பிலிப் ஹியூஸ் - உலக கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்தப் பெயரை மறந்திருக்க மாட்டார்கள். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர், கடந்த 2014 -ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சீன் அப்பாட் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் களத்திலே சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இந்த மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Photo Credit: ICC
ஆஸ்திரேலிய வீரர்களில் அதிக பொறுமையும் அனைவரிடமும் நட்பாகவும் பழகக்கூடிய ஹியூஸின் மரணத்தை அத்தனை எளிதாக ஆஸ்திரேலிய வீரர்களால் கடந்துவிட முடியவில்லை. அவரின் உடலை கண்ணீருடன் ஆஸ்திரேலிய வீரர்கள் சுமந்து வந்த காட்சியை கண்ட அனைவருமே கண்கலங்கினர். ஆஸ்திரேலிய வீரர்கள், அந்த மரணம் கொடுத்த தாக்கத்தில் இருந்து வெளி வர அதிக நாள்கள் எடுத்தது. இந்தக் கோர சம்பவம் நடைபெற்று 4 ஆண்டுகள் கழிந்துவிட்டது. ஆனாலும் இன்று ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அவருக்கு மரியாதை செய்து வருகின்றனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் அறையில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை குறித்து, பெர்த் போட்டியின் நாயகன் நாதன் லயன் தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகன் விருதை வென்ற லயன், பிலிப் ஹியூஸின் கோட் குறித்து பகிர்ந்துள்ளார்.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் அந்தக் கோட்டில் ஹியூஸின் டெஸ்ட் கேப் நம்பரான 408 என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய வீரர்கள் கூடி, அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரரை தேர்வு செய்து, அவருக்கு ஆட்டநாயகன் பரிசாக இந்தக் கோட் அணிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Photo Credit: Twitter/FoxCricket
இந்தக் கோட்டினை ஃபாக்ஸ் கிரிக்கெட் ஊடகத்தின் பேட்டியின்போது வெளியிட்ட லயன், ``இந்த கோட் அவருக்கு (பிலிப் ஹியூஸ்) நாங்கள் செய்யும் மரியாதை. இது எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு செய்யும் விருது. இந்தக் கோட்டை தற்போது வைத்திருப்பவர்கள், கடந்த போட்டியின் நாயகனாக இருப்பார்கள். இது ரொம்பவே ஸ்பெஷலான ஒன்று. இதை அணியும் வீரர் பெருமையுடன் நடப்பார்கள்” என்றார்.
ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் அறையின் பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், ``மறைந்த நமது நண்பருக்குச் செய்யும் சிறப்பான மரியாதை இது. தற்போது இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் குறிப்பாக அவருடன் விளையாடியவர்களுக்கு நெருக்கமான ஒன்றாக இருக்கும்” என்றார்.
இந்தக் கோட்டினை பெறும் வீரர்கள் பெயரும், அந்த ஆட்டத்தில் அவரின் செயல்பாடுகளும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் லயன் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.