Published:Updated:

எந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்! #IPL

எந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்! #IPL
எந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்! #IPL

எந்த அணிக்கு எப்படியான வீரர்கள் தேவை... 2019 ஐ.பி.எல் ஏலம் ரவுண்டப்! #IPL

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019...பொதுத்தேர்தலோடு மோதுகிறது ஐ.பி.எல் (#IPL) அதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் எங்கே நடக்கப்போகிறது, முழுவதும் தென்னாப்பிரிக்காவிலா, இல்லை ஐக்கிய அரபு அமீரகத்திலா, இல்லை அங்கு பாதி, இங்கு பாதியா, சரி, ஐ.பி.எல் தொடங்கும் அதிகாரபூர்வமான தேதி என்ன, முடிவது எப்போது? எதற்கும் பதில் இல்லை. ஆனால், ஏலம் நடக்கும் தேதியும், இடமும் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது ஏலம். இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் நடக்கும் ஏலம் எப்படி இருக்கும்?

'ஐ.பி.எல் நடக்கும் இடம் தெரிந்தால்தான் ஏலத்தில் பங்கேற்கமுடியும்' என்று சில அணிகள் கொடிபிடித்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில், அவர்கள் செய்வது சரிதான். இந்தியாவிலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திலோ நடந்தால் வழக்கமான பாணியிலேயே வீரர்களை வாங்கலாம். ஒருவேளை, தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடந்தால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு அங்கு எதுவும் செய்ய முடியாது. அதனால், போட்டி நடக்கும் நாடு பற்றி முன்னரே அறிவிப்பதுதான் சரி. 

இந்த விஷயத்தைக் கணக்கில் கொள்ளாமலும், ஒவ்வொரு அணிக்கும் அடிப்படைத் தேவை இருக்கிறது. போட்டி எங்கு நடந்தாலும், தரமான ஓப்பனர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், ஆல் ரவுண்டர், ஸ்பின்னர், வேகப்பந்துவீச்சாளர் என ஒவ்வொரு பொசிஷனுக்கும் தேவையான வீரர்களை எடுத்தே ஆகவேண்டும். ஆனால், கிங்ஸ் லெவன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் போன்ற அணிகள் அந்த இடங்களையே நிரப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு அணிக்கும் எந்த மாதிரியான வீரர்கள் தேவை, இருக்கும் பட்ஜெட்டில் அவர்கள் யாரை வாங்க வேண்டும், யாருக்கு இந்த ஏலத்தில் அதிக போட்டி இருக்கும், யாரெல்லாம் விலைபோக மாட்டார்கள்? கொஞ்சம் சிந்திப்போம்!

எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்!

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் தேசிய அணியின் பிராக்டீஸ் கேம்ப்பில் பங்கேற்கச் செல்லும் வாய்ப்புள்ளது. ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் ஸ்டார்க், ஜேசன் ராய் போன்ற வீரர்கள் கழட்டிவிடப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். ஃபார்ம் மட்டும் கிடையாது. இந்த நிலையில் ஃபின்ச். மேக்ஸ்வெல் இருவரும் இத்தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். மேலும், ஒரு சில வீரர்கள் ஏலம் போகாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. பலமுறை தொடர் தொடங்கும் முன் ஸ்டார்க் விலகியுள்ளதால், அவரை எடுக்க அணிகள் போட்டு போடுவது சந்தேகம்தான். வங்கதேச வீரர் முஸ்தாஃபிசூர் ரஹ்மான் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. ஃபிட்னஸ் காரணமாக, அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. 

இந்த ஏலத்தின் முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது யுவராஜ் சிங்! டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் என ஒவ்வொரு முறையும் ஐ.பி.எல் அணிகளால் கழற்றிவிடப்பட்டவர் இந்தமுறை கிங்ஸ் லெவன் நிர்வாகத்தாலும் கழற்றிவிடப்பட்டுள்ளார். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக கம்பேக் கொடுத்தாலும், இந்த முறை யுவிக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. இந்த ஆண்டில் அவர் எதுவுமே நிரூபிக்கவில்லை. ஐ.பி.எல் ஏலத்தின் காஸ்ட்லி பிளேயர், 'Unsold' வரிசையில் சேரும் கொடுமையை இந்த ஐ.பி.எல் நமக்குக் கொடுக்கப்போகிறது.

ஒவ்வொரு அணிக்கும் எப்படியான வீரர்கள் தேவை, யாரை வாங்கலாம்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

3 வீரர்களை மட்டுமே விடுவித்து, அதே அணியோடு தொடங்கப்போகிறது சாம்பியன் சூப்பர் கிங்ஸ். அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாடமுடியும் என்பதால், பிரெண்டன் மெக்கல்லம் சென்னைக்கு கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது! ஆனால், இன்னும் 8.4 கோடி ரூபாய் இருப்பு இருப்பதால், அனுபவமிக்க இந்திய வீரர்களை வாங்க வாய்ப்பிருக்கிறது. ஹர்பஜனுக்கு வயதாகிவிட்டதால், நல்ல ஸ்பின்னர் தேவை. உள்ளூர் போட்டிகளில் 'மிஸ்ட்ரி ஸ்பின்னராக' வலம் வரும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை வாங்க வாய்ப்புகள் அதிகம். 

இருப்புத் தொகை : 8.4 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்

மேக்ஸ்வெல், ஜேசன் ராய், முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களை விடுவித்ததோடு, ஷபாஸ் நதீம், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா ஆகியோரை சன்ரைசர்ஸ் பக்கம் அனுப்பிவிட்டதால், நிரப்பவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. தவானை வாங்கியிருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். தவான், பிரித்வி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் என இந்திய வீரர்களை உள்ளடக்கிய டாப்-4 அற்புதமாக இருக்கிறது. கிறிஸ் மோரிஸ் அணிக்குத் திரும்புவதும் ட்ரென்ட் போல்ட், ரபாடா ஆகியோரின் ஃபார்மும் கூடுதல் பலம். இந்திய பௌலர்களும், வெளிநாட்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும்தான் டெல்லி அணியின் பிரதானமாக இருப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹிட்மேயர், இந்திய வேகப்பந்துவீச்சாளர் வருண் ஆரோன் ஆகியோர் நல்ல சாய்ஸ்.

இருப்புத் தொகை : 25.5 கோடி  

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

தொடரின் பாதியிலேயே சென்றுவிடக்கூடிய ஸ்டார்க்கை ரிலீஸ் செய்தவர்கள், கிறிஸ் லின் பற்றியும் யோசித்திருக்க வேண்டும். ஏலத்தில் விட்டு திரும்ப எடுத்திருந்தால், கடந்த ஆண்டைப்போல் 9-10 கோடிக்கெல்லாம் போயிருக்கமாட்டார். சில கோடிகளை மிச்சப்படுத்தி, வேறு வீரரில் அதை முதலீடு செய்திருக்கலாம். நைட்ரைடர்ஸ் நிர்வாகம் கொஞ்சம் வணிக ரீதியாகவும் கணக்கிட்டிருக்க வேண்டும். கையில் இருப்பதோ வெறும் 15.2 கோடி ரூபாய். அணியில் இருப்பதோ மூன்றே வெளிநாட்டு வீரர்கள். அதுபோக பிரசித் கிருஷ்ணா, சிவம் மாவி போன்ற இந்திய பௌலர்கள். கொல்கத்தா இந்த ஆண்டு ஏலத்தில் ரொம்பவே திணறப்போகிறது. கொஞ்சம் தெளிவாக யோசித்து வேகப்பந்துவீச்சிலும், ஆல் ரவுண்டர்கள் ஏரியாவிலும் அணியை பலப்படுத்த வேண்டும்.

இருப்புத் தொகை : 15.2 கோடி  

மும்பை இந்தியன்ஸ்

மிடில் ஆர்டரில் விளையாடும் ஒரு வெளிநாட்டு பேட்ஸ்மேன், ஒரு இந்திய ஸ்பின்னர், 2 இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கினால், மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா பாக்ஸ்களையும் டிக் செய்துவிடும். கடந்த ஆண்டு ஆடிய ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது. பொல்லார்ட் மட்டும் வெளியில் உட்காரவைக்கப்படலாம். சொல்லப்போனால், அவரை தக்கவைத்திருக்கவே தேவையில்லை. மற்றபடி, கடந்த ஆண்டு ஆடிய வீரர்களே தொடர்வார்கள். உள்ளூர் போட்டிகளில் அசத்தும் மும்பை வீரர்கள் ஷிவாம் தூபே, ஷாம்ஸ் முலானி வாங்கப்படலாம். அதிரடி பேட்ஸ்மேன்களை மும்பை அணி எப்போதுமே விரும்புவதால், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஹிட்மேயருக்கு போட்டி போடுவது உறுதி. மும்பை, கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் - ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஃபிட்னஸ். உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அவர்கள் தேவை என்பதால், அவ்வப்போது அவர்களுக்கு ஓய்வு தரும் வகையிலான வீரர்களை வாங்குவது இந்திய அணிக்கு நல்லது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி பௌலருக்குப் போட்டியிடலாம்.

