Published:Updated:

`டபுள் செஞ்சுரி அடிச்சும் கழற்றிவிடப்பட்டேன்!’ - கலங்கும் ஐ.பி.எல் `ஹேமர்மேன்’ ரிச்சர்ட் மேட்லி

`டபுள் செஞ்சுரி அடிச்சும் கழற்றிவிடப்பட்டேன்!’ - கலங்கும் ஐ.பி.எல் `ஹேமர்மேன்’ ரிச்சர்ட் மேட்லி
`டபுள் செஞ்சுரி அடிச்சும் கழற்றிவிடப்பட்டேன்!’ - கலங்கும் ஐ.பி.எல் `ஹேமர்மேன்’ ரிச்சர்ட் மேட்லி

ஐ.பி.எல் தொடர் என்பது, ஏப்ரல் மாதத்தில் நடக்கும் பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியில் தொடங்கும் கிரிக்கெட் தொடர் அல்ல; அதற்கு முன்னதாக நடக்கும் வீரர்களின் ஏலத்திலேயே ஐ.பி.எல் பீவர் தொடங்கிவிடும். தங்கள் அணி எந்த வீரரை வாங்கியுள்ளது, புதிய வீரர்களுக்கு என்ன விலை எனப் பலரும் எதிர்பார்த்து இருப்பார்கள். ஒவ்வொரு அணியின் பலம் பலவீனம் என்பது எல்லாம் ஏலத்தின் முடிவில் இருந்து கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

ஐ.பி.எல் தொடரில், ஏலம் அத்தனை முக்கியம். ஐ.பி.எல் 2008-ம் ஆண்டு தொடங்கியபோது ஏலம் இந்திய ரசிகர்களுக்கு மிகப் புதிது. அப்போது மூக்கில் ஒருவர் கண்ணாடி வைத்துக்கொண்டு வீரர்களின் பெயரை ஒவ்வொன்றாக அறிவிப்பார். கையில் சின்னதாக ஒரு சுத்தியல். அப்போது அவர் பெயர்கூட யாருக்கும் தெரியாது. நமக்குத் தெரிந்தது எல்லாம், ஏலம் விடுபவர். அதன் பின்னர் ஹேமர்மேன். கடைசியாகத்தான் அவர் பெயர் தெரிய வந்தது, ரிச்சர்டு மேட்லி. ஏலத்தில் அணி நிர்வாகத்தைவிட, ஏலம் போகும் வீரர்களைவிட அதிக கவனம் ஈர்ப்பவராக இருந்தார் மேட்லி. தொடர்ந்து 11 ஆண்டுகளாக அவர் ஐ.பி.எல் தொடர்களுக்கு வீரர்களின் ஏலத்தை நடத்தி வந்தார்.

இந்த வருடமும் ஏலத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டது. ஏலம் நடக்கும் இடம் அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிச்சர்டு மேட்லி, ``இந்த முறை ஐ.பி.எல் ஏலத்தை, தான் நடத்தவில்லை. ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே இந்தத் தொடரின் ஏலத்தை நடத்தியதில் பெருமிதம் கொண்டேன். இந்தியாவில் இருக்கும் நண்பர்களை மிஸ் செய்வேன். ஒவ்வொரு முறையும் எனக்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி. - தி ஹேமர்மேன்” என்று கடந்த 5 -ம் தேதி தெரிவித்தார். 

இந்த முடிவால் ரசிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் இது தொடர்பாக மேட்லிக்கு வாழ்த்தும், தங்களின் செல்ல கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அடுத்த நாள் மீண்டும் ஒரு ட்வீட் செய்தார். அதில், `என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தெளிவுக்காகச் சொல்கிறேன், ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகும் முடிவு என்னுடையது கிடையாது. ஐ.பி.எல் ஏலத்தை நடத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) என்னை அழைக்கவில்லை. கிரிக்கெட் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், நான் கழற்றிவிடப்பட்டேன்’ என்றார்.  

மேலும் ஏலம் விட அவர் கையில் வைத்திருக்கும் சுத்தியலின் படத்தைப் பகிர்ந்த அவர், இதற்கு இனி வேலை இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் ரசிகர் ஒருவர், இந்த 11 ஆண்டுகளில் மறக்க முடியாத நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், `ஐ.பி.எல் முதல் சீஸன் கிரிக்கெட்டை மாற்றியது எனலாம். அதை நான் பணியாற்றியது மகிழ்ச்சி. அதையும் தாண்டி, முதல் சீஸனில் தோனியை விற்பனை செய்த அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது’ என்று பதிவிட்டார். 

ரிச்சர்டு மேட்லிக்குப் பதிலாக, வரும் ஐ.பி.எல் தொடரில் ஏலத்தை ஹூக் எட்மேடெஸ் (Hugh Edmeades) நடத்துவார் என பி.சி.சி.ஐ அறிவித்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் கிளாசிக் கார்கள் மற்றும் கலைப் பொருள்கள் ஏலம் விடுவதில் கில்லாடி.

இந்நிலையில் `கிரிக்கெட் நெக்ஸ்ட்’ இணையதளத்துக்கு ரிச்சர்டு மேட்லி அளித்தப் பேட்டியில், ஐ.பி.எல் தொடர் குறித்தும், தான் கழற்றி விடப்பட்டது குறித்தும் பல்வேறு தகவல்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், ``ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகும் முடிவு என்னுடையது கிடையாது. அது பி.சி.சி.ஐ மற்றும் சர்வதேச விளையாட்டு மேலாண்மை அமைப்பான ஐ.எம்.ஜி ஆகியவற்றின்  கூட்டு முடிவு. 11 ஆண்டுகளாக அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் பாசிட்டிவ் கமென்ட் வந்தும் என்னை நீக்கியது அதிர்ச்சி அளித்தது. 

என்னிடம் பிசிசிஐ ஏலம் நடக்கும் இடம், நேரம் மாற்றப்படுவதா தெரிவிக்கப்பட்டது. அப்போது இளமையான ஒருவர் அந்த இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எண்ணி இருந்தேன். அல்லது இந்தியாவில் இருந்து ஒருவர் தேர்வாகலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு மாற்றாகத் தேர்வான ஹூக் -ம் பிரிட்டிஷ்காரர்தான். என்னை விட மூத்தவர். அதனால் பிசிசிஐ -யின் இந்த முடிவில் லாஜிக் இல்லை என்று தான் கூறுவேன்” என்றார். 

மேலும் அவர், ``ஹூக்கை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர். ஆனால், ஐ.பி.எல் அவருக்கு அனுபவம் கிடையாது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள நவம்பர் மாதத்தை ஒதுக்கி வைத்திருந்தேன். அதை பிசிசிஐ-யிடம் சொன்னபோது, நாங்கள் வேறு நபரைத் தேர்வு செய்துள்ளோம். இனி உங்கள் சேவை தேவையில்லை என்ற பதில் வந்தது. விளக்கமும் வரவில்லை. கடந்த 11 ஆண்டுகளாகச் செய்து வந்த பணிக்கு ஒரு நன்றியும் இல்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்றார். 

மேலும் தான் நீக்கப்பட்டதுக்கான காரணம் தெரிய வேண்டும் என்கிறார் மேட்லி. இது தொடர்பாகப் பேசுகையில், ``நான் என்ன தவறு செய்தேன். நான் எப்போது எனது எல்லையைத் தண்டினேன்? இந்தத் பதில்களை எனக்காக நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் புரிகிறது, இனி நான் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்புகள் குறைவு. ஆனால், தனிப்பட்ட முறையிலும் பணி நிமித்தமாகவும் இந்த முடிவு யாருடையது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பிசிசிஐ-யில் இருந்து யாரும் இது என்னுடைய முடிவு என சொல்ல முன்வருவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. 

ஐ.பி.எல் ஏலத்தை நடத்துவது, எனது டி.என்.ஏ-விலே உள்ளது. பிசிசிஐ இந்த முடிவு இந்த ஒரு வருடத்துக்கு மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மீண்டும் வருவேனா எனத் தெரியாது. இது, இரட்டை சதம் அடித்த வீரர் ஒருவரை எந்தக் காரணமும் சொல்லாமல் அடுத்தப் போட்டியில் எந்தக் காரணமும்  இல்லாமல் கழற்றிவிட்டதைப் போல உள்ளது. மீண்டும் வர மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், பிசிசிஐ தனது முடிவைத் தவறு என ஒத்துக்கொள்ளாது. ஐ.பி.எல் போட்டி என்பது வெறுமனே வீரர்களை விற்பனை செய்வது கிடையாது. இது ஒரு நல்ல அனுபவம்” என்று முடித்தார். 

ஐ.பி.எல் தொடருடன் எமோஷனலாக இணைந்துவிட்ட மேட்லிக்கு காரணம் சொல்லாமல் நீக்கியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணமே சொன்னாலும், ஐ.பி.எல் ரசிகர்களுக்கு இந்த முடிவு வருத்தத்தைத்தான் தந்துள்ளது. பலர் டிவிட்டரில், ஐ.பி.எல் ஏலம் வெளிப்படதன்மை கொண்டது. இனியும் அது நீடிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.