Published:Updated:

குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்! #AUSvIND

குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்! #AUSvIND
குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் ஐந்தே ரன்கள்... ஆஸியை நிமிரச் செய்த மார்கஷ் ஹாரிஸ்! #AUSvIND

`லோக்கல் வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் ஆட்டம் செம. அவர் குட் லென்த்தில் விழுந்த பந்துகளைத் தொடவே இல்லை. அதாவது குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்திரேலியாவில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியையும், ஏதோ ஒரு காரணம் சொல்லி `இது உக்கிரமான மேட்ச்’ என உசுப்பேற்றுவார்கள். போதாக்குறைக்கு முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்ட்டை வென்ற உற்சாகத்தில் இருந்தது இந்தியா. பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்தது ஆஸி... #AUSvIND

அடிலெய்ட் மாதிரி இருக்காது. இது புது ஸ்டேடியம் (Optus Stadium), கிராஸ் விக்கெட், முதல் சர்வதேச டெஸ்ட் மேட்ச் என பெர்த் டெஸ்ட் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். `பிட்ச் எங்கடா’ எனத் தேடுமளவு ஆடுகளம் முழுவதும் நிறைந்திருந்தன புற்கள். `பேஸ் மட்டுமல்ல பெளன்ஸும் இருக்கும்’ என முந்தைய நாளே எச்சரித்திருந்தார் பிட்ச் கியூரேட்டர். அவர் சொன்னது உண்மை. 

பொதுவாக, பெர்த் WACA ஸ்டேடியம் வேகத்துக்கு ஒத்துழைக்கும் என்பதால், முடிந்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுடன்தான் விசிட்டிங் டீம் களமிறங்கும். 2012 ஜனவரியில் WACA-வில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜாகிர் கான், உமேஷ், வினய் குமார், இஷாந்த் ஷர்மா என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்தியா. டேவிட் வார்னர் சதம் அடிக்க, அந்த டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் அதே பெர்த்... ஆனால், ஸ்டேடியம் வேறு (Optus Stadium). இந்த முறை இஷாந்த், உமேஷ், ஷமி, பும்ரா என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார் கோலி. 

மெயின் ஸ்பின்னர் இல்லையா? `ரவீந்திர ஜடேஜாவை எடுத்திருக்க வேண்டும். இந்தியா தவறு செய்துவிட்டது’ என மைக்கேல் வாகன் ட்வீட் செய்திருந்தார். அவர் மட்டுமல்ல, பலரது நினைப்பும் அதுதான். ஏனெனில், `என்னதான் பிட்ச் வேகத்துக்கு ஒத்துழைத்தாலும், சமீபத்தில் இந்த மைதானத்தில் நடந்த உள்ளூர் போட்டியில், நாதன் லயன் 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்’ என இன்னொரு தரப்பு புள்ளி விவரங்களை அடுக்கினார்கள். ஆனால், தன்னை அணியில் சேர்த்ததற்கு நியாயம் சேர்த்தார் விஹாரி. ``இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள். அதுவும் இந்த இன்னிங்ஸில் முக்கியமான விக்கெட்டுகள். ஹனுமா விஹாரியை நான் பார்ட் டைம் பெளலர் என நினைக்கவில்லை’’ என்றார் வர்ணனையின்போது கவாஸ்கர்.  

ஆம். 34 ஓவர்கள் முடிந்து 35-வது ஓவரில் ஹனுமா விஹாரி கையில் பந்தைக் கொடுத்தார் விராட். ஃபுல் லென்த்தில் வீசிய முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து டிரைவ் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஃபின்ச். அடுத்து கொஞ்சநேரம் விஹாரிக்கு கோலி ஓவரே கொடுக்கவில்லை. ஃபின்ச் அவுட்டான பின் மீண்டும் விஹாரியை அழைத்தார் கோலி. இந்த முறை விஹாரி ஏமாற்றவில்லை. 

ரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து விஹாரி ஷார்ட் லென்த்தில் வீசிய பந்து கொஞ்சம் பெளன்ஸானது. அதை ஹாரிஸ் எதிர்பார்க்கவில்லை. தட்டுத்தடுமாறி தொட, அதை ஸ்லிப்பில் இருந்த ரஹானே அட்டாகசமாகக் கேட்ச் பிடித்தார். 70 ரன்களில் ஹாரிஸ் அவுட். நல்ல ஃபார்மில் இருந்த கீ விக்கெட் காலி. இந்தியாவுக்கு நல்ல திருப்பம். அதேபோல, ரிஷப் பன்ட் கேட்ச் மிஸ் செய்ததால் கண்டம் தப்பிய ஷான் மார்ஷ் விக்கெட்டையும் விஹாரி விட்டுவைக்கவில்லை. மார்ஷ், ஹாரிஸ் இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது நோட் பண்ண வேண்டிய விஷயம். ஏனெனில், அடிலெய்டில் இடதுகை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை குறிவைத்து வீழ்த்தினார் அஷ்வின். அவர் இல்லாத குறையை விஹாரி நிவர்த்தி செய்துவிட்டதாக நம்பலாம். 

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் செஷனை சமாளிக்கும் அணிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அந்த வகையில் பார்த்தால், முதல்நாள் ஆஸ்திரேலியாவின் நாள். ஹாரிஸ் - பின்ச் ஓப்பனிங் ஜோடி 100-க்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது, பின்ச் ஃபார்முக்கு வந்தது, டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து அரைசதம் அடித்திருப்பது என எல்லாமே ஆஸ்திரேலியாவுக்கு பாசிட்டிவ் நியூஸ். டெயிலெண்டர்கள் கொஞ்சம் நின்று 300-க்கும் மேல் ரன் சேர்த்துவிட்டால், மிச்சத்தை ஆஸி பெளலர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் சமீபத்திய பிரச்னை, லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது. ஆக, நாளை டெயிலெண்டர்களை விரைவில் காலி செய்ய வேண்டும்.

இந்தியா வெறுமனே நான்கு ஃபாஸ்ட் பெளலர்களுடன் களமிறங்கியதே தவிர, முதல் செஷனில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறிவிட்டது. முதல் செஷனில் பிட்ச் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை கவனிப்பதிலேயே இந்திய பெளலர்களுக்கு நேரம் கடந்துவிட்டது. விக்கெட் வீழ்த்தாதது மட்டுமல்ல ரன்களையும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இஷாந்த் ஷர்மா 16 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக இது நல்ல பெர்ஃபாமன்ஸ்தான். ஆனால், முதல் ஸ்பெல்லில் அவருக்கு லென்த் பிடிபடவில்லை. லைன் வசப்படவில்லை. பந்து ஸ்டம்பை நோக்கி போகவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இன்னும் அவரது ஓவர் ஸ்டெப் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 

இந்திய பெளலர்களின் இந்தத் தடுமாற்றம் ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகிவிட்டது. குறிப்பாக, லோக்கல் வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் ஆட்டம் செம. அவர் குட் லென்த்தில் விழுந்த பந்துகளைத் தொடவே இல்லை. அதாவது குட் லென்த்தில் வந்த 57 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஷார்ட் அல்லது ஃபுல் லென்த்தில் வந்த பந்துகளை மட்டுமே குறிவைத்து அடித்தார். அதுவும் ஆரம்பத்தில் அமைதிகாத்து, நேரம் செல்லச் செல்ல மோசமான பந்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து அடித்தார். அவருடன் ஒத்துழைத்த பின்ச், அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்துவிட்டது. இது, ஆஸ்திரேலியா முதல்நாளில் 277/6 என வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம். 

இரண்டாவது செஷனில்தான் இந்தியா கொஞ்சம் நிமிர்ந்தது. உஸ்மான் கவாஜாவை விரைவில் பெவிலியன் அனுப்பியது சூப்பர்ப். ஆனால், ஷான் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது ஆஸிக்கு பலம் சேர்த்துவிட்டது. கடைசி செஷனில் இந்தியா ஒரு பிடிபிடித்தது. இரண்டாவது புதிய பந்தில் முதல் ஓவரை வீசினார் ஷமி. அந்த ஓவரிலேயே ஓங்கிக்கொண்டிருந்தார் டிராவிஸ் ஹெட். அதை எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ, அடுத்த ஓவரிலேயே ஹெட் விக்கெட்டை எடுத்தார் இஷாந்த். ஃபுல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸடம்ப்பில் வீசியதை ஹெட், ஸ்கொயர் டிரைவ் செய்ய, அதை தேர்ட் மேன் ஏரியாவில் இருந்த முகமது ஷமி அலுங்காமல் கேட்ச் பிடித்தார். 

`புது பால்ல செஞ்சு விட்ரணும்’ என முடிவெடுத்திருந்தாரோ என்னவோ... கடைசி செஷனில் பும்ரா, ஆஸி பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தார். லைன், லென்த் எல்லாமே பக்கா. வேகம், பெளன்ஸ் மிரட்டல். உமேஷ் யாதவ் தன் இரண்டாவது ஸ்பெல்லில் ஷார்ட்டாக அதே நேரத்தில் ஸ்மார்ட்டாகப் பந்துவீசினார். ஷமி பிரச்னையில்லை. நாளை பிட்ச் வேற மாதிரி மாறும். அதை முதல் செஷனிலேயே சாதகமாக்க வேண்டும். அதற்கான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இல்லையேல், ஆஸி 350 ரன்களுக்கு மேல் எடுத்துவிடும். அப்புறம் கஷ்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு