Published:Updated:

பந்து சேதப்படுத்தப்பட்ட அன்று என்ன நடந்தது... யார் செய்யச் சொன்னார்கள்? - மௌனம் கலைத்த பான்கிராஃப்ட்

பந்து சேதப்படுத்தப்பட்ட அன்று என்ன நடந்தது... யார் செய்யச் சொன்னார்கள்? - மௌனம் கலைத்த பான்கிராஃப்ட்
பந்து சேதப்படுத்தப்பட்ட அன்று என்ன நடந்தது... யார் செய்யச் சொன்னார்கள்? - மௌனம் கலைத்த பான்கிராஃப்ட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத வடுவாக அமைந்துவிட்டது, பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரம். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட், பந்தை சாண்ட்பேப்பர்            ( Sand Paper) கொண்டு சேதப்படுத்தியது வீடியோவில் தெளிவாக தெரிய, பெரும் சர்ச்சை வெடித்தது. 

அதன்பின்னர் நடைபெற்ற விசாரணையில், பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதும்,  கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோருக்குத் தெரிந்துதான் அது நடந்தது என்பதும் நிரூபணமானது. இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பான்கிராஃப்ட் -க்கு 9 மாத தடையும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் விதித்தது.

இதில், பான்கிராஃப்ட்டின் தடைக் காலம் வரும் 29 -ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய ஊடகமான ஃபாக்ஸ் ஊடகத்துக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கேள்விகளுக்கு பான்கிராஃப்ட் தொடர்ச்சியாகப் பதில் அளித்தார். அவரிடம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நடைபெற்றது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. 

பான்கிராஃப்ட்,  ``ஆஸ்திரேலிய அணிக்கு அது கடுமையான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அணியாக வெற்றிபெற்று எங்களை நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பிட்ட அந்தப் போட்டி அப்போது, முக்கியமான கட்டத்தில் இருந்தது. அன்றைய நாள் மேகமூட்டத்துடன் கொஞ்சம் இருட்டாகவும் இருந்தது. அந்த நேரத்தில், பந்தில் செய்யப்படும் செயற்கையான மாற்றம் ஆட்டத்தை மாற்றவல்லது. அதனால்தான் அந்த முடிவை நான் எடுத்தேன்”  என்றார். 

அப்போது கில்கிறிஸ்ட், ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்ப,  ``நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்ற ஒன்று இருக்கிறது. அந்தச் சமயத்தில், அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதுதான் மதிப்பானது எனத் தோன்றியது. அணியின் வெற்றியில் எனது பங்களிப்பால் என்னை சக வீரர்கள் மதிப்பார்கள் என்று தோன்றியது. எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்,  எனது கட்டுப்பாட்டில் இருந்து நான் அந்த முடிவை எடுத்தேன். பலமுறை நான் என்னையே கேட்டுக்கொள்வேன். அன்று நான் இந்த காரியத்தை என்னால் செய்ய முடியாது என்று சொல்லி, அணியும் தோற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று? அணி வெற்றிபெற எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டும் அதை நான் செய்யவில்லை. என்னால்தான் வீரர்கள் தோற்றார்கள் என்ற எண்ணம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்” என்றார். 

யார் இதை செய்யச்சொன்னார்கள் என்ற கில்கிறிஸ்ட்டின் கேள்விக்குப் பதிலளித்த அவர்,  ``அன்று வார்னர்தான் அந்தக் காரியத்தை செய்யச் சொன்னார். எனக்கு அதை சரியாக செய்யத் தெரியாது. இதற்கு முன்னர் நான் செய்ததும் கிடையாது. எனினும், அணி வீரர்களின் மத்தியில் மதிப்பு கிடைக்கும் என நினைத்து, மறுக்காமல் செய்துமுடித்தேன்” என்றார். 

மேலும்,  ``அந்த நாளின் இறுதியில், நான் நடுவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி மன்னிப்பு கோரினேன். இனி இந்தக் தவறு நடக்காது என உறுதியும் அளித்தேன்’' என்றார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் நடத்திய விசாரணையில் வார்னர், தனக்கு இதில் அதிக பங்கு இருப்பதாக ஒப்புக்கொண்டார். அணியில் மூத்த வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் முடிவை எடுத்ததாகவும், அதை இளம் வீரர்களைக் கொண்டு செய்து முடிக்கலாம் எனவும் முடிவுசெய்யப்பட்டது என்றும் விசாரணையில் தெரிவித்தனர்.  இதே போன்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்தும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.