Published:Updated:

தோனி, பன்ட், டி.கே... உலகக்கோப்பை அணியில் இருப்பது யார்?! ஷூட் தி கேள்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோனி, பன்ட், டி.கே... உலகக்கோப்பை அணியில் இருப்பது யார்?! ஷூட் தி கேள்வி
தோனி, பன்ட், டி.கே... உலகக்கோப்பை அணியில் இருப்பது யார்?! ஷூட் தி கேள்வி

தோனி, பன்ட், டி.கே... உலகக்கோப்பை அணியில் இருப்பது யார்?! ஷூட் தி கேள்வி

ஸ்போர்ட்ஸ் விகடன் ட்விட்டர் பக்கத்தில், வாசகர்கள் விளையாட்டு தொடர்பான தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள `ஷூட் தி கேள்வி' மூலம் கேள்விகள் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மாதாமாதம் வெளியாகும் ஸ்போர்ட்ஸ் விகடன் மின்னிதழில் வெளியாகும். அந்தக் கேள்விகள் மட்டுமல்லாது, மேலும் சில கேள்விகளுக்கான பதில்களை இனி நம் இணைய தளத்திலும் உங்களுக்காகப் பதிவிடுகிறோம். 

தோனி, பன்ட், தினேஷ் கார்த்திக் இவர்களில் யார் உலகக்கோப்பை ப்ளேயிங் லெவனில் இருப்பாங்க?

கோலி- சாஸ்திரி கூட்டணியின் ப்ளேயிங் லெவனைக் கணிப்பது என்பது ரொம்ப சிரமமான விஷயம். டெஸ்ட் போட்டிகளில் ரஹானே, புஜாரா ஆகியோரை பெஞ்சில் அமரவைப்பவர்கள், ஒருநாள் போட்டியில் எப்படியான முடிவையும் எடுக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்கள் வருவதும் போவதுமாகத்தான் இருக்கிறார்கள். மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், ரிசப் பன்ட் என மிடில் ஆர்டரில் மட்டும் எக்கச்சக்க வீரர்களை விளையாடவைத்துள்ளது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டிவரை எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

இந்த மூன்று வீரர்களைப் பொறுத்தவரை இருவரின் முடிவு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதுதான். தோனி - நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. மிடில் ஆர்டர் இன்னும் நிலையாக இல்லாததால் அவர் ஆடுவது அவசியம். ஹர்டிக் பாண்டியா, கேதர் ஜாதவ் போன்ற வீரர்களே லோயர் மிடில் ஆர்டரில் ஆடுவதால், நிலைத்து நின்று ஆடக்கூடிய ஒரு வீரர் இருப்பதுதான் நல்லது. அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே கோலியின் அணித் தேர்வுகள் சர்ச்சைக்குள்ளாவதால், நிச்சயம் உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் தோனியை வெளியே எடுக்க மாட்டார்.

அதேசமயம், இந்திய பேட்டிங் ஆர்டரின் டாப் - 3 : ரோஹித், தவான், கோலி. 5-7 : தோனி, ஜாதவ், ஹர்டிக். இப்படித்தான் பெரும்பாலும் இந்திய அணி விளையாடும். ஐந்து பௌலிங் ஆப்ஷன் மட்டும் இருப்பது சிக்கல் என்பதால், கேதர் ஜாதவ் நிச்சயம் இறங்க வேண்டும். இறங்குவார். அப்படிப் பார்க்கும்போது மீதமிருக்கும் ஒரே இடம் - நம்பர் 4. அங்கு விளையாடுவது யார் என்பதுதான் அணியில் இருக்கும் பெரிய சிக்கல். ரிசப் பன்ட் - இன்னும் உலகக் கோப்பைக்கான அனுபவம் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல், இன்னும் கன்சிஸ்டென்ட்டாக ஆட சிரமப்படுகிறார். கோலியும் அவரை டி-20 போட்டிகளில் விளையாட வைக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். அதனால் பன்ட் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்கப்போவதில்லை. 15 பேர் கொண்ட அணியிலும் இருக்கமாட்டார்.

இந்த மூவரில் இன்னும் சிக்கலாக இருப்பது தினேஷ் கார்த்திக் நிலைதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். அணிக்குத் தேவையான நேரங்களில், சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். ஆனால், ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறியது, அவரது இடத்தைச் சந்தேகமாக்கியுள்ளது. அதேசமயம் அம்பாதி ராயுடு, நான்காவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சதம் அடித்து, அணி நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். தற்சமயம் அவர்தான் இந்திய அணியின் சாய்ஸ் என்பதுபோல் தெரிகிறது. மிடில் ஆர்டர் பேக் அப், விக்கெட் கீப்பர் பேக் அப் என இரண்டு பாக்ஸ்களை டிக் செய்வதால், டி.கே இந்திய உலகக் கோப்பை அணியில் நிச்சயம் இடம்பெறுவார். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து தொடர்களில் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால், ராயுடுவைப் பின்னுக்குத் தள்ளலாம். 

