Published:Updated:

அசத்திய பந்துவீச்சாளர்கள்; சொதப்பிய டாப் ஆர்டர்! - பெர்த் டெஸ்டில் திணறும் இந்தியா #AUSvIND

அசத்திய பந்துவீச்சாளர்கள்; சொதப்பிய டாப் ஆர்டர்! - பெர்த் டெஸ்டில் திணறும் இந்தியா #AUSvIND
அசத்திய பந்துவீச்சாளர்கள்; சொதப்பிய டாப் ஆர்டர்! - பெர்த் டெஸ்டில் திணறும் இந்தியா #AUSvIND

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சேர்த்திருக்கிறது.

Photo Credit: BCCI

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3 வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்ந்திருந்தது. உஸ்மான் கவாஜா 41 ரன்களுடனும் கேப்டன் டிம் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Photo Credit: ICC

முந்தைய நாள் ஸ்கோருடன் 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வீரர் முகமது ஷமி நெருக்கடி கொடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, 93.2 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

Photo Credit: ICC

சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வழக்கம்போல் ஏமாற்றம் அளித்தார். அவர் ஆட்டமிழந்த சிறிதுநேரத்திலேயே புஜாராவும் 4 ரன்களில் வெளியேற, 13 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த தொடக்க வீரர் முரளி விஜய் மற்றும் கோலி ஜோடி நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். விஜய் 20 ரன்களும் விராட் கோலி 17 ரன்களும் எடுத்தனர்.

Photo Credit: ICC

இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தது. இன்றைய நாள் முடிய சில ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ரஹானே 30 ரன்களில் ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் சேர்ந்திருந்தது. விஹாரி 24 ரன்களுடனும் பன்ட் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை.