Published:Updated:

ரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்?! #AUSvIND

ரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்?! #AUSvIND

`உள்ளூரில் எந்த அணியும் பலவீனமான அணி இல்லை. முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா பலமான அணிதான்" என்று இம்முறை ஆரம்பத்திலேயே டிஸ்க்லெய்மர் போட்டுவிட்டார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. எப்போதும்போல் இதுவும் `unwanted statement irrelevant to the current situation'தான்.

ரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்?! #AUSvIND

`உள்ளூரில் எந்த அணியும் பலவீனமான அணி இல்லை. முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா பலமான அணிதான்" என்று இம்முறை ஆரம்பத்திலேயே டிஸ்க்லெய்மர் போட்டுவிட்டார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. எப்போதும்போல் இதுவும் `unwanted statement irrelevant to the current situation'தான்.

Published:Updated:
ரோஹித், விஹாரி... அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆட வேண்டியது யார்?! #AUSvIND

``இப்படி கிரிக்கெட் விளையாடினால் ஆஸ்திரேலியா ஒரு **** வெல்லப்போவதில்லை" என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க். தங்கள் பழைய ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விட்டுவிட்டு, `நல்ல பிள்ளைகளாக' ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறைகளை பலமாக விளாசியிருக்கிறார் கிளார்க். இந்தியாவுக்கு எதிரான கடினமான டெஸ்ட் தொடருக்கு முன்பாக அவர் இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் சமீப காலமாக அந்த அணி சொதப்பிக்கொண்டிருப்பதால், இப்படிப் பேசியிருக்கிறார். ஆனால், அந்த ஆதங்கத்தால் மட்டும் அவர் இப்படிப் பேசிடவில்லை. இந்தியா - இந்தத் தொடரை வெல்வதற்கு முழுத் தகுதியுடன் இருப்பது, அவரது ஆதங்கத்தை கோபமாக்கியுள்ளது. அதனால்தான் இப்படி சென்சார் போடுமளவுக்குப் பேசியிருக்கிறார். #AUSVIND

முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பந்துவீச்சில் அசுர பலத்துடன் களமிறங்குகிறது இந்தியா. இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி என அசத்தலான வேகப்பந்துக் கூட்டணி, இந்தியாவை இந்தத் தொடரின் `ஃபேவரிட்' ஆக்கியுள்ளது. இந்த ஆண்டில், 2 போட்டிகளில் மட்டுமே இந்தியா எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. மற்ற அனைத்துப் போட்டிகளிலும், இரண்டு இன்னிங்ஸ்களிலும், இந்தியா எதிரணியை ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இந்த ஆடுகளங்களில், பலவீனமான ஆஸ்திரேலிய பேட்டிங்கை நிச்சயம் இந்திய அணியில் எளிதில் வீழ்த்திட முடியும். 

கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி 2 முறை மட்டுமே 300 ரன்களைக் கடந்துள்ளது. 11 இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இதைவிட கவலைதரும் விஷயம், அந்த 12 போட்டிகளில், 1 விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா சராசரியாக எடுத்த ஸ்கோர் - 22.33! ஸ்மித், வார்னர் இல்லாத போட்டிகளில் வெறும் 20.91 தான்! 12 இன்னிங்ஸ்களில் 4 முறை 200 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்துள்ளது. உஸ்மான் கவாஜா மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து அணியைக் கரைசேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், இந்திய பௌலிங்கை ஆஸ்திரேலிய பேட்டிங் யூனிட் எப்படிச் சமாளிக்கப்போகிறது தெரியவில்லை. 

முதல் போட்டியில் ஆடக்கூடிய 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இந்தியா. இஷாந்த், பும்ரா, ஷமி ஆகியோர்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் என்பது உறுதியாகிவிட்டது. ஹர்திக் பாண்டியா இல்லாததால், விராட் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறார். 2014 ஆஸி சுற்றுப்பயணத்தில், கோலி 6 பேட்ஸ்மேன்களோடு மட்டும் களமிறங்கினார். இரண்டு போட்டிகளை நூலிழையில் நழுவவிட்டது இந்தியா. அந்த இடத்தில், ஸ்பின்னர்களும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. அதனால், இந்தத் தொடரில் கூடுதல் பேட்ஸ்மேனோடு களமிறங்குவது நல்லதுதான்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, இருக்கும் ஒரே பிரச்னை, கோலி - சாஸ்திரிக் கூட்டணியின் டீம் செலக்ஷன். எந்த இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கத் தொடரைப்போல் `ஃபார்ம்' என்பதைக் காரணம் காட்டி அணியைத் தேர்வு செய்யாமல், டெஸ்ட் போட்டியில் ஆடுகிறோம், ஆஸ்திரேலியாவில் ஆடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிரித்வி ஷா காயமடைந்தது, முரளி விஜய்க்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஆனால், மிடில் ஆர்டரில் இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகளை நினைத்தால்தான்..!

புஜாரா, கோலி, ரஹானே, பன்ட் ஆகியோர் இடங்களில் எந்தக் குழப்பமும் இல்லை. அந்த 7-வது வீரர் ஸ்லாட்தான் சிக்கல். ஹர்திக் இல்லாததால், அந்த இடத்தை யாரைக் கொண்டு கோலி நிரப்பப் போகிறார் தெரியவில்லை. முன்னரே சொன்னதுபோல், ஹனுமா விஹாரிதான் சரியான ஆப்ஷனாக இருப்பார். `அட்டாகிங் கேம் வேண்டும்' என்பதைக் காரணம் காட்டி ரோஹித்தை எடுக்க வாய்ப்பிருக்கிறது. இந்த இடத்தில் மட்டும் அவர் தவறு செய்யாமல் இருக்கவேண்டும். ரோஹித்... இன்னும் துணைக் கண்டத்தில் ஆடும் நினைப்பில்தான் இருக்கிறார். சிட்னியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், லெக் சைடு சென்ற ஒவ்வொரு பந்தையும் அடிக்க முற்பட்டார். இது டெஸ்ட் கிரிக்கெட் ரோஹித்! அவர் அதைப் புரிந்துகொள்வதில்லை. கோலியும், தென்னாப்பிரிக்காவில் செய்த தவற்றை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்ப்பது நல்லது. 

அந்த இடத்துக்கு ஹனுமா விஹாரி நல்ல சாய்ஸ். சமீப காலமாக விளையாடிய அனைத்து ஃபார்மட்களிலும், அனைத்துப் போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். தியோதர் டிராஃபி, நியூசிலாந்து ஏ தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சி போட்டி என அனைத்து ஆட்டங்களிலும் பொறுப்பான அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசி 5 முதல் தர இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 74.67! அதுமட்டுமல்லாமல், அணிக்கு 5-வது பௌலிங் ஆப்ஷனும் அவரால் கொடுக்கமுடியும். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மொத்தமே 4 பௌலர்களோடு களமிறங்குவதும் நல்லதல்ல. முரளி விஜய், கோலி இருவரும் பயிற்சிப் போட்டியில் பந்துவீசினார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, ஒரு தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஸ்பெல்லை அவர்களால் வீசமுடியாது. அதனால், ஹனுமா விஹாரி விளையாடுவதுதான் சரியான சாய்ஸ்!

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும், இதுபோன்ற மிகப்பெரிய தொடரின் முடிவை 70 சதவிகிதம் நிர்ணியிக்கப்போவது முதல் போட்டிதான். அடிலெய்டில் நம்பிக்கையோடும், வெற்றியோடும் இந்தியா ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். அதற்கு பேட்ஸ்மேன்களின் பங்களிப்புதான் மிகவும் முக்கியமானது. எப்படியும் இந்திய பௌலர்கள், தடுமாறும் ஆஸி பேட்டிங்கை பதம் பார்த்துவிடுவார்கள். அதேசமயம், ஆஸி பௌலிங்கை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக எதிர்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்ஸில் இந்தியாவால் 350 - 400 ரன்கள் எடுக்க முடிந்தால், நிச்சயமாக வெற்றி பெறலாம். இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஆசைப்படாமல், அந்த 350 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடினாலே, ஆஸ்திரேலிய மண்ணில் இந்த அணியால் வரலாறு படைக்க முடியும்.

அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிதானமாக ஆடவேண்டியது முக்கியம். ராகுல் பொறுமையாக இந்தத் தொடரைக் கையாள வேண்டும். அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்க நினைப்பது ஆபத்தாக அமையும். ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், சிடில் என அச்சுறுத்தும் பௌலிங் யூனிட்டைக் கொஞ்சம் மதிப்பது அவசியம். அவர்களுக்கு எதிராக ரன் அடிப்பதைவிட, விக்கெட் விழாமல், முதல் செஷனைக் கடப்பது அவசியம். இந்திய மிடில் ஆர்டரை சீக்கிரம் களத்துக்குக் கொண்டுவராமல் இருப்பது முக்கியம். இந்திய ஓப்பனர்கள் ஒவ்வொரு வெளிநாட்டுத் தொடரிலும் சீக்கிரம் வெளியேறி அந்தத் தவற்றைச் செய்வார்கள். ராகுல் அதைச் செய்யாமல் இருக்க வேண்டும். 

ரிசப் பன்ட் விஷயத்திலும் அதேதான். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில், இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால், ராகுலும் இவரும் அடித்து ஆடிவிட்டனர். அதே ஆட்டிட்யூடை இங்கும் காட்டக் கூடாது. கொஞ்சம் நிதானமாக ஆடினால்தான், லோயர் மிடில் ஆர்டருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியும். புஜாரா, ரஹானே, கேப்டன் கோலி எல்லோரும் பயிற்சிப் போட்டியில் அரைசதம் கடந்ததால், நம்பிக்கையோடு இருப்பார்கள். அந்த நம்பிக்கையை, நல்ல தொடக்கத்துக்குப் பயன்படுத்தவேண்டும். 

அஷ்வின்... ஒவ்வொரு வெளிநாட்டுத் தொடரிலும் இந்தக் கேள்வி எழுந்துகொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டு ஆடுகளங்களில், சொல்லிக்கொள்ளுமளவுக்கு அவரது செயல்பாடு இல்லை. அதனால், இந்த முறையும் அந்தக் கேள்வி எழாமல் இல்லை. அடிலெய்ட் ஆட்டத்துக்குச் சரியான சாய்ஸ் அஷ்வின்தான். மார்கஸ் ஹாரிஸ், கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், ஹேசில்வுட் என ஆஸி அணியில் எக்கச்சக்க இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஷ்வினால் ஓரளவு தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஒரு விஷயத்தில் கோலி தெளிவாக இருக்க வேண்டும். அடிலெய்டில் அஷ்வின் சோபிக்கவில்லையென்றால், உடனடியாக அடுத்த போட்டிக்கு குல்தீப்பைக் கொண்டுவரவேண்டும். 

இந்திய வீரர்கள் முக்கியமாகக் கவனம் செலுத்தவேண்டிய இன்னொரு விஷயம் ஸ்லிப் ஃபீல்டிங். கடந்த சில ஆண்டுகளாகவே அந்த ஏரியாவில் இந்தியா தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அது தொடர்ந்துவிடக் கூடாது. வாய்ப்புகள் வழங்கிவிட்டால் அது ஆபத்தாகிவிடும். கோலி - ரஹானே கூட்டணி, சரியான புரிதல் இல்லாததால் ஸ்லிப்பில் அவ்வப்போது சில கேட்ச்களை கோட்டைவிடுகின்றனர். அதை சரிசெய்வது முக்கியம். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் இந்திய அணிமீது இம்முறை ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கைகளை ஃபீல்டிங் கெடுக்காமல் இருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமே! 

`உள்ளூரில் எந்த அணியும் பலவீனமான அணி இல்லை. முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா பலமான அணிதான்" என்று இம்முறை ஆரம்பத்திலேயே டிஸ்க்லெய்மர் போட்டுவிட்டார் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. எப்போதும்போல் இதுவும் `unwanted statement irrelevant to the current situation'தான். என்னதான் சொந்த ஊரில் ஆடினாலும், பௌலிங் யூனிட் முழுப் பலத்துடன் களமிறங்கினாலும், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்று அவர்களுக்கே தெரியும். கிளார்க் சொல்வதைவிட வெளிப்படையாகச் சொல்லிட முடியுமா? கிளார்க் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்போதும்போல் ரவி சாஸ்திரி சொல்வது எதிர்ப்பதமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய முதல் டெஸ்ட் தொடரை வெல்வதற்கான சாத்தியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது!