Published:Updated:

உங்களை மட்டுமல்ல... உங்கள் ப்ளேயர்ஸையும் கொஞ்சம் நம்புங்கள் கோலி! #AUSvIND

உங்களை மட்டுமல்ல... உங்கள்  ப்ளேயர்ஸையும் கொஞ்சம் நம்புங்கள் கோலி! #AUSvIND
News
உங்களை மட்டுமல்ல... உங்கள் ப்ளேயர்ஸையும் கொஞ்சம் நம்புங்கள் கோலி! #AUSvIND

சச்சின் கேப்டனாக இருந்தபோதும் இந்திய அணி இதே பிரச்னையைத்தான் சந்தித்தது. தான் எப்படி 100 சதவிகிதம் கொடுத்து ஆடுகிறோமோ அதேபோல் எல்லா ப்ளேயர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார் சச்சின். அது பொய்யாகும்போது வீரர்களிடம் கோபப்படுவது, அவர்கள் மேல் நம்பிக்கை இழப்பது என இருந்தார் சச்சின். சச்சின் கேப்டனாக இருந்தபோது பேட்டிங்கில் அவர் அதிகம் நம்பியது யாரைத் தெரியுமா?

மீண்டும் ஒருமுறை விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது கேப்டன் விராட் கோலியின் டீம் செலக்‌ஷன். பெர்த் டெஸ்ட்டில் இந்தியா மோசமானத் தோல்வியை சந்திக்கக் காரணமே டீம் செலக்‌ஷன் சரியில்லாததுதான் என விமர்சனங்கள் வைக்கப்பட, வழக்கம்போல அதை முழுமையாக மறுத்திருக்கிறார் கோலி.

`புவனேஷ்வர்குமார் பெர்த் டெஸ்ட்டில் ஏன் சேர்க்கப்படவில்லை’ என்ற கேள்விக்கு, போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் காரணம் சொன்னார் கோலி. ``புவனேஷ்வர் குமார் தொடர்ந்து பல நான்கு நாள் போட்டிகளில் விளையாடவில்லை. உமேஷ் யாதவ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்தார். அவர் நல்ல பெளலிங் ரிதம்மில் இருந்தார். அதனால்தான் உமேஷ் யாதவை தேர்ந்தெடுத்தோம்'' என்றார்.

உமேஷ் யாதவ் தனது கடைசிப் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்தார் என கோலி சொல்வது ஆஸ்திரேலியாவில் அல்ல. இந்தியாவில் மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த போட்டியில் எடுத்ததைத்தான் சொல்கிறார் கோலி. புவனேஷ்வர் குமாருக்கு டெஸ்ட்டில் அதிக அனுபவம் இல்லை என்கிற முன்முடிவோடு கோலி இருக்கும்போது, அவரை அணியில் தேர்ந்தெடுத்துவைத்திருப்பது எதற்காக? கேப்டன் இப்படி வெளிப்படையான விமர்சனத்தை ஒரு வீரரின்மேல் சொல்லும்போது அந்த வீரரின் மனநிலை எப்படி மாறும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புவனேஷ்வர்குமார்தான் இப்படியென்றால் அஷ்வின், ரவீந்திரா ஜடேஜா என இருவரையுமே கொஞ்சம் மட்டப்படுத்திப் பேசினார் கோலி.  `அஷ்வின் ஃபிட்டாக இருந்திருந்தால் பெர்த் டெஸ்ட்டில் அவர் இடம்பிடித்திருப்பாரா?’ என்று செய்தியாளர் கேட்டார். அதற்குக் கோலி, ``அப்படிச்சொல்ல முடியாது. நாதன் லயன் விக்கெட்டுகள் எடுக்கக் காரணம் ஸ்பின் அல்ல. பிட்ச்சில் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸைப் பயன்படுத்தித்தான் விக்கெட் எடுத்தார். நாங்கள் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதை முதலிலேயே கணித்துவிட்டதால் டீமாக நாங்கள் நான்காவது பெளலராக, வேகப்பந்து வீச்சாளருடன் போகவே முடிவெடுத்தோம்'' என்றார் கோலி.

அப்போதும் அவர் ஸ்பின்னரை அணிக்குள் எடுக்காதது தவறு என ஒப்புக்கொள்ளவில்லை. பெர்த் டெஸ்ட் போட்டியைப் பார்த்த எல்லோருக்குமே தெரியும் லயன் ஸ்பின்னால் விக்கெட் எடுத்தாரா அல்லது எக்ஸ்ட்ரா பவுன்ஸால் விக்கெட் எடுத்தாரா என்று. அப்படியே கோலி சொல்வதுபோல எக்ஸ்ட்ரா பவுன்ஸால் லயான் விக்கெட் எடுத்திருந்தால் இதேபோல் அஷ்வினுக்கோ, ஜடேஜாவுக்கோ பந்துவீச வராது எனச் சொல்லவருகிறாரா கோலி?

மூன்றாவதாகக் கோலி சொன்னதும் அபத்தம்தான். ``அஷ்வினோ, ஜடேஜாவோ அணிக்குள் இருந்திருந்தால் பேட்டிங்கும் செய்திருப்பார்களே... நான்கு டெய்ல் எண்டர்ஸ் இருந்ததால்தான் உங்களால் அதிகமாக ஸ்கோர் செய்யமுடியவில்லையோ?'' என்று கேட்டார் ஒரு நிருபர். ``இது மிகவும் கடினமான கேள்வி. நிச்சயம் அஷ்வினோ, ஜடேஜாவோ பேட்டிங்கில் உதவிகரமாக இருந்திருப்பார்கள். ஆனால், நாங்கள்  வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறங்குவது என டீமாக முடிவெடுத்துவிட்டோம். வெற்றிபெற்றிருந்தால் இந்தக் கேள்வி எழுந்திருக்காது'' என்று பதில் சொன்னார் கோலி.

உண்மையில் பெர்த் டெஸ்ட் தோல்விக்கு ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியதால் வெற்றிபெற்றது என்று கோலி சொன்னாரே தவிர, தான் எடுத்த முடிவுகள் எல்லாமே அந்தச் சூழலுக்குச் சரியானது என்றுதான் நியாயப்படுத்தினார்.

ஒரு கேப்டன், ஒரு தலைவன் தன்னுடைய அணியினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் ப்ளேயர்களைக்கொண்டு யார் எந்தப் போட்டிக்கு சரியாக இருப்பார்கள், யாரை நீக்க வேண்டும் என்று எந்த முன்முடிவும் இல்லாமல் யோசிக்க வேண்டும். ஆனால், கோலி எல்லோரையும் முன்முடிவோடு அணுகுகிறார் என்பதையே அவரின் டீம் செலக்ஷன் முடிவுகள் காட்டுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 4-1 என டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைய மிக முக்கியக் காரணம் கோலியின் அணித் தேர்வு. சரியான 11 பேர் கொண்ட ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காததால்தான் இந்தியா 4 போட்டிகளில் தோற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக வளர்த்தெடுக்கப்பட்டு அணிக்குள் சேர்க்கப்பட்ட புஜாரவை பென்ச்சில் உட்காரவைத்து அதிரவைத்தார். முதல் டெஸ்ட் போட்டி நடந்த பர்மிங்ஹாம் பிட்ச், பெர்த் பிட்ச் போன்றே வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால், இங்கே ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்குப் போதுமான ஓவர்களைக் கொடுக்காமல் அஷ்வினுக்கு 47 ஓவர்கள் பந்துவீசக்கொடுத்தார் கோலி. 

லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு படி மேலேபோய் இன்னும் கொஞ்சம் சொதப்பினார். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் இரண்டு ஸ்பின்னர்களுடன் இறங்கினார். உமேஷ் யாதவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். மூன்றே நாள்களில் மேட்ச் முடிந்தது. இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது.

மூன்றாவது டெஸ்ட்டில் கொஞ்சம் சுதாரித்தவராக இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய முரளி விஜய்யை வெளியே எடுத்தார் கோலி. ஆனால், அவருக்குப் பதில் இன்னொரு சொதப்பலான ஷிகர் தவானை அணிக்குள் கொண்டுவந்தார். இந்தியா இந்த டெஸ்ட்டை வென்றது. இந்த டெஸ்ட்டை வெல்ல ஒரே காரணம் ஹர்திக் பாண்டியா. ஆல்ரவுண்டராக அவர் அணியைக் காப்பாற்றினார். இதனால் தனது கேப்டன்ஷிப் வரலாற்றில் முதல்முறையாக மாற்றமே இல்லாத ப்ளேயிங் லெவனோடு நான்காவது டெஸ்ட்டுக்கு களமிறங்கினார் கோலி. இங்கே கோலி பிட்ச்சுக்கு ஏற்ற ப்ளேயர்களைத் தேர்வு செய்யாமல் வெற்றிபெற்ற காம்போ எனப் போனார். ஆனால், இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது இந்தியா. தொடரை 2-2 என சமன்செய்திருக்கும் வாய்ப்பு இருந்தும் ஆட்டம் கைநழுவிப்போனது.

ஐந்தாவது டெஸ்ட்டில் தொடரை இழந்துவிட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்தார் கோலி. ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார். அஷ்வினுக்குப் பதில் ஜடேஜா உள்ளே வந்தார். முதல் போட்டியிலேயே ஹனுமா விஹாரி அரை சதம் அடித்தார். ஜடேஜா நான்கு விக்கெட்டுகள் எடுத்ததோடு 86 ரன்களும் அடித்தார். ஆனால், இளம் வீரராக இங்கிலாந்தில் களமிறங்கிய ஹனுமா விஹாரியை உட்காரவைத்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோஹித் ஷர்மாவை அணிக்குள் கொண்டுவந்தார் கோலி. உண்மையில் இந்த டெஸ்ட் தொடர் முழுக்க வாய்ப்பளிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படவேண்டியவர் ஹனுமா விஹாரி. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆகமாட்டார் என ஒதுக்கிவைக்கப்பட்ட ரோஹித்துக்கு வாய்ப்பளித்தார். 

சச்சின் கேப்டனாக இருந்தபோதும் இந்திய அணி இதே பிரச்னையைத்தான் சந்தித்தது. தான் எப்படி 100 சதவிகிதம் கொடுத்து ஆடுகிறோமோ அதேபோல் எல்லா ப்ளேயர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார் சச்சின். அது பொய்யாகும்போது வீரர்களிடம் கோபப்படுவது, அவர்கள் மேல் நம்பிக்கை இழப்பது என இருந்தார் சச்சின். சச்சின் கேப்டனாக இருந்தபோது பேட்டிங்கில் அவர் அதிகம் நம்பியது யாரைத் தெரியுமா? ஜவகல் ஶ்ரீநாத். 1 டவுன் பேட்ஸ்மேனாக, பின்ச் ஹிட்டராக ஶ்ரீநாத்தைத்தான் களமிறக்குவார். இது ஆட்டோமேட்டிக்காக டிராவிட், லக்‌ஷ்மண் என மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையைக் குலைத்தது. அதைத்தான் இப்போது கோலியும் செய்துகொண்டிருக்கிறார்.

சிலர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் வாய்ப்பளிக்கிறார். ஆனால், சிலர் மீது மிகுந்த அவநம்பிக்கையோடு இருக்கிறார். அவர்கள் ஒருபோட்டியில் சொதப்பினால்கூட அவர்களை அணியில் சேர்க்க யோசிக்கிறார். இந்த அதிரடி அணுகுமுறையில் காணாமல் போனவர்தான் சென்னையில் முச்சதம் அடித்த கருண் நாயர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாது. 

1999-ம் ஆண்டின் இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. இந்தியாவின் மிக மோசமான தொடர்களில் இது முக்கியமானது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே அவமானகரமான தோல்வியை சந்தித்தது இந்தியா. சச்சின் கேப்டன்ஷிப் பொறுப்பில் இருந்து விலகினார். ஆனால், அப்போது இருந்த பலமான ஆஸ்திரேலிய அணி இப்போது இல்லை. அதிக அனுபவம் இல்லாத கேப்டன், ப்ளேயர்களையே கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. ஆனால், இந்த அணியிடமே முதல் டெஸ்ட்டில் தட்டுத்தடுமாறித்தான் வென்றது இந்தியா. கோலியின் வீரர்களின் மீதான இந்த அவநம்பிக்கை தொடருமேயானால் கேப்டனாக கோலி மிகப்பெரிய பின்னடைவை இந்த ஆஸ்திரேலிய தொடரில் சந்திக்க வேண்டியிருக்கும்.

என்ன செய்யப்போகிறார் கோலி என்பது மெல்போர்னில் தெரிந்துவிடும்!