Published:Updated:

ஜலஜ் சக்சேனா - `அன்சங்’ ஆல்ரவுண்டர்... இந்திய ஜெர்ஸி அணியாதது ஏன்?!

தொடர்ந்து சிறப்பாக செயல்படும் சக்சேனா இதுவரை வெறும் ஒரு முறை தான் இந்தியா A அணிக்கே தேர்வுசெய்யப்பட்டார் என்பது ஆச்சரியமளிக்கிறது.

ஜலஜ் சக்சேனா - `அன்சங்’ ஆல்ரவுண்டர்... இந்திய ஜெர்ஸி அணியாதது ஏன்?!
ஜலஜ் சக்சேனா - `அன்சங்’ ஆல்ரவுண்டர்... இந்திய ஜெர்ஸி அணியாதது ஏன்?!

“விருதுக்கான வெகுமதியும் கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என்றார் ஜலஜ் சக்சேனா. 3 முறை, இந்திய முதல் தர கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது வென்றவர், எதிர்பார்க்கும் வெகுமானம் வேறு ஒன்றும் இல்லை... வாய்ப்புக்காகக்   காத்திருக்கும் எல்லா கிரிக்கெட் வீரர்களைப் போல், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவிலிருந்து அந்த ஓர் அழைப்புக்காகத்தான். ஆம்! அவர்களுக்கு விருதுகள் தேவையில்லை. இந்தியா எனப் பெயர் பொறிக்கப்பட்ட அந்த நீல ஜெர்சியின் பின்பக்கம் தங்கள் பெயரும் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பதுதான் அவர்களின் கனவு ஆசை எல்லாம். ஆனால், எல்லோருடைய கனவும் நினைத்தபடியே பலித்து விடுமா என்ன..? 

யார் இந்த சக்சேனா?

ஸ்பின் ஆல்ரவுண்டரான சக்சேனா முதலில் மத்திய பிரதேச அணியில் தன் ரஞ்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாகச் செயல்பட்ட சக்சேனா அந்த அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். இருப்பினும், அதில் தன் பங்களிப்பு போதிய கவனம் பெறாததால், 2016-ம் ஆண்டு கேரளா அணிக்காக விளையாடத் தொடங்கினார். கடந்த ரஞ்சி சீசனில் ஏழு போட்டிகளில் 44 விக்கெட்டுகள் எடுத்து கேரளா அணியை முதன்முறையாகக் காலிறுதி வரை முன்னேற வைத்ததில் இவர் பங்கு பெரிது. அத்துடன், பேட்டிங்கில் 522 ரன்கள் எடுத்து ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் (LALA AMARNATH) விருதையும் பெற்றார்.

இந்த விருதைக் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாகப் பெறுகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 130 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனிலும் அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆந்திரப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் (133) அடித்து எட்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.  ஒரே போட்டியில் சதம் மற்றும் எட்டு விக்கெட்டை இரண்டுமுறை கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

இப்படித்  தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் சக்சேனா இதுவரை ஒருமுறை மட்டுமே இந்தியா A அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். 2013-ம் ஆண்டு நியூசிலாந்து A அணிக்கு எதிரான அந்தப் போட்டியில்; சக்சேனா 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதன் பிறகுதான் மூன்று முறை சிறந்த ஆல்ரவுண்டருக்கான லாலா அமர்நாத் விருதைப் பெற்றார் என்பது பெரிய முரண். இப்படி ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்பட்டும் ஏன் இந்தியா A அணிக்குக் கூட தேர்வாகவில்லை என்ற கேள்வி எழும். ஆனால், அவரைத் தேர்வு செய்யாமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கிறது.

இந்திய அணிக்கு அவர் தேர்வாகாததற்கு முக்கிய காரணம் அவரின் ‘ரோல்’. இப்போது இந்திய அணியின் தேவை ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர். ஹர்டிக் பாண்டியா காயமடைந்தால் அவருடைய இடத்தை நிரப்ப ஆளில்லை. வேகப்பந்து வீசக்கூடிய அதேநேரம் பேட்டிங்கும் செய்யக்கூடிய இந்த 'டூ இன் ஒன் பாக்கேஜ்' உள்ளவரைத்தான் பி.சி.சி.ஐ பல ஆண்டுகளாகத் தேடி வருகிறது. சக்சேனா அளவுக்கு டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாதபோதிலும் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததே இந்த ஒரு காரணத்தினால்தான்.  

சக்சேனாவோ ஸ்பின் ஆல்ரவுண்டர். இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கெனவே அஸ்வின், ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் உள்ளனர். சக்சேனா அணியில் தேர்வு செய்யப்பட்டால் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ, அந்த வேலையை அஷ்வின் – ஜடேஜா கூட்டணி சிறப்பாகச் செய்து வருகிறது. அதுவும் 31 வயதான சக்சேனவை பரிச்சார்த்தமாக முயற்சிக்க தயக்கம் இருக்கத்தான் செய்யும். அதனால் சக்சேனாவை அணியில் எடுக்காமல் இருக்கலாம்.

லிமிட்டெட் ஓவர்ஸ் பொறுத்தவரை சக்சேனாவின் செயல்பாடு சுமார்தான். இன்றைய தேதியில் லெக் ஸ்பின்னர்கள்தான் லிமிட்டெட் ஓவர்ஸ் போட்டிகளில் சோபிக்கக்கூடியவர்கள். பிட்ச் சுழலுக்குச் சாதகமாக இல்லாத பட்சத்திலும் மணிக்கட்டை உபயோகப்படுத்தி லெக் ஸ்பின்னர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும். அதனால்தான் 'ஃபிங்கர் ஸ்பின்னர்'களாகிய அஷ்வின்,  ஜடேஜா ஆகியோரை ஒருநாள், டி-20 அணியில் சேர்க்காமல் சாஹல், குல்தீப் போன்றோரை அணியில் சேர்த்துள்ளனர். ஆஃப் ஸ்பின்னரான சக்சேனாவுக்கு இதுவும் ஒரு தடங்கல்தான். இதையும் மீறி அணியில் ஸ்பின்னிங் - ஆல்ரவுண்டர்களாக இடம் பெற வேண்டுமானால் அவரிடம் புதிதாக எதாவது ஸ்டாக் இருக்க வேண்டும். சாதாரணமான வீரராக இருந்தால் மட்டும் போதாது. ஓர் அசாதாரணமான வீரராக இருக்க வேண்டும்.

இப்போது இந்திய அணியின் நுழைவு வாயிலாக ரஞ்சி போட்டிகளைக் காட்டிலும் முதன்மையாக இருப்பது ஐபிஎல் போட்டிகளே. சக்சேனா மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு அணிகளில் இருந்தாலும், விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சீசனில் எந்த அணியும் இவரை வாங்க முன்வரவில்லை. இந்த முறை வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. தொடர்ந்து சிறப்பாக ஆடுவதால் மட்டும் இப்போது தேசிய அணியில் இடம்பிடித்துவிட முடியாது.

கிரிக்கெட் இன்னும் அந்த பழைய கிளாசிக்கல் ஃபார்மட் இல்லை. இப்போதும்கூட புஜாரா, ரஹானே போன்றவர்களை 'ஓல்ட் ஸ்கூல் பேட்ஸ்மேன்' என்கிறார்கள். கிரிக்கெட் ரொம்பவுமே மாறிவிட்டது. அந்த மாற்றத்தில் சிக்கி வாய்ப்பிழந்த சிறந்த வீரர்களில் ஒருவர் சக்ஸேனா. அவர் எதிர்பார்த்த வெகுமதி கிடைக்கப்போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை! 

Images Courtesy: CricInfo