பிரீமியம் ஸ்டோரி

‘‘சச்சின் வெர்சஸ் கோலி ஒப்பீடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? யார் சிறந்த வீரர்?’’

நீலன் @karukkan

சச்சின் - கோலி ஒப்பீடுகளை வெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அணுகுவது தவறு. இரண்டு பேருமே வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள். அப்போது டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் என இரண்டு ஃபார்மேட்தான் இருந்தது. இப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மேட்டிலுமே விராட் கோலி சிறந்து விளங்குகிறார். ஆனால், கோலி விளையாடும் இந்த காலகட்டம் பேட்ஸ்மேன்களுக்கானது. சச்சின் விளையாடிய காலகட்டத்தில் கிரிக்கெட் வெறும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மட்டுமே இல்லை.

அப்போது இருந்த இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா மைதானங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தவை. அந்த மைதானங்களில் ரன்கள் அடிப்பது என்பது மிகவும் சவாலானது. அப்போதைய பெளலர்களும் பந்துவீச்சில் மிரட்டினார்கள். இந்தியாவிலேயே பல பிட்ச்சுகள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தன. ஆனால், இப்போது கிரிக்கெட் அதிகம் கமர்ஷியலாகிவிட்டது.

SHOOT THE கேள்வி

300 ரன்கள் அடித்தாலும் அதை சேஸ் செய்து அடிக்கூடிய அளவில்தான் பிட்ச்சுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆட்ட விதிமுறைகளும் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கிறது. அதனால் சச்சினின் காலகட்டத்தையும், கோலியின் காலகட்டத்தையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. எமோஷனலாகப் பார்த்தால் சச்சின் சுமந்த பிரஷர் கோலிக்கு இல்லை. கோலி தனது பேட்டிங்கால் எல்லோரையும் ரசிக்கவைக்கிறார். ஆனால் சச்சின் எல்லோரையும் விளையாடவைத்தவர். 

‘‘2018 ப்ரோ கபடி, 2018 ஐ.எஸ்.எல், 2019 கிரிக்கெட் உலககோப்பை...  யார் சாம்பியன் பட்டம் வெல்வார்கள்?’’

 Kannanthulasiraja @Kannanthulasi13

2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, இந்தியா மட்டுமே ஃபேவரிட்ஸாக கலந்துகொள்ளும். இந்த இரண்டு அணிகளுக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. சொந்த ஊரில் விளையாடுவது, சமீபத்திய ஃபார்ம், அணியின் பலம் என அனைத்துமே இங்கிலாந்துக்குச் சாதகம். ப்ளேயிங் லெவனில் யாருக்கும் காயம் ஏற்படாதவரை இந்தியாவுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. உலகக் கோப்பைக்கு டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் திரும்பிவிடுவார்கள் என்பதால், ஆஸ்திரேலியா மீண்டும் புத்துயிர் பெறலாம்.

இந்த சீசன் ப்ரோ கபடியில் யு மும்பா, பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி அணிகள் அசத்தல் ஃபார்மில் இருக்கின்றன. ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பால்டன், பாட்னே பைரேட்ஸ் இன்னும் தங்களின் முழு பலத்தையும் காட்டவில்லை. சொந்த ஊரில் நடக்கும் போட்டிகளில் அனைத்து அணிகளும் தடுமாறுவதால், போகப் போக எப்படி வேண்டுமானாலும் நிலை மாறலாம். ஆனால், யு மும்பா அணி அனைத்து ஏரியாவிலும் பலமாக இருக்கிறது. அந்த அணியின் ரெய்டர் சித்தார்த் தேசாய் வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் சூப்பர்-10 எடுத்து அசரடிக்கிறார். டிஃபன்ஸில் ஃபஸல் அத்ரசாலி, சேரலாதன் ஆகியோரும் அசத்துவதால், மற்ற அணிகளைவிட கொஞ்சம் அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஐ.எஸ்.எல் தொடரைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு அணி வீரர்கள் மாறுகிறார்கள். பயிற்சியாளர்கள் மாறுகிறார்கள். அதனால் ‘இந்த அணி இப்படித்தான் ஆடும்’ என்று சொல்லவே முடியாது. நடப்பு சாம்பியன் சென்னையின் எஃப்.சி இந்த முறை முதல் 3 போட்டிகளிலுமே தோற்றுள்ளதே! குறைந்தபட்சம் ஒவ்வொரு அணியும் 8 போட்டிகளாவது விளையாடிய பின்னர்தான் அணியின் ஃபார்ம், பெர்ஃபாமன்ஸ் குறித்தெல்லாம் அலச முடியும்.

‘‘இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேப்டன் கோலிக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.அது உண்மையா?உண்மையெனில் என்ன காரணம்?"

JayaKumar Arumugam @Jayans66

SHOOT THE கேள்வி

ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலிக்கு எல்லா வகையிலும் சாதகமாக செயல்படுகிறார். ஆனால், அவருக்கு மட்டுமே சாதகமாக செயல்படுவதுபோல் தெரியவில்லை. ஆசிய கோப்பையில் கேப்டன்களாக இருந்த ரோஹித், தோனி ஆகியோருக்கும் இணக்கமாகவே இருக்கிறார். அவர்கள் சில தவறுகள் செய்தபோதும் எதுவுமே நடக்காததுபோல் அவர்களுக்கு ஆதரவாகவே பேசுகிறார். ஆனால், கோலிக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி அடுத்தகட்டத்தில் இருக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு மற்றொருவர் வக்காளத்து வாங்குவதால் அது இன்னும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இது எங்கே போய் முடியும் என்பது பற்றி இந்த இதழில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறோம்.

SHOOT THE கேள்வி

‘‘அடுத்த ஒலிம்பிக்கில் கபடி இடம்பெறுமா?’’

Venkadesh@venkime1

அடுத்த ஒலிம்பிக் 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. 2015-ல் ஏற்படுத்திய விதியின்படி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு, அந்நாட்டில் பிரபலமான சில விளையாட்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி, பேஸ்பால், கராத்தே, ஸ்போர்ட் கிளைம்பிங், சர்ஃபிங், ஸ்கேட் போர்டிங் விளையாட்டுகளை ஜப்பான் தேர்வுசெய்தது. இதற்கு ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துவிட்டது. எனவே, கபடி டோக்கேியா ஒலிம்பிக்கில் இடம்பெறாது. கபடி கோலோச்சும் இந்தியா, பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா போன்ற நாடுகளில் ஒலிம்பிக் நடந்தால் மட்டுமே, கபடி ஒலிம்பிக்கில் இடம்பெற வாய்ப்புள்ளது.

SHOOT THE கேள்வி

‘‘கிரிக்கெட் மைதானத்துக்கு நீள, அகல கட்டுப்பாடுகள் ஏதாவது உள்ளதா. அவ்வாறு இருந்தால் ஏன் மைதானத்துக்கு மைதானம் நீள அகல வேறுபாடுள்ளது?’’

Prablue @Prablue

கிரிக்கெட் மைதானத்துக்கு நிலையான எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், குறைந்தபட்ச, அதிகபட்ச அளவுகளை ஐ.சி.சி நிர்ணயித்துள்ளது. பிட்சிலிருந்து ஸ்கொயர் பவுண்டரி குறைந்தபட்சம் 59.43 மீட்டர் இருக்கவேண்டும். பிட்சின் நடுவிலிருந்து, ஸ்ட்ரெய்ட் பவுண்டரியின் அளவு குறைந்தபட்சம் 64 மீட்டர். அதேசமயம் எந்த பவுண்டரியும் 82.29 மீட்டரை விட அதிகமாக இருக்கக்கூடாது. அவ்வளவுதான்.
மற்றபடி ஒவ்வொரு மைதானத்துக்கும் அளவுகள் மாறுபடக் காரணம், அந்த மைதானம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்தின் அளவுதான். அதைப் பொறுத்துத்தான் பவுண்டரிகள் சிறியதாகவோ, பெரியதாகவோ அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு