பிரீமியம் ஸ்டோரி

நீங்கள் ஓய்வுபெறும் நாள் குறித்து கனவு கண்டிருக்கிறீர்களா? கடைசி நாளில் உங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த சாதனையை உங்கள் மனம் சுமந்துவரும்? உங்கள் அருகில் நிற்கப்போகிறவர்கள் யார், உங்களைப் பாராட்டப்போகிறவர்கள் யார், ஃபேர்வெல் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

நாம்  காணும்  கனவு பலிக்குமோ இல்லையோ அலெஸ்டர் குக் கண்ட கனவு பலித்திருக்கிறது!

விரக்தியில் அல்ல யோசித்தே அந்த முடிவை எடுத்தார் குக். ‘’இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டோடு விடைபெறுகிறேன். உங்களிடம் இருந்து இந்த உலகம் எதிர்பார்க்கும்போதே விலகிவிடவேண்டும். `இவன் எப்போது போவான்' என யாரையும் நினைக்கவைத்து விடக்கூடாது’’ என்றார் குக். ஆனால் கடைசி டெஸ்ட்டில் ஒரு சதம், ஒரு அரை சதம்  என 218 ரன்கள் அடித்து உலகம் இன்னும் என எதிர்பார்க்கும்போதே எண்ட் கார்ட் போட்டிருக்கிறார்  அலெஸ்டர் குக்.

2006-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்த இங்கிலாந்து அணியில் முதல்முறையாக இடம்பெற்றிருந்தது அலெஸ்டர் குக் என்னும் அந்தப் பெயர். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் என இருவருமே உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த சீஸன் அது. ஆனால் முதல் இன்னிங்ஸிலேயே தான் ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேன் என நிரூபித்தார் குக். முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள். இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் நாட் அவுட். ஹர்பஜன் சிங்கும், அனில் கும்ப்ளேவும் மாறி மாறி 60 ஓவர்களுக்கு மேல் பந்து வீசியும் குக்கின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்து அடுத்த பத்தாண்டுகளுக்கான ஓப்பனிங் பேட்ஸ் மேனை அன்று, அங்கேதான் கண்டெடுத்தது.

வெல்டன் குக்!

2006 நாக்பூர் டெஸ்ட் முதல் 2018 ஓவல் டெஸ்ட் வரை இங்கிலாந்து விளையாடிய 158 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடியிருக்கிறார் அலெஸ்டர் குக்.  12 ஆண்டுகள் இங்கிலாந்துக்காக இடைவிடாது டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சாதனையும் குக்கிடமே இருக்கிறது. அவருக்கு ஃபிட்னெஸில் எந்த சிக்கலும் வந்ததில்லை. காயங்கள் ஏற்பட்டதில்லை. கடைசி டெஸ்ட் வரை அவுட் ஆஃப் ஃபார்மில் போனதேயில்லை.

தனக்கு என்ன தெரியுமோ அதில்தான் தொடரவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தவர் குக். இரண்டே ஆண்டுகள்தான் 20/20 கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அது தனக்கான  ஃபார்மேட் இல்லை என்றவுடனே நிறுத்திவிட்டார்.  அதுவும் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டி முடிந்ததுமே விலகிவிட்டார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்தியும் நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஆமாம், தெரியாத சமையலறையில் செஃப்பாக இருக்க அவர் விரும்பவில்லை. 

டெஸ்ட் மட்டுமே ஆடும் பேட்ஸ்மேனான பின் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி யிருக்கிறார் குக். மொத்தம் 97 இன்னிங்ஸ்கள். இதில் 8 சதங்களும், 19 அரை சதங்களும் அடித்திருக்கிறார். 263, 244,243 என இரட்டை சதங்கள் மூன்று. இதில் கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் மிக முக்கியமானது. 327 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆக, இங்கிலாந்து தனது பேட்டிங்கை தொடங்கும். இங்கிலாந்தின் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டேயிருக்கும். ஆனால் அலெஸ்டர் குக் மட்டும் களத்தில் நிற்பார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக குக் அன்று அடித்தது 244 ரன்கள். இங்கிலாந்து 491 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் குக் மட்டும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இறுதிவரை நின்று ஆஸ்திரேலிய பெளலிங்கை வெளுத்தார்.

எப்போது தொடங்கவேண்டும் என்றல்ல... எப்போது முடிக்கவேண்டும் என்று தெரிந்தவர் குக். உச்சத்தில் இருக்கும்போதே, வெற்றியாள ராக, மேட்ச் வின்னராக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார்!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு