Published:Updated:

20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்! #AUSvIND

20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்! #AUSvIND
20 ஓவரில் 23 ரன்... கோலி - புஜாரா நங்கூரம்... ரஹானே அதிரடி... பெர்த் டெஸ்ட் ஸ்பெஷல்! #AUSvIND

ஹே சில்வுட், நேதன் லயான் இருவரும் தலா 3, கம்மின்ஸ் 2 என மொத்தம் 6 மெய்டன் ஓவர்களை வீசினர். ஆனால், கோலியும், புஜாராவும் அசரவில்லை. இதை ட்விட்டரில் ஒரு ரசிகர்  `Irresistible Force Vs Immovable Object’ என வர்ணித்தார்.

பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகம் எனில், இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்தியது இந்தியா. குறிப்பாக, விராட் கோலி. இந்தியக் கேப்டன் களமிறங்கியபோது இந்தியாவின் ஸ்கோர் 8/2. ஒருவித பதற்றத்துடனேயே களத்துக்குள் நுழைந்தார். ஆனால், இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்து கெத்தாக பெவிலியன் திரும்பினார். அப்போது அவரின் உடல்மொழியைக் கவனித்திருந்தாலே தெரியும், இரண்டாவது நாளில் இந்தியா எப்படி ஆடியது என்று. ஆம், அட்டகாசமான டெஸ்ட் இன்னிங்ஸ் இது. ஆஸ்திரேலியா பெளலர்கள் வரிந்துகட்டிக் கொண்டு பந்துவீசினர். ஆனால், கே.எல்.ராகுல், முரளி விஜய் தவிர்த்து, கோலி, புஜாரா, ரஹானே மூவருமே ஆஸிக்கு தாங்கள் யார் என்பதைக் காட்டி விட்டனர். #AUSvIND

ஆரம்பத்தில் இந்தியா கொஞ்சம் தடுமாறியது. மிச்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் என வேகப்பந்தைக் கூட கோலி எளிதாகச் சமாளித்துவிட்டார். ஆனால், நேதன் லயான் பந்தில் மட்டும் கொஞ்சம் தடுமாறி விட்டார். அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் விழுந்த பந்து டர்ன் ஆகாது என்று நினைத்து, கோலி ஃப்ரன்ட் ஃபுட் எடுத்து வைத்து பந்தைத் தொடாமல் விட்டார். ஆனால், அது அற்புதமாக டர்னாகி ஆஃப் ஸ்டம்ப்பின் மேல் முனையை உரசுவது போலச் சென்றது. தப்பிப் பிழைத்தார் கோலி. ஆனால், அடிலெய்டு டெஸ்ட்டிலேயே நேதன் லயான் பந்தை எப்படி டீல் செய்ய வேண்டும் எனப் பாடம் எடுத்து விட்டார் புஜாரா. இந்த டெஸ்ட்டிலும் மிடில் ஸ்டம்ப் லைனில் வரும் பந்தை டவுன் தி லைன் வந்து தடுத்துக்கொண்டே இருந்தார் புஜாரா.

பத்து ஓவர் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 38/2. 30-வது ஓவர் முடிவில் 61/2. அதாவது, இருபது ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தனர். விக்கெட்டும் இழக்கவில்லை. இத்தனைக்கும் களத்தில் இருப்பது இரண்டு பெஸ்ட் டெஸ்ட் பிளேயர்கள். ஹே சில்வுட், நேதன் லயான் இருவரும் தலா 3, கம்மின்ஸ் 2 என மொத்தம் 6 மெய்டன் ஓவர்களை வீசினர். ஆனால், கோலியும், புஜாராவும் அசரவில்லை. இதை ட்விட்டரில் ஒரு ரசிகர்  `Irresistible Force Vs Immovable Object’ என வர்ணித்தார். இருவரும் பிட்ச்சை உணர்ந்து, எதிரணி பெளலர்களை மதித்து, பார்ட்னர்ஷிப் பில்ட் செய்தனர். இதுபோன்ற தருணங்களில்தான் டெஸ்ட் கிரிக்கெட் சுவாரஸ்யம் பெறுகிறது. ஒரு வழியாக 22 ஓவர்களுக்குப் பின் இந்தியாவுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. குட் லென்த்தில் டிரைவ் செய்வதற்கு ஏதுவான இடத்தில் விழுந்த பந்தை நேர்த்தியான கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடித்தார் கோலி. 

கடைசி செஷனில் ஆஸ்திரேலியா ஒரு திட்டத்தோடு வந்திருந்தது. அவுட் சைட் தி லைனில் வீசி கோலியை டிரைவ் ஆடத் தூண்டிக் கொண்டே இருந்தார் கம்மின்ஸ். ஸ்டார்க் ஷார்ட் லென்த் அதேநேரம் பெளன்ஸராக வீசினார். கம்மின்ஸ் பந்தில் புஜாரா எல்பிடபிள்யு-வில் இருந்து தப்பினார். ஆனால், ஸ்டார்க் பந்தில் லைக் சைட் சென்ற பந்தைத் தொட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் புஜாரா. இத்தனைக்கும் இது அட்டகாசமான பந்தும் இல்லை. `லெக் ஸ்லிப் நிற்க வைத்து, உடம்பை நோக்கி ஷார்ட் பாலாக வீசுவது’ என ஸ்டார்க் பிளான் வைத்திருந்தாரா, அல்லது அது யதார்த்தமாக நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், 103 பந்துகளைச் சந்தித்து 24 ரன்கள் எடுத்து, ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த புஜாராவின் அவுட், இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு. 

முதன்முறையாக பெர்த் பிட்ச்சில் எழுந்த பெளன்ஸரை உருப்படியாகப் பயன்படுத்தினார் ரஹானே. கம்மின்ஸ் 138 கி.மீ வேகத்தில் பெளன்ஸராக வீசியதை கட் மூலம் பேக்வோர்ட் பாயின்ட் பக்கம் பவுண்டரிக்கு விரட்டி, அடுத்து 140 கி.மீ வேகத்தில் வந்த பந்தை ஃப்ளிக் செய்து 3 ரன்கள் எடுத்து, வந்தவுடனேயே மிரட்டினார் ரஹானே. அவர் ஒரு தீர்க்கமான முடிவோடு வந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஷார்ட் லென்த்தில் விழுந்த பந்தை கட் செய்ய தடுமாறவில்லை. ஸ்டார்க் லைனை மிஸ் செய்தபோது, அதை ஹூக் செய்து பவுண்டரி விளாசவும் தவறவில்லை. ரஹானேவின் இந்த ஆட்டம், சாரி, ஆட்டிட்யூட் பார்க்கவே நன்றாக இருந்தது. ரஹானே - கோலி பார்ட்னர்ஷிப் இந்தநாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர். அது நடந்தும் விட்டது. 

அதீத டிரைவ் ஆபத்து என்பதால், ஷார்ட் செலக்ஷனில் கவனமாக இருந்தார் கோலி. ஆனால், ஹேசில்வுட் பந்தில் ஸ்ட்ரெய்ட் டிரைவ் அடித்து தான் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேன் என நிரூபித்தார் ரஹானே. அடுத்த பந்தே ஒரு கட். அதுவும் பவுண்டரி. முடிந்தவரை நேதன் லயான் பந்தை புஜாரா பாணியில் டவுன் தி லைன் வந்து எதிர்கொண்டு, வேகப்பந்தை வெளுத்து, ஆஸி பவுலர்களை தன் பக்கம் கவனம் ஈர்த்து,17-வது அரைசதம் அடித்தார் ரஹானே. இரண்டாவது செஷனில் புஜாரா எனில், மூன்றாவது செஷனில் ரஹானே பக்கபலமாக இருந்தது, இந்தியக் கேப்டனுக்கு சாதகமாகிவிட்டது. 

இக்கட்டான சூழலில், இக்கட்டான பிட்ச்சில் பொறுப்பு உணர்ந்து ஆடுவது ரஹானேவின் பியூட்டி. புஜாரா அவுட்டானதும் பொறுப்பை தன் தோளில் எடுத்துக்கொண்டு ரஹானே ஆடியது வேற லெவல் ஆட்டம். நான்காவது விக்கெட்டுக்கு ரஹானே - கோலி ஜோடி 184 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்தது. ரஹானே மட்டும் 103 பந்துகளைச் சந்தித்தார். விராட் கோலி களத்தில் இருக்கும் வரை கோலிதான் எதிரணியின் பிரைம் டார்கெட். ஆனால், கடைசி செஷனில் முழுக்க முழுக்க ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, கோலியை நெருக்கடியிலிருந்து விடுவித்தார் ரஹானே. கடைசி வரை கோலி விக்கெட்டை எடுக்க முயன்ற ஆஸ்திரேலிய பெளலர்களின் முயற்சி பலிக்கவில்லை. கோலி 82, ரஹானே 51 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

கோலி அடித்த 82 ரன்களில் 26 ரன்கள் கவர், மிட் ஆஃப் திசையில் வந்தவை. 30 ரன்கள் மிட் ஆன், மிட் விக்கெட் ஏரியாவில் கிடைத்தவை. ஆன் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கவர் டிரைவ், கட், ஃப்ளிக் என கோலி வெரைட்டியில் வெளுத்துக் கட்டினார். ஆனால், அதைவிட 181 பந்துகளை அவர் எதிர்கொண்ட விதமே அழகு. நாளுக்குநாள் கோலியின் பேட்டிங் மெருகேறி வருகிறது. கோலி நாளை சதம் அடிக்கும் பட்சத்தில் அது இன்னுமொரு மாஸ்டர் இன்னிங்ஸாக இருக்கும். 

அடுத்த கட்டுரைக்கு