பிரீமியம் ஸ்டோரி

சாதனைகளால் சரித்திரம் படைத்த மாவீரர்கள் எல்லோருமே தடுமாறும் நேரம் ஓய்வை அறிவிக்கும் நேரம்.

அன்பு வணக்கம்!

சிலர் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும்போதே ஓய்வை அறிவித்துவிடுவார்கள். சிலர் ஓய்வை அறிவிக்க மனம் இல்லாமல் விமர்சனங்களால் துன்புறத்தப்பட்டு பிறகு வெளியேறுவார்கள். சிலர் வெளியேற்றப்படுவார்கள். இப்படி ஒரு சூழலில் இப்போது ஒரு மாவீரனும் வந்து நிற்கிறார்.

பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் பொருந்தாமலேயே இருந்தது விக்கெட் கீப்பர் இடம்தான். ஆடம் கில் கிறிஸ்ட், மார்க் பவுச்சர், சங்ககாரா என மற்ற நாட்டு விக்கெட் கீப்பர்கள் எல்லாம் வெளுத்தக்கட்ட இந்தியாவில் மட்டும் விக்கெட் கீப்பர்கள் சுமாரான பேட்ஸ்மேன்களாகவே இருப்பார்கள். ஒருகட்டத்தில் சரியான விக்கெட் கீப்பரே இல்லாமல் ராகுல் டிராவிட்டே விக்கெட் கீப்பிங் செய்து ஒப்பேற்றியதுதான் இந்தியாவின் வரலாறு. ஆனால், திடீரென ஜார்க்கண்டில் இருந்து வந்தான் ஒரு இளைஞன். இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்ல உலகக் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பிங் தரத்தையே மாற்றிக்காட்டினான் மகேந்திர சிங் தோனி என்னும் அந்தத் தனியொருவன்.

இந்திய அணிக்கு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், சரியான கேப்டன் இல்லாமல் இந்தியா தத்தளித்தபோது முன்னால் வந்து நின்றவரும் அவரே. 2007 டி20 உலகக்கோப்பைக்குத் தலைமைதாங்கி அந்தக் கோப்பையை வென்றுதந்தவர் தோனி. 1983-க்குப் பிறகு இந்தியாவுக்கு கனவாகிப் போன உலகக்கோப்பையை 2011-ல் பெற்றுத்தந்தவர் தோனி. 2015 உலகக்கோப்பையிலும் அரை இறுதிப்போட்டி வரை இந்தியாவை வழிநடத்தியவர் அவர்.

கேப்டன்ஸியை விராட் கோலியிடம் கொடுத்துவிட்டு இப்போது ஒரு பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக, அணியின் சீனியராக 2019 உலகக்கோப்பையை எதிர்கொள்ளும் ஆவலோடு தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரின் சமீபத்திய ஃபார்ம் அவர் உலகக்கோப்பை வரை அணியில் இருப்பாரா என்கிற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் தோனி மீது விழ ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு பல பெரு வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் சில ஆட்டங்களாக பேட்டிங்கில் மட்டும் சொதப்புகிறார் என்பற்காக அவரை விமர்சிப்பது சரியல்ல.

இறுதிக்கட்டத்தில் தோனியின் மீது சுமையை ஏற்றுவது தவறு. அவரை ஆட்டத்தில் கவனம் செலுத்த அவருக்கு கொடுப்பதே இந்திய கிரிக்கெட் உலகம் அவருக்குச் செய்யும் மரியாதை. தோனி மீண்டு வருவார்!

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு