Published:Updated:

``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..?" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்

``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..?" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்
``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..?" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பீர். கடந்த சில ஆண்டுகளாக இவர், சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளிலும் ஐ.பி.எல் தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஐ.பி.எல் தொடரில் கம்பீரின் தலைமையில் கொல்கத்தா அணி கோப்பைகளையும் வென்றது. கடைசியாக ரஞ்சி தொடரில் விளையாடி வந்த நிலையில், கடந்த வாரம் தன் ஓய்வை அறிவித்தார் கம்பீர். ஆந்திர அணிக்கு எதிரான தனது கடைசிப் போட்டியிலும் சதமடித்து தனக்குள் இன்னும் கிரிக்கெட் மீதம் இருக்கிறது என நிரூபித்தார். 

கம்பீர் தைரியமான கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, சமரசம் செய்யாமல் பல விஷயங்களை ஓப்பனாக பேசக்கூடியவர்.  கலத்திலும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். இவர் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அதிக பங்கு இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், தோனி குறித்தும் பல அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார், கம்பீர். 

பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டூடே பத்திரிகைக்குக் கம்பீர் அளித்தப் பேட்டியில், 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சி.பி சீரீஸ் தொடரில் தோனியின் செயல்பாட்டைக் கடுமையாக சாடினார். அந்தத் தொடரில் சச்சின், ஷேவாக் மற்றும் கம்பீர் ஆகியோரைச் சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தினார் தோனி. தோனியின் இந்த முடிவைத்தான் அவர் கடுமையாக சாடியுள்ளார். 

கம்பீர்,   ``2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின்போது சச்சின், சேவாக் மற்றும் என்னுடன் இணைந்து விளையாட முடியாது என்ற முடிவை தோனி எடுத்தார். 2015-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார் (2015-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது). 

அது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல, கிரிக்கெட்டராக இருக்கும் யாருக்கும் இது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அங்கு நடந்தது இதுவரை நான் கேள்விப்படாதது. 2012-ம் ஆண்டில் யாராவது, 2015 உலகக்கோப்பை தொடரில் நீ விளையாட மாட்டாய் எனச் சொன்னால் எப்படி இருக்கும். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், வயது ஒரு விஷயமே இல்லை. 

தொடர்ந்து ரன் எடுக்கும் திறன் இருந்தால், நீங்கள் தொடர்ந்து விளையாடலாம். இதுதான் அனைவருக்கும் சொல்லப்பட்டது. ஆனால், அங்கு எங்கள் மூவராலும் இணைந்து விளையாடமுடியவில்லை. ஆனால், ஒரு இக்கட்டான நிலையில் எங்கள் மூவரையும் ஒன்றாகக் களமிறக்கினார். கட்டாயம் வெற்றிபெற வேண்டிய, அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய ஒரு போட்டியில் சச்சின் சேவாக் தொடக்க ஆட்டக்காரராகவும், நான் மூன்றாவது வீரராகவும் களமிறக்கப்பட்டோம். அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றோம். தொடரின் தொடக்கத்தில் எங்களை இணைந்து விளையாட தோனி ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஒரு இக்கட்டான நேரத்தில் மூவரையும் களமிறக்கினார். ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாகயிருக்க வேண்டும். ஆனால், தோனியால் அதையும் செய்ய முடியவில்லை. தனது முடிவை அந்தத் தொடரிலே மாற்றினார். தனது முடிவை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

அந்தத் தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இலங்கை ஆஸ்திரேலிய அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்தத் தொடர் நடைபெறும்போது பேசிய சேவாக்,  ``தொடர் தொடங்கும் முன் எங்கள் மூவரையும் அழைத்துப் பேசினார் தோனி. இளையோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அடுத்த உலகக்கோப்பை தொடரும் இங்கு நடைபெறுவதால், சுழற்சி முறையில் நாங்கள் விளையாடுவோம்” என்றார்.   
மேலும், கம்பீர் தனது கேப்டன்ஷிப் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர்,   ``நான் இந்திய அணிக்கு கேப்டனாக அதிக போட்டிகளில் இருந்ததில்லை. கேப்டனாக இருக்கத் தன்னலமற்ற நேர்மையான மனம் வேண்டும். அது என்னிடம் இருப்பதாக நான் பல நேரம் உணர்ந்திருக்கிறேன். நான் என்னை உயர்த்திப் பேசவில்லை. ஆனால், அதே நேரத்தில் எனது விளையாட்டில் நான் நேர்மையுடனே செயல்பட்டுள்ளேன். கொல்கத்தா அணியின் கேப்டனாக தன்னலமற்ற விளையாட்டை நான் வெளிப்படுத்தியுள்ளேன். 

கேப்டன், தலைவர் என்ற இரண்டுக்கும் சிறு வேறுபாடுள்ளது. யாருடைய தலைமையில் நாம் அதிகம் கற்றுக்கொள்கிறோமோ அவரே சிறந்த கேப்டன் மற்றும் தலைவராக இருக்க முடியும். நான் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடியுள்ளேன். அதில் அதிகம் பாடம் கற்றது கும்ப்ளே தலைமையில்தான். அவர்தான் நான் விளையாடியதிலே சிறந்த கேப்டன்” என்றார். 

கம்பீரின் இந்த விமர்சனங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் ரசிகர்கள் கம்பீரின் இந்தத் கருத்தால், அதிருப்தியில் உள்ளனர். கம்பீர் ஓய்வு பெற்றப் பின்னர் இதுபோன்று கூறுவது முறையல்ல எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

முன்னதாக பி.டி.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்த கம்பீர்,   ``என்னைச் சுற்றியிருப்பவர்கள், ‘நான் அனுசரித்துச் செல்ல வேண்டும்’ என்று சொன்னார்கள். ஆனால், அது என்னால் இயலாதது. தவறுகளையும், போலித்தனங்களையும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது” என்றார்.