

மும்பை: மும்பையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 4 ரன்னில் வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 41வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித்ஷர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் ஸ்மித், சச்சின் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஆட்டத்திலும் சச்சின் ஏமாற்றம் அடைந்தார். 10 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிரவீன்குமார் பந்து வீச்சில் சச்சின் போல்டு ஆனார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 25 ரன் எடுத்து வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் ஸ்மித் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். 4வது விக்கெட்டுக்கு பொல்லார்ட், கேப்டன் ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். பொல்லார்ட் நிதானமாக விளையாட மறுமுனையில் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடினார். 28 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரை சதத்தை கடந்த ரோகித் சர்மா, ஐ.பி.எல். போட்டியில் 18 வது அரை சதம் எட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது. ரோகித்ஷர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 79 ரன்னும், பொல்லார்ட் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டேவிட் ஹஸ்ஸி வீசிய கடைசி ஓவரில் ரோகித்ஷர்மா 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 27 ரன் சேர்த்தார்.
##~~## |