Published:Updated:

36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்! #AUSvIND

36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்! #AUSvIND

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, ரஹானே தவிர, இந்தியாவுக்கு அதிகமாகப் பங்களித்தது என்னவோ உதிரிகள்தான். ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றிக்கும் இடையே இருந்தது 31 ரன்கள். அது, இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் வீசிய எக்ஸ்ட்ராக்களைவிட 5 ரன்கள் குறைவு! 

36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்! #AUSvIND

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா, ரஹானே தவிர, இந்தியாவுக்கு அதிகமாகப் பங்களித்தது என்னவோ உதிரிகள்தான். ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றிக்கும் இடையே இருந்தது 31 ரன்கள். அது, இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் வீசிய எக்ஸ்ட்ராக்களைவிட 5 ரன்கள் குறைவு! 

Published:Updated:
36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்! #AUSvIND

"ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறோம். அதை நினைக்கையில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது" என்று பேசிய இந்திய கேப்டன் விராட் கோலியின் முகத்தில், அவ்வளவு நிம்மதி. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களின் முதல் போட்டியில் போராடித் தோற்றிருந்தது இந்திய அணி. இதே அடிலெய்ட் மைதானத்தில், 2014-ல் அவர் முதல் முறையாக இந்திய அணியை வழிநடத்தியபோது - வெற்றியை தைரியமாகத் துரத்தியபோதும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது இந்தியா.

அந்த 3 தொடர்களில் எதையுமே இந்தியா வெல்லவில்லை. ஒரு மிகப்பெரிய தொடரின் முதல் போட்டியை வெல்வது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்குத் தெரியும். அதேசமயம் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதையும் அவர் தெரிந்திருக்காமல் இல்லை. சதேஷ்வர் புஜாரா - அடிலெய்ட் டெஸ்ட்டின் அசத்தல் நாயகன்! 

"முதல் நாள் மிகவும் மோசமான நிலையில் இருந்த அணியை, புஜாரா மீட்டெடுத்தது, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது" என்ற இந்திய கேப்டனின் சொல்லை யாரும் மறுத்திட முடியாது. புஜாரா இல்லையேல் இந்த வெற்றி சாத்தியமில்லை. ஆனால், புஜாரவின் தாக்கத்தை அவர் அடித்த 194 (123, 71) ரன்களை மட்டும் வைத்துக் கணக்கிடக் கூடாது. புஜாரா இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அந்த ரன்களினால் அல்ல. அவர் சந்தித்த 450 பந்துகளினால்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து புஜாரா சந்தித்தது 450 (246, 204) பந்துகள். வாட்டிய அடிலெய்ட் வெயிலுக்கு நடுவே, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரணாக நின்றார் புஜாரா. அதன் விளைவு, 4 ஸ்பெஷலிஸ்ட் பௌலர்களுடன் மட்டும் களமிறங்கிய ஆஸ்திரேலிய பௌலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடைந்தனர். ஒரே நாளில், ஒரு வேகப்பந்துவீச்சாளர் 19 ஓவர்கள் வீசுவதெல்லாம் ரொம்பவும் கடினமான விஷயம். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அந்தக் கஷ்டத்தைக் கொடுத்தார் புஜாரா. முதல் நாள் முடிவில் ஸ்டார்க் 19, ஹேசில்வுட் 19.5, கம்மின்ஸ் 19 ஓவர்கள் வீசியிருந்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில், இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர்களால், போகப்போக முழுவீச்சுடன் செயல்பட முடியவில்லை. விளைவு - கம்மின்ஸ், ஸ்டார்க் ஓவர்களில் பௌண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டார் புஜாரா.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், வேகப்பந்துவீச்சாளர்களுக்குத் தொடர்ந்து ஓவர் கொடுக்கக் காரணம், லயான் பந்துவீச்சை புஜாரா தீர்க்கமாக எதிர்கொண்டதுதான். முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறியவர், மூன்றாவது செஷனில், மிகவும் கட்டுக்கோப்பாக விளையாடினார். பெரும்பாலும், கிரீஸிலிருந்து வெளியே வந்து விளையாடினார். சுழற்பந்துவீச்சை அவர் தீர்க்கமாக எதிர்கொள்வதைப் பார்த்த பெய்ன், வேறு வழியின்றி தொடர்ந்து தன் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த நேர்ந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவின் ஆட்டம் இன்னும் வேறு லெவல். ஆடுகளத்தில் பௌன்ஸ் அதிகமாக இருந்ததால், எல்.பி.டபிள்யூ ஆகும் வாய்ப்பு குறைவுதான். அதனால், லயான் பந்துவீச்சை அதிகமாக pad-ல் வாங்கினார். நிறைய `false shot' ஆடினார். அந்த இன்னிங்ஸில் 17 சதவிகிதப் பந்துகளை, கிரீஸுக்கு வெளியே வந்துதான் எதிர்கொண்டார். வேறு வழியில்லாமல், மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்கள் பக்கம் திரும்பினார் பெய்ன். 

இந்த முறை அதற்கான விலை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. கிட்டத்தட்ட ஆறு செஷன்கள் களத்தில் இருந்தவர்கள், ஓய்ந்திருந்தார்கள். முதல் இன்னிங்ஸிலேயே `drain out' ஆகியிருந்த ஆஸி வேகங்கள், தங்கள் லைன் மற்றும் லென்த்தை இழந்தனர். ஸ்டார்க், தொடர்ந்து லெக் சைட் வீசிக்கொண்டிருந்தார். அதிலும் பெர்ஃபெக்ஷன் தவறியது. பேட்டிலிருந்து ரன்கள் வந்தது போதாதென்று, எக்கச்சக்க எக்ஸ்ட்ராக்கள். முதல் இன்னிங்ஸில் வெறும் 1 எக்ஸ்ட்ரா மட்டுமே கொடுத்திருந்த ஆஸி பௌலர்கள், இரண்டாவது இன்னிங்ஸில் கொடுத்தது 36 உதிரி ரன்கள். அதில் பெரும்பாலானவை ஸ்டார்க் வீசிய bye மூலம் பௌண்டரிகளானதால் வந்தவை. மற்றவை, லெக் சைட் வீசப்பட்ட பந்துகளால் கிடைத்த `லெக் பை' ரன்கள். புஜாரா, ரஹானே தவிர, இந்தியாவுக்கு அதிகமாகப் பங்களித்தது என்னவோ அந்த உதிரிகள்தான். ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றிக்கும் இடையே இருந்தது 31 ரன்கள். அது, இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் வீசிய எக்ஸ்ட்ராக்களைவிட 5 ரன்கள் குறைவு! 

தன் நிதானமான ஆட்டத்தின் மூலம், ஒரு பௌலிங் யூனிட்டின் மொத்தத் திறனையும் குறைத்து, ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் புஜாரா. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட். கே.எல்.ராகுல், ரிசப் பன்ட் போல் அதிரடியாக ஆடிச் செல்வதன்மூலம் ரன்கள் வந்துவிடும். ஆனால், அதன்பிறகு, எதிரணிகள் அதே பலத்தோடு கம்பேக் கொடுக்கக்கூடும். முழு பலத்தில் இருக்கும் ஸ்டார்க், இரண்டு ஓவர்களில் மொத்த டெய்லையும் சுருட்டிவிடுவார். ஆட்டம், மீண்டும் மாறிவிடக்கூடும். இது டெஸ்ட் மேட்ச். எதிரணியை மனதளவில் பின்னுக்குத்தள்ளினால்தான் வெற்றி பெற முடியும். புஜாரா அதைச் சரியாகச் செய்தார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் போல் பந்துகளை அட்டாக் செய்யாமல், பௌலரை மனதளவில் அட்டாக் செய்தார். சுருங்கச் சொன்னால், புஜாரா சரியான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். இந்தியாவை வெற்றி பெறவைத்தார்.

அந்தப் பேட்டியின் கடைசியில், கோலி இன்னொரு விஷயமும் சொன்னார் : ``We have to build on this victory". ஆம், இந்த முதல் போட்டி வெற்றியின்மீது, இந்திய அணி, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில், அதே உத்வேகத்தோடு ஆடவேண்டும். அதற்கு, ஒவ்வொரு இந்திய பேட்ஸ்மேனும் புஜாராவின் இன்னிங்ஸை ஆடவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism