Published:Updated:

ஐ.பி.எல்: தொடரும் சென்னை சூப்பர் கி்ங்ஸ் வெற்றி

ஐ.பி.எல்: தொடரும் சென்னை சூப்பர் கி்ங்ஸ் வெற்றி
ஐ.பி.எல்: தொடரும் சென்னை சூப்பர் கி்ங்ஸ் வெற்றி
ஐ.பி.எல்: தொடரும் சென்னை சூப்பர் கி்ங்ஸ் வெற்றி

சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை  வீழ்த்திய சென்னை அணி 9வது வெற்றியை ருசித்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 45வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

தொடக்க ஆட்டகாரர்களாக மைக் ஹஸ்சியும், விருத்திமான் சஹாவும் களம் இறங்கினர். 18 ரன் எடுத்த திருப்தியோடு சஹா  வெளியேறினார். இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம் கண்டார். மைக் ஹஸ்சி 35 ரன் எடுத்திருந்தபோது, பியுஷ் சாவ்லா பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, ரசிகர்களின் ஆவராத்துக்கு இடையே களம் இறங்கிய டோனி 2 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கம் ரெய்னா கச்சிதமாக விளையாடி 32 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அதன் பிறகு அதிரடியை காட்டினார். அவருக்கு அல்பி மோர்கல் நன்கு ஒத்துழைப்பு தந்தார். கோனி ஓவரில் 2 சிக்சரை விளாசிய ரெய்னா, சதீசின் ஓவரில் 2 பவுண்டரியும், பிரவீன்குமாரின் ஓவரில் சிக்சரும் பறக்க விட்டு, மைதானத்தை அதிர வைத்தார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்ப்பை விஞ்சி எகிறியது. இதற்கிடையே, அல்பி மோர்கல் 23 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ரெய்னா தனது முதலாவது ஐ.பி.எல். சதத்தை நிறைவு செய்தார்.  முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. 53 பந்துகளில் 100 ரன் குவித்த ரெய்னா, 7 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் போமர்ஸ்பாச் (7), மன்தீப்சிங் (15) சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். பின்னர் வந்த கேப்டன் டேவிட் ஹஸ்சியும் (22) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஷான் மார்சும், டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ரன்ரேட்டையும் மின்னல்வேகத்தில் உயர்த்தினர். ரெய்னாவின் ஓவரில் ஷான் மார்ஷ் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டி அசத்தினார். இவர்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது, ஒரு கட்டத்தில் ஆட்டம் கையைவிட்டு நழுவிவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. ரசிகர்களும் பித்து பிடித்தது போல், ஆட்டத்தை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இறுதி கட்டத்தில் சென்னை பந்து வீச்சாளர்கள் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாபின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது, 19வது ஓவரை வீசிய கிறிஸ் மோரிஸ் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்தது.

பரபரப்பான 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ வீசினார். இதன் முதல் பந்தில் ஷான் மார்ஷ் (73) போல்டானார். அடுத்து வந்த குர்கீரத்சிங் (0) 2வது பந்தில் ஆட்டம் இழந்தார். 3வது பந்தில் 2 ரன்னும், 4வது பந்தில் ஒரு ரன்னும் மில்லர் எடுத்தார். இதன் பின்னர் 5-வது பந்தில் சுதீசும் ஆட்டம் இழந்தார்.  கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வெய்ன் பிராவோ வீழ்த்தினார்.

##~~##
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லரின் (5) போராட்டமும் வீண் போனது. ஆட்டநாயகன் விருதை ரெய்னா பெற்றார்.
11வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 9வது வெற்றியாகும். 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சென்னை அணி ஏறக்குறைய அடுத்த சுற்றை உறுதி செய்து விட்டது. மேலும், சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற 7வது வெற்றியாகவும் இது அமைந்தது. சென்னை அணி வரும் 5ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை மும்பையில் சந்திக்கிறது.