Published:Updated:

`அரசிடம் அனுமதி பெறுவதில்லை; தன்னை மட்டுமே அடையாளப்படுத்துகிறது!'- பிசிசிஐ-யை தடை செய்ய வழக்கு

`அரசிடம் அனுமதி பெறுவதில்லை; தன்னை மட்டுமே அடையாளப்படுத்துகிறது!'- பிசிசிஐ-யை தடை செய்ய வழக்கு
`அரசிடம் அனுமதி பெறுவதில்லை; தன்னை மட்டுமே அடையாளப்படுத்துகிறது!'- பிசிசிஐ-யை தடை செய்ய வழக்கு

பி.சி.சி.ஐ அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த கீதாராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``இந்தியாவில் ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் மத்திய விளையாட்டுத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய விளையாட்டுத்துறையின் அனுமதியில்லாமல் பி.சி.சி.ஐ அமைப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்று தன்னை அடையாளப்படுத்துகிறது. மத்திய அரசின் அனுமதியில்லாமல், அரசு அமைப்பு என அறிவிக்கவும் மறுத்து வரும் பிசிசிஐ அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி என்று தன்னை அடையாளப்படுத்துவதுக்குத் தடை விதிக்க வேண்டும். அதேநேரம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்த நட்சத்திர சின்னத்தை பி.சி.சி.ஐ பயன்படுத்தி வருகிறது.

இது சட்டவிரோதமான செயல். போதாக்குறைக்கு வீரர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு மற்றும் பி.சி.சி.ஐ அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.