Published:Updated:

`என் வேலை ரன் குவிப்பதுதான்!’ - `செஞ்சுரி நாயகன்’ புஜாரா

`என் வேலை ரன் குவிப்பதுதான்!’ - `செஞ்சுரி நாயகன்’ புஜாரா
`என் வேலை ரன் குவிப்பதுதான்!’ - `செஞ்சுரி நாயகன்’ புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசியது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

Credits: BCCI

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சதம் அடித்து அசத்தியுள்ளார் இந்திய வீரர் புஜாரா. அதுவும்  `பாக்ஸிங் டே’ டெஸ்டில் சதம் அடித்து கவனம் பெற்றுள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும் தற்போது கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திவருகிறார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது முறையே, 123, 71 ரன்கள் அடித்து கவனம் பெற்றார். இரண்டாவது டெஸ்டில் விரைவிலே வெளியேற்றப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நங்கூரம்போல் நிலைத்து நின்று ஆஸ்திரேலிய வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். இந்தப் போட்டியில் 319 பந்துகளைச் சந்தித்த புஜாரா 106 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

இரண்டாம் நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புஜாரா, ``நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என விரும்புவேன். நான் யாருடைய வாயையும் அடைப்பதற்காக விளையாடவில்லை. அதற்குள் நான் போகவும் விரும்புவதில்லை. என்னுடைய வேலை ரன் குவிப்பதுதான். உள்நாடாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் சரியாக செய்து வருகிறேன். உங்கள் மீது விமர்சனங்கள் எழும்போது அதை ஏற்றுக்கொண்டு சென்றுவிட வேண்டும். இந்தியா வெற்றி பெற்றால் அனைவரும் மகிழ்ச்சியடையப் போகிறோம். இரண்டு சதங்கள் விளாசியதில் எந்த ரகசியமும் இல்லை. நான் எப்போதும் ரன் குவிக்கவே விரும்புகிறேன். இந்த இரண்டு சதங்கள் மகிழ்ச்சியே.

சிலர் நான் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில்தான் ரன்களை குவிக்கிறேன் எனக் கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் இந்திய அணி அதிகப்படியான டெஸ்ட் போட்டியைத் தனது சொந்த மண்ணில்தான் விளையாடுகிறது. வெளிநாட்டு தொடர்களில் ரன்களை குவிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. வெளிநாட்டு தொடர் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சவாலானது” என்றார்.