இருப்புத் தொகை : 11.15 கோடி  

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வேகப்பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என அனைத்து ஏரியாவிலும் வீரர்களை வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப். 10 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, மற்ற அனைவரையும் கழற்றிவிட்டுள்ளதால், இந்த ஏலத்திலும் பிரீத்தி ஜிந்தாவுக்கு காத்திருக்கிறது மிகப்பெரிய ஷாப்பிங் அனுபவம். 4 வெளிநாட்டு வீரர்களில் கவனிப்புடன் செலவு செய்ய வேண்டும். அதேபோல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால், அந்த ஏரியாவிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஒருவேளை தொடர் தென்னாப்பிரிக்கா பக்கம் சென்றுவிட்டால் கிங்ஸ் லெவன் நிலமை மோசமாகிவிடும். ஸ்டாய்னிஸை விட்டது பின்னால் அவர்களைத் தாக்கக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக... கேப்டனாக அஷ்வின் தொடர்ந்தாலும் பரவாயில்லை, சரியான முடிவுகள் எடுக்கக்கூடிய ஒரு லீடரை பஞ்சாப் வாங்க வேண்டும். ஜோ ரூட்டுக்கு முதல் ஐ.பி.எல் வாய்ப்பு வழங்கினால், அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். 

இருப்புத் தொகை : 36.2 கோடி  

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏலத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய அணி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் கடைசி வாரங்களில், சொந்த ஊருக்குத் திரும்பிவிடும் வாய்ப்புள்ளது. அதனால், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் என மிகப்பெரிய வீரர்களை நிரப்ப, சரியான வீரர்களை அவர்கள் வாங்கியாக வேண்டும். அந்த வீரர்களும் அந்த இரு நாடுகளைச் சேராதவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் ஸ்டைலில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ், கமிந்து மெண்டிஸ் என வெளியில் தெரியாத வீரர்களை வாங்கலாம். இல்லை திசாரா பெராரே போன்ற அனுபவ வீரருக்குக் குறிவைக்கலாம். அதேபோல் கடந்த ஆண்டு சொதப்பிய வேகப்பந்துவீச்சிலும் நல்ல வீரர்களை வாங்குவது அவசியம். முகமது ஷமி, வருண் ஆரோன் போன்ற அனுபவ வீரர்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும். 

இருப்புத் தொகை : 20.95 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

நல்ல ஓப்பனர், விக்கெட் கீப்பர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என டாப் ஆர்டரில் ஏகப்பட்ட ரிப்பேர்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆர்.சி.பி. உமேஷ் யாதவ், சஹால், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கூல்டர்நைல், டிம் சவுத்தி, முகமது சிராஜ் என பௌலிங் படை பலமாக இருந்தாலும், பேட்டிங் சுமாராகவே இருக்கிறது. கோலி, டி வில்லியர்ஸ் தவிர்த்து பெரிய பேட்ஸ்மேன் என்று சொல்லிக்கொள்ளுமளவுக்கு யாரும் இல்லை. மந்தீப் சிங், சர்ஃபராஸ் கான் இருவரையுமே விட்டது அணியை பாதிக்கலாம். ஸ்டோய்னிஸ், கூல்டர்நைல், மொயீன் அலி ஆகியோர் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளதால், வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் கவனம் தேவை. அதேசமயம், கோலி, டி வில்லியர்ஸ் இருப்பதால், அதிரடி பேட்ஸ்மேன்களாக வாங்காமல், ஷாய் ஹோப், தினேஷ் சந்திமால் போல் இன்னிங்ஸ் பில்ட் செய்யும் வீரர்களை வாங்குவது நல்லது.