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர்கள் பெரும்பாலும் சேர்க்கப்படுவதில்லையே? சீனியர்கள் இல்லாமல் அணியை வழி நடத்துவது சாத்தியமா?

சீனியர்கள் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? இப்போது அணியில் 80 சதவிகிதம்பேர் சீனியர்கள்தான். சீனியர் என்றவுடன் எல்லோரும் தோனியைத்தான் பார்க்கிறார்கள். தோனியைவிட அணியில் சீனியர் தினேஷ் கார்த்திக். கோலி இந்திய அணிக்குள் வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. ரோஷித் ஷர்மா கிட்டத்தட்ட 200 ஒருநாள் போட்டிகளை நெருங்குகிறார். ஷிகர் தவானுக்கு வயது 32. அவரும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருக்கிறார் என சீனியர்கள் நிரம்பிய அணிதான் இந்திய அணி.

மேரி கோம் வெற்றி, மித்தாலி ராஜ் புறக்கணிப்பு... இரண்டு நிலைப்பாடுகளும் விளையாட்டில் எதை சரி செய்யப் பார்க்கிறது?

மேரி கோம் வெற்றியில் இந்திய அரசோ, குத்துச்சண்டை அமைப்புகளோ யாருமே உரிமை கொண்டாட முடியாது. மேரி கோமின் வெற்றி என்பது அவரது போராட்டத்துக்குத் தொடர்ந்து கிடைத்துவரும் வெற்றி. அவரை வீழ்த்த தினமும் பல அம்புகள் அவரை நோக்கி வீசப்படுகின்றன. வயதைக் காரணம்காட்டி அவரை ஒதுக்கநினைக்கிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து போராடித்தான் வெற்றிகளைப் பெற்றுவருகிறார். இது மேரி கோமின் தளராத தன்னம்பிக்கைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. 

மித்தாலி ராஜ் புறக்கணிப்பு என்பது துரதிர்ஷ்டவசமானது. அணியில் இருக்கும் இளையோர் சீனியரை மதிக்கவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதைத்தான் இது காட்டுகிறது. சீனியர் இல்லாமலேயே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுவிட்டோம், இனி அவர் தேவையில்லை என்று ஒரு முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதை அரை இறுதிப்போட்டியின் தோல்வி இந்திய அணிக்கு உணர்த்திவிட்டது. ஆனாலும், தங்களின் தோல்வியை மறைப்பதற்காக மித்தாலி ராஜ் சுயநலமாக ஆடுகிறார், நாட்டுக்காக ஆடவில்லை என்று அவரின் 20 ஆண்டுக்கால கிரிக்கெட் அனுபவம் மீது கல்லெறிகிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஒரு ஈகோ உரசல் ஒட்டுமொத்த அணிக்கும் கேடாய் முடிந்திருக்கிறது.

இந்தியாவில் ஏன் ஐ-லீக், ஐஎஸ்எல் என்று இரு தொடர்கள் நடக்கின்றன. இங்கிலாந்தின் பிரீமியர் லீக் போல், ஒரேயொரு முதன்மையான தொடரை ஏன் இவர்கள் நடத்துவதில்லை?

இங்கிலாந்தைப் போல் ஒரே லீக் என்பது விரைவில் இங்கு சாத்தியப்படும். இரண்டு லீக் நடந்தால், ஆசிய கால்பந்து சங்கத்தால், இந்திய கிளப்களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற நிலை நிலவுகிறது. அதனால் அடுத்த ஆண்டுக்குள், ஐ-லீக், ஐஎஸ்எல் தொடர்கள் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஐஎஸ்எல் தொடங்கியதிலிருந்தே, இரு தொடர்களையும் இணைக்கவேண்டும் என்கிற குரல்கள் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. இப்போது இந்தியக் கால்பந்து சம்மேளன அளவிலும், இது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டு தொடர்களையும் ஒன்றிணைப்பது கடினமான விஷயம் என்பதால், அந்தத் திட்டத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

ரியல் மாட்ரிட் சமீப காலமாகச் சொதப்புவது ஏன்?

ஜிடேன் - ரொனால்டோ இருவரும் அடுத்தடுத்து ரியல் மேட்ரிட் அணியைவிட்டு வெளியேறியது, அவர்கள் இல்லாமல் தங்களை நிரூபிக்கவேண்டிய சூழலை அனைவருக்கும் ஏற்படுத்திவிட்டது. அதனால் உளவியல் ரீதியாக ஒவ்வொரு வீரருமே சீசன் தொடக்கத்திலிருந்து நெருக்கடியைச் சுமந்துகொண்டிருந்ததை மறுக்க முடியாது. ஸ்பெயின் அணியின் உலகக்கோப்பை தோல்வி, ரமோஸ், இஸ்கோ, கர்வகால், அசேன்ஸியோ, நாசோ, வஸ்க்யூஸ் என தேசிய அணி வீரர்கள் மீதான நெருக்கடியை இன்னும் அதிகரித்துவிட்டது. `மாட்ரிட் ரொனால்டோவை நம்பி இல்லை' என்பதை நிரூபிக்கவேண்டிய நெருக்கடி, அவர்களின் ஆட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த சீசனைப் பயிற்சியாளராகத் தொடங்கிய ஜூலன் லோபடூகி, `டிகி டாகா' ஸ்டைலைப் பயன்படுத்தியது மாட்ரிட்டின் வீழ்ச்சிக்கு விதையாக அமைந்தது. அது மாட்ரிட் வீரர்களுக்கு செட் ஆகவில்லை. தொடக்க காலத்தில் பார்சிலோனா டிகி டாகா ஆடியபோது, அந்த அணுகுமுறைக்குப் பொருத்தமான வீரர்கள் அணியில் இருந்தார்கள். மெஸ்ஸியைக் காட்டிலும், இனியஸ்டா, ஜாவி என்று `மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ'க்களை மையமாகக்கொண்டுதான் அந்த சிஸ்டம் இயங்கியது. அவர்களைப் போன்ற ஜீனியஸ் மிட்ஃபீல்டர்களால் மட்டுமே அந்த சிஸ்டத்துக்கு உயிர் கொடுக்க முடியும். மோட்ரிச், குரூஸ் சிறந்த மிட்ஃபீல்டர்கள் என்றாலும், அந்த ஸ்பெயின் இணையின் தரத்தில் இல்லை. அவர்களால் லாங் பாஸ்களைச் சிறப்பாக ஆட முடிகிறது. ஆனால், ஷார்ட் பாஸ்கள் மூலம் பொசஷன் தக்கவைக்க முடியவில்லை.

இந்நிலையில் மற்றொரு முக்கிய வீரரான இஸ்கோ, ரொனால்டோவின் இடத்தை நிரப்ப முயன்று, ஒட்டுமொத்த முன்களத்தின் கெமிஸ்ட்ரியையும் கெடுத்து வைத்திருந்தார். இவர்கள் டிகி டாகா விளையாடியது, அந்த அணியின் ஸ்பெஷாலிட்டியாக இருந்த `கவுன்ட்டர் அட்டாக்'கை மறக்கச் செய்தது. ரொனால்டோவின் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேல், மீண்டும் அடையாளம் தெரியாமல் போனார். போதாக்குறைக்கு டிஃபண்டர்களும் 'Above the line' விளையாட, கோல்கள் அதிகம் வாங்கி, தோற்க நேரிட்டது. அதனால்தான் ரியல் மாட்ரிட் அநியாயத்துக்கும் சொதப்பியது. 

இதுபோன்ற சரிவை ஓர் அணி சந்திக்கும்போது, `basic game' ஆடவேண்டும். புதிய பயிற்சியாளராக சொலாரி பதவியேற்றபின் மாட்ரிட் அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இதுபோன்ற தருணத்தில் ரொனால்டோ போன்ற மேட்ச் வின்னர்கள் இருக்கவேண்டியது அவசியம். எப்படியேனும், எந்தச் சூழ்நிலையிலும் கோல் அடிக்கவேண்டும். ஆனால், இப்போது ரியல் மாட்ரிட்டால் அது முடியவில்லை. கேரத் பேல், ரொனால்டோவின் இடத்தை நிரப்பத் தவறிவிட்டார். அதுமட்டுமன்றி வரேன் ஃபார்ம் இழந்தது, கார்வகால், மார்செலோ அடுத்தடுத்து காயமடைந்தது, இஸ்கோ கால்பந்தே தெரியாததுபோல் ஆடுவது என மொத்தமும் ஒரே நேரத்தில் மாட்ரிட்டுக்கு வில்லனாக வந்து நிற்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு