Published:Updated:

”மிகக் கடினமான முடிவு ; ஆனால், வேறு வழியில்லை” - விடைபெற்றார் கவுதம் கம்பீர்!#ThankyouGauti

‘இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்துவிட்டேன். “இது முடிந்துவிட்டது’ என்று சொல்லவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்.”

”மிகக் கடினமான முடிவு ; ஆனால், வேறு வழியில்லை” - விடைபெற்றார் கவுதம் கம்பீர்!#ThankyouGauti
”மிகக் கடினமான முடிவு ; ஆனால், வேறு வழியில்லை” - விடைபெற்றார் கவுதம் கம்பீர்!#ThankyouGauti

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக, கவுதம் கம்பீர் (37) அறிவித்துள்ளார். ”கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக ஆடியவர் கம்பீர்” என்று பலரும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.
 

 இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர், கம்பீர். இதுவரை இந்தியாவுக்காக 242 போட்டிகள் ஆடியிருக்கிறார். 10,324 ரன்கள் எடுத்திருக்கிறார். நிச்சயம் குறிப்பிடத்தக்க வீரர்.  2008 முதல் 2012 வரை கம்பீர் கலக்கிய காலங்கள். டெஸ்ட் - ஒருநாள் - டி20 என்று, எல்லா வகைப் போட்டிகளிலும் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். 2009-ம் ஆண்டு, ’சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்’ விருதும் பெற்றார். தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்து டெரர் காட்டினார். அந்த ஆண்டு முழுவதும், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அந்தக் காலங்களில், அடுத்த கங்குலியாக அவர் பார்க்கப்பட்டார். கங்குலி - சச்சின் காம்போவுக்குப் பிறகு, கம்பீர் - சேவாக் காம்போ பெரிதாகப் பேசப்பட்டது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, கம்பீருக்கு சோதனை ஆரம்பித்தது. இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்தார். தவானின் எழுச்சியும் அவரது இடத்தை கேள்விக்குறியாக்கியது. ஆனாலும், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். சில பல சதங்கள் அடித்து, 2016-ம் ஆண்டு மீண்டும் அணிக்குள் வந்தார். ஆனால், அப்போது காலம் கடந்திருந்தது. அவரால் மீண்டெழ முடியவில்லை. அதற்குரிய அவகாசமும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகு, கம்பீர் இந்தியாவுக்காகக் களமிறங்கவில்லை. ’ஐபிஎல்’ தொடரிலும் கலக்கியவர் கம்பீர்.

ஆரம்பத்தில் டெல்லியில் இருந்தவர், 2011-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு கொள்முதல்செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இரண்டு கோப்பைகளை வென்றுகொடுத்து, ’இப்போ வாங்கலே’ என்று கர்ஜித்தார். கம்பீரின் வருகைக்குப் பின்னரே,  கத்திரிப்பூ கலர் ஜெர்ஸி கண்டுகொள்ளப்பட்டது. கம்பீர் அக்ரஸிவ் ஆள். களத்தில் கனல்மாதிரி இருப்பார். அஃப்ரியுடன் நேருக்கு நேராக அவர் முறைத்து நின்றது, நெருப்புத்தருணம். இந்தஆண்டு ஐபிஎல் போட்டிகளில், கம்பீரிடம் சோர்வு வெளிப்பட ஆரம்பித்தது. ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் சொதப்பினார். அதை அவரே உணர்ந்து, பாதியிலேயே விலகினார். அவருமே இப்போது அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் ஓய்வறிவிப்பு வீடியோவில், ”இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோது, நம்பிக்கையுடன்தான் இருந்தேன். ஆனால், அனைத்து போட்டிகளும் மோசமான அனுபவமாக முடிந்தது. அப்போதே, ‘இது முடிந்துவிட்டது கவுத்தி’ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது. இப்போது முடிவெடுத்துவிட்டேன். “ 'இது முடிந்துவிட்டது’ என்று சொல்லவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டேன். கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆந்திராவுக்கு எதிராக விளையாடப் போகும் ரஞ்சிப் போட்டிதான், கம்பீரின் கடைசிக் களம். 2008 காமன்வெல்த் தொடர் மற்றும் 2010 நியூஸிலாந்து தொடரில் பெற்ற வெற்றிகள், எப்போதும் என் நினைவில் இருக்கும்” என்றும் சொல்லியிருக்கிறார். அவர் சொல்ல மறந்துவிட்ட ’இரண்டு’ போட்டிகளும், எப்போதும் நினைவில் இருக்கக்கூடியவையே.  2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரண்டிலும், இந்தியாவை கரைசேர்த்தவர், கம்பீர். ஆனால், அந்த போட்டிகளில் கம்பீருக்கு ‘சிறந்த ஆட்டக்காரர் விருது’ தரப்படவில்லை. இந்த சர்ச்சை இப்போதும் நீடிக்கிறது. 
2007 இறுதிப்போட்டி வெற்றிக்கு,  பௌலர்கள் பங்களிப்பு கைகொடுத்தது. ஆனால்,  2011 இறுதிப்போட்டி வெற்றி, கம்பீர் இல்லையென்றால் சத்தியமாக சாத்தியமாகியிருக்காது. சச்சின், சேவாக், கோலி என்று எல்லோரும் நடையைக்கட்டிய தருணத்தில், கம்பீர் ’தனி ஒருவனாக’ நங்கூரமிட்டார். அண்டர் பிரஸரில் அவர் அடித்த அந்த 97 ரன்கள், அதிமுக்கியமானவை. ஆனால், அவரின் 97 ரன்களை தோனியின் 93 ரன்கள் மறக்கடித்தது. கம்பீருக்கு கௌரவம் கிடைத்திருக்க வேண்டும். கவலை வேண்டாம் கம்பீர், நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்! #ThankyouGauti