இருப்புத் தொகை : 18.15 கோடி ரூபாய்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சூப்பர் கிங்ஸ் தவிர்த்து `கம்ப்ளீட்' பேக்காஜாக இருக்கும் இன்னொரு அணி. வார்னர் திரும்பியிருப்பதால், தவானை வெளியே அனுப்பும் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளனர். வார்னர், வில்லியம்சன் என்ற இரு பெரும் வீரர்களோடு, ஃபார்மில் இருக்கும் கோஸ்வாமியும் இருப்பதால், டாப் ஆர்டரில் தவானின் இழப்பு பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், வார்னர், கடைசி வாரங்களில் ஆஸ்திரேலியா திரும்ப நேர்ந்தால், அதற்கு சரியான மாற்று வீரரை இந்த ஏலத்தில் வாங்க வேண்டும். வேகப்பந்துவீச்சில், தேவைக்கு அதிகமாகவே வீரர்கள் இருக்கிறார்கள். ஷபாஸ் நதீமின் வரவு, சுழல் ஏரியாவையும் பலப்படுத்தியிருக்கிறது. இவர்களின் ஒரே தேவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான். விஜய் ஷங்கர், தீபக் ஹூடா, யுசுஃப் பதான் போன்றவர்கள் இருந்தாலும், கன்சிஸ்டென்ட்டாக ஆடும் ஒரு ஆள் தேவை. அருமையான ஃபார்மில் இருக்கும், இந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரியை மீண்டும் வாங்கினால் சூப்பராக இருக்கும். 

இருப்புத் தொகை : 9.7 கோடி ரூபாய்

2018-ல் நோ... 2019-ல் எஸ்..!

கடந்த ஆண்டு ஏலத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஏலம் போகவில்லை. சென்ற முறை ஐ.பி.எல் அணிகளை ஈர்க்காத ஒருசிலர் இந்த ஆண்டு பரபரப்பைக் கூட்ட வாய்ப்புள்ளது. அவர்களுள் டாப் டார்கெட்கள்.

ஒஷேன் தாமஸ்

கடந்த ஏலத்தின்போது இவரைப் பற்றி பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனால், இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் உலகத்துக்கே தன் பெயரை அறிவித்துச் சென்றுவிட்டார். இவரது வேகம் நிச்சயம் இந்தமுறை கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ், நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகள் இவருக்குக் கடும் போட்டிபோடக்கூடும். 

ஹனுமா விஹாரி

தன் வாழ்நாளின் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார் விஹாரி. இந்திய அணி அறிமுகத்துக்குப் பிறகு, தியோதர் டிராஃபி தொடரில் பட்டையைக் கிளப்பி, 'நான் டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லை' என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆஃப் ஸ்பின் பௌலிங் செய்யக்கூடியவர் என்பதால், ஐ.பி.எல் அணிகளின் விஷ் லிஸ்டில் நிச்சயம் இடம்பிடிப்பார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால், அனைத்து அணிகளுமே போட்டிபோடும். உள்ளூர் வீரர், முன்னாள் வீரர் என்பதாலும் மிடில் ஆர்டரில் சிக்கல்கள் இருப்பதாலும் சன்ரைசர்ஸ் நிச்சயம் இவரை வாங்க முயற்சி செய்யும்

வருண் ஆரோன்

சில ஆண்டுகளாக தொடர்ந்து அனைத்து ஃபார்மட்களிலும் சொதப்பி, இந்திய அணி வாய்ப்பு மட்டுமல்லாமல், ஐ.பி.எல் வாய்ப்பையும் இழந்திருந்தார் ஆரோன். ஆனால், கடந்த சில மாதங்களாக இவரது செயல்பாடு பிரமிக்கும்வகையில் இருக்கிறது. விஜய் ஹசாரே தொடரில் 8 போட்டிகளில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர், இப்போது ரஞ்சியிலும் விக்கெட் வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார். கோடிகள் நிச்சயம்!

கரண் கௌஷல்

தன் முதல் உள்ளூர் சீசனிலேயே, விஜய் ஹசாரே தொடரின் முதல் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் கரண் கௌஷல். ரஞ்சிக் கோப்பையிலும் அசத்தல் அறிமுகம் கொடுத்திருக்கும் கௌஷல், ராயல் சேலஞ்சர்ஸ், ராயல்ஸ் போன்ற ஓப்பனர்கள் அதிகம் இல்லாத அணிகளுக்கு நல்ல சாய்ஸ். ஒருநாள் போட்டிகளிலும் டி-20 போட்டிகளுக்கான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பதால், நல்ல விலைக்குப்போக வாய்ப்புள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு