளைப் பகிர்கிறார் வர்ணனையில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்.

``அந்தப் பந்து, ஆஷஸ் தொடரில் ஹார்மிசன் உங்களுக்கு வீசியதைப் போலத்தானே இருந்தது" என்று கிளார்க்கின் மோசமான நினைவுகளைக் கிளறிக்கொண்டிருந்தார் சக வர்ணனையாளர் முரளி கார்த்திக்.

`இதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த பந்து' என்று பூரித்து ஸ்டேட்டஸ் தட்டத் தொடங்கினார்கள் நெட்டிசன்கள். ஜஸ்ப்ரீத் பும்ரா வீசிய அந்த ஒரு பந்தை ரசிகர்கள், வர்ணனையாளர்கள், வீரர்கள் என அனைவரையுமே சிலிர்க்கச் செய்தது. உணவு இடைவேளைக்கு முன்பு அப்படியொரு ஆகச் சிறந்த பந்தை வீசினார் அவர். அதுமட்டுமல்லாமல், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸி பேட்டிங் ஆர்டரை மொத்தமாகச் சரித்துவிட்டார். 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், இந்திய பௌலர்களின் அசத்தல் பந்துவீச்சால், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஃபின்ச், ஹாரிஸ், கவாஜா என மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது ஆஸ்திரேலியா. மெல்போர்ன் ஆடுகளத்தில் சீரான பௌன்ஸ் இல்லாததால், வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸி பேட்ஸ்மேன்கள் ரொம்பவே தடுமாறினர். அதிலும் குறிப்பாக பும்ராவின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. பௌன்சர்களால் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். பௌன்ஸோடு, வேகமும் அதிகமாக இருந்ததால், அதை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்குச் சிரமமாக இருந்தது. ஒருமுறை, பௌன்ஸுக்குக் குனிந்த ஹெல்மெட்டில் அடிவாங்கிய மார்கஸ் ஹாரிஸ், அடுத்தமுறை வந்த பௌன்ஸரை ஹூக் ஷாட் அடிக்க நினைத்தார். ஆனால், பும்ராவின் மிரட்டல் வேகத்தால் எட்ஜாகி, டீப் லெக்கில் நின்ற இஷாந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

கவாஜா வீழ்ந்ததும், விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக மிகவும் நிதானமாக விளையாடியது ஷான் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் கூட்டணி. ஆனால், பும்ராவின் `ஷார்ட் பால் அட்டாக்' அதன்பிறகும் தொடர்ந்தது. குறிப்பாக ஷான் மார்ஷுக்குத் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களாக வீசிக்கொண்டிருந்தார். ஜடேஜா ஓவர்களில் கிரீஸிலிருந்து இறங்கி விளையாடிய ஷான் மார்ஷ், பும்ராவின் ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அவரது ஓவரில் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ரன்களே எடுக்கவில்லை. பும்ராவின் பந்துவீச்சில், அவர் சந்தித்தது எல்லாமே டாட் பால்கள்!

உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவர். முதல் பந்து - ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ஷார்ட் பால். அடிக்காமல் விட்டார் மார்ஷ். அடுத்த பந்து மிடில் ஸ்டம்ப் நோக்கி வந்தது - மிட் ஆன் திசையில் ஆடினார். அடுத்த மூன்று பந்துகளும் ஒரேபோல்... ஷார்ட் லென்த், ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றன. மூன்றையும் மார்ஷ் தொடவில்லை. அதுவரை பும்ராவின் பந்துவீச்சில் அவர் சந்தித்த 14 பந்துகளில். 13 ஷார்ட் பால்கள், ஒரு பந்து மட்டும் குட் லென்த்தில் பிட்சானது. பெரும்பாலான பந்துகள் பிட்சானதும் ஸ்விங் ஆகியே சென்றன. கிட்டத்தட்ட 14 பந்துகளும் ஒரே மாதிரியானவை. அதன்பிறகுதான் அந்த ஜீனியசின் அந்த மாயப் பந்து. 

உணவு இடைவேளைக்கு முன்பான கடைசிப் பந்தில் மிகப்பெரிய வேரியேஷனை பெரும்பாலும் யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். அந்த மனநிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார் பும்ரா. அதுவரை கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் வேகத்தில், ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்தவர், சுமார் 115 கிலோமீட்டர் வேகத்தில் யார்க்கர் வீசினார். அதுவும், அவர் கையிலிருந்து ரிலீஸ் ஆனதுமே, பிட்ச் ஆவதற்கு முன்பே திசை மாறியது. இதை ஷான் மார்ஷ் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். மார்ஷின் pad-யைத் தாக்கியதும் கையை உயர்த்தினார் நடுவர் இயான் கௌல்ட். வாட்டே பால்..! பும்ரா - ஜீனியஸ்..!

வழக்கமாகப் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அவரது வலது கை வளைந்தே இருக்கும். ஆனால், இந்தப் பந்தை ரிலீஸ் செய்தபோது, கையை நேராக்கினார். அதன்மூலம், பந்தை `டிப்' செய்யச் செய்தார், அதற்கு லேட் மூவ்மென்ட் கொடுத்தார். அதுதான், அந்த ஆங்கிளில் வந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கவேண்டிய பந்தை, மிடில் ஸ்டம்ப் லைனில் pad-ல் படவைத்தது. அதுமட்டுமல்லாமல், வெகுவாகக் குறைந்த வேகம், மார்ஷை முழுதாக ஏமாற்றியது. அவர் பந்தை லெக் சைட் அடிக்க முற்பட்டு ஷாட்டை முடித்தபோதுதான், பந்து பேடிலேயே பட்டது. லென்த், லைன், வேகம், ஸ்விங் மூவ்மென்ட் என ஒவ்வொரு ஏரியாவிலும் பேட்ஸ்மேனை ஏமாற்றியது அந்தப் பந்து!

ஷான் மார்ஷ், கொஞ்ச நேரம் அப்படியே நின்றார். என்ன நடந்தது என்று புரிவதற்கு அவருக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. பும்ரா அப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தினார். உணவு இடைவேளைக்குப் பிறகும், ரொம்ப நேரம் வர்ணனையாளர்கள் அந்தப் பந்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். ``பும்ரா ஒரு ஜீனியஸ்" என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்டம்புகள் சிதறிய சத்தம். மீண்டும் ஒரு யார்க்கர். இம்முறை 142 கிலோமீட்டர் வேகம். இம்முறை, ஸ்ட்ரைக்கர் எண்டில் என்ன நடந்தது என்று புரியாமல் டிராவிஸ் ஹெட். பௌலிங் எண்டில் - ஜஸ்ப்ரீத் பும்ரா - தி ஜீனியஸ்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு