Published:Updated:

மாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா

மாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா
மாஸ் காட்டிய ஷமி; அதிர்ச்சி அளித்த கடைசி விக்கெட் - சவாலான இலக்கை நோக்கி இந்தியா

பெர்த் மைதானத்தில் நடைபெற்றுவரும் 2 -வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 287 ரன்கள் தேவை. இந்திய வீரர் ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 


இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2 -வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்தியா, கோலியின் அதிரடியான சதத்தின் உதவியால் 283 ரன்கள் எடுத்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 -வது நாளின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

இன்று 4 -ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. ஆனால் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர் ஆஸ்திரேலியாவின் டிம் பெய்னும், கவாஜாவும். இதனால் உணவு இடைவேளைவரை விக்கெட் இல்லாமல் ஆஸ்திரேலியா வலுவான இலக்கை நோக்கி முன்னேறியது. 

ஆனால், உணவு இடைவேளைக்குப் பின்னர், நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதிரடி காட்டினார். பெய்ன், மற்றும் பின்ச் அடுத்தடுத்த பந்துகளில் ஷமியின் வேகத்தில் நடையைக் கட்டினர். அடுத்துக் களமிறங்கிய லயன் மற்றும் கவாஜாவை ஷமி வெளியேற்ற, கம்மின்ஸ் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனால் ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியா குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், தடுமாறியது. 207 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா கடைசி விக்கெட்டில் இந்திய வீரர்களுக்குப் போக்குக் காட்டினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் பெர்த் போட்டியில் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற இந்தியாவுக்கு 287 ரன்கள் தேவை .

பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இந்திய வீரர்கள் அதிக பொறுமையுடன் விளையாட வேண்டியது அவசியம். பெர்த் மைதானத்தில் 250 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வது கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். இன்னும் ஒரு நாள் முழுமையாக இருப்பதால் இன்றைய நாளில் இந்திய அணி அதிக விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.