Published:Updated:

கோலி; புஜாரா கொடுத்த அதிர்ச்சி ;பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் - மெல்போர்ன் டெஸ்ட் ட்விஸ்டுகள்!#AUSvIND

கோலி; புஜாரா கொடுத்த அதிர்ச்சி ;பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் - மெல்போர்ன் டெஸ்ட் ட்விஸ்டுகள்!#AUSvIND
கோலி; புஜாரா கொடுத்த அதிர்ச்சி ;பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் - மெல்போர்ன் டெஸ்ட் ட்விஸ்டுகள்!#AUSvIND

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளில், ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏமாற்றத்தை அளித்துள்ளன.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கைச் செய்தது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான நேற்று புஜாரா- விராட் கோலி இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு இந்த இணை சிம்ம சொப்பனமாக விளங்கியது. அபாரமாக ஆடிய புஜாரா, சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். இதையடுத்து, மிட்சல் ஸ்டார்க் பந்து வீச்சில் கோலி வெளியேறினார். களத்தில் இறங்கிய ரஹானே, புஜாராவுடன் கைகோத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார் புஜாரா. பின்னர், இதையடுத்து, களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்காத நிலையில், ரோஹித் நிலைத்து ஆடி 63 ரன்களைச் சேர்த்து, களத்தில் இருந்தார். இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்ததது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் முடிவில் 6 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 8 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து மூன்றாம் நாளான இன்று, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸி பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.  100 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிர்த் பும்ரா, இசாந்த், சர்மா, ஜடேஜா ஆகியோரின் கணிக்க முடியாத பந்துவீச்சு, பேட்ஸ்மேன்களை எளிதில் களத்திலிருந்து வெறியேறச் செய்கின்றன. மெல்போர்ன் ஆடுகளம் மூன்றாம் நாளில் மாற்றமடைந்துவிடும் என ஏற்கெனவே புஜாரா கூறியிருந்தார். அவர் கூறியது ஏறக்கூறைய உண்மையாகியுள்ளது. புஜாரா,  ``இந்த ஆடுகளத்தில் 400 ரன்களுக்கு மேல் அடித்ததே வெற்றிக்கான ஸ்கோர்தான். ஆடுகளம் 3-வது நாளில் மாற்றமடைந்துவிடும்” என்றார். அந்தவகையில் இந்திய அணி டாஸ் வென்றது வெற்றிக்கு பெரும் சாதமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இமாலய இலக்கை இந்தியா எட்டியுள்ளதால், அது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது.

ஆஸி வீரர்களின் இந்த நிலையை இந்திய பந்து வீச்சாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர். நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா 292 ரன்கள் பின்தங்கியுள்ளது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியை, ஆஸ்திரேலிய வீரர்கள் களமாடினர்.  அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோலி, புஜாராவை கம்மின்ஸ் வெளியேற்றி, ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது என்பதை நிருபித்தார். தொடர்ந்து வீரர்கள், சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியா 54ரன்களை சேர்த்து 5 விக்கெட்டுகளை சேர்த்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.