Published:Updated:

வேகப்பந்துவீச்சாளர்களுக்காக பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விட்டுக்கொடுத்த விருஷ்கா!

வேகப்பந்துவீச்சாளர்களுக்காக பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விட்டுக்கொடுத்த விருஷ்கா!
வேகப்பந்துவீச்சாளர்களுக்காக பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விட்டுக்கொடுத்த விருஷ்கா!

அடிலெய்டு முதல் பெர்த் வரையிலான விமானப் பயணத்தின்போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர், வேகப்பந்துவீச்சாளர்களுக்காகத் தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்திருக்கிறது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெர்த் மைதானத்தில் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையில், தங்களது முதல் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக, கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆஸ்திரேலியா சென்றார். இந்த ஜோடி, கடந்த ஆண்டு இதேநாளில் இத்தாலியின் டுஸ்கானி நகரில் திருமணம் செய்துகொண்டது.

இந்த நிலையில், இந்திய வீரர்கள் அடிலெய்டுவில் இருந்து பெர்த் நகருக்கு விமானத்தில் பயணித்தனர். அந்த விமானத்தில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்காக கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும், தங்களது பிசினஸ் கிளாஸ் இருக்கைகளை விட்டுக்கொடுத்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில், வர்ணனையாளராகப் பணியாற்றிவரும் அவர், இந்திய வீரர்கள் பயணித்த அதே விமானத்தில் பயணித்திருக்கிறார். 

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் இந்தச் செயலைப் பாராட்டியுள்ள மைக்கேல் வாகன், `இதன்மூலம் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிலாக்ஸாக இருப்பது மட்டுமின்றி, கேப்டன் கோலி தனது வீரர்களை மனிதநேயத்துடன் நடத்துகிறார்’ என்று சிலாகித்திருக்கிறார். அவரது ட்வீட்டில் பதிவிட்ட மற்றொரு நெட்டிசன், விராட் கோலியைப் போல் மற்ற வீரர்களுக்கும் ஏன் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஒருவர், அந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் 12 மட்டுமே இருந்ததாகக் கூறியிருக்கிறார்.