Published:Updated:

ஒரே நாளில் 5 அரைசதங்கள்... டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயார்? #AUSvIND

ஒரே நாளில் 5 அரைசதங்கள்... டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயார்? #AUSvIND
ஒரே நாளில் 5 அரைசதங்கள்... டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயார்? #AUSvIND

ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது. அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி தொடங்கும் முதல் போட்டிக்கு தயாராகும் விதமாக, சிட்னியில் இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை எதிர்கொண்டது. 

டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளான இன்று, இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ஒரே நாளில், இந்தியாவின் 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிரித்வி ஷா அதிரடி காட்ட, 11 பவுண்டரிகள் உட்பட 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபார்மில் உள்ள பிரித்வி ஷா, பயிற்சி ஆட்டத்தில் ஓப்பனிங் இறங்கியதால், ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரிலும் ஓப்பனிங் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல், 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பியது ஏமாற்றம். அதிலும் ராகுலின் ஷாட் செலக்ஷன் சுத்தம். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்கிறேன் என மிட் ஆஃபில் தூக்கிக் கொடுத்து, விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கரும், அவரது ஷாட் செலக்ஷனில் வருத்தம் தெரிவித்தார். முரளி விஜய் இந்தப் போட்டியில் பங்கேற்காதது, ராகுலின் சொதப்பல் ஆட்டம் போன்ற காரணத்தால் டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

புஜாரா (54), கோலி (64), ரஹானே (56), ஹனுமா விஹாரி (53) என அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரும் அரை சதம் கடந்தனர். 5 அரை சதங்களால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஒரு முனையில், புஜாரா ரன் சேர்த்துக் கொண்டிருக்க, மறு முனையில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகள் என கோலி அதிரடி காட்டினார். நிதானமாக விளையாடிய ரஹானே, அரை சதம் கடந்தவுடன் காயம் காரணமாக வெளியேறினார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியா `ஏ’ பிரிவில் விளையாடிய விஹாரி, 86, 51* எனச் சிறப்பாக விளையாடினார். 2018 செப்டம்பர், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரை சதம், பெளலிங்கில் 3 விக்கெட்டுகள் எடுத்தார். சமீபத்தில், தொடர்ந்து சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விஹாரி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை, தனக்கான களமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆறாவதாக இறங்கிய அவர் 88 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து, மிடில் ஆர்டருக்கு துண்டு போட்டு வைத்துள்ளார். அவர் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்பது கூடுதல் ப்ளஸ்.

இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸ் பில்ட் செய்திருந்ததை தரை மட்டமாக்கினார் 19 வயது ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர் ஹார்டி. ஏழாவதாகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தன் பங்குக்கு அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த போது, 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹார்டி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். துணைக்கண்டத்தில் உள்ள பிட்ச்சில் விளையாடுவது போல, ரோஹித் பந்துகளை எதிர்கொண்டார். ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்கான யுக்திகளை விரைவில் அவர் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ரோஹித் அவுட்டானதும், அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என இந்தியாவின் லோயர் ஆர்டர் மொத்தமும் ஹார்டியின் பந்துவீச்சில் டக்-அவுட்டானது. 347/5 என்றிருந்த இந்திய அணி, அடுத்த 10 ரன்களில் ஆல்-அவுட்டானது. இன்னிங்ஸ் முடிவில், இந்திய அணி, 358 ரன்கள் குவித்தது. பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய இந்திய அணியின் லோயர் ஆர்டர் பிரச்னை இன்னும் சரியாகவில்லை. 

தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் போல் அல்லாமல், டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததும், ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரே நாளில் அரைசதம் அடித்ததும் நல்ல அறிகுறி. ஆனாலும், இதைப் பார்த்து திருப்தி அடைய முடியாது. இன்னும் சில பேட்ஸ்மேன்கள் லிமிட்டெட் ஓவர் போட்டிகள் போலவே, பேட்டை ஓங்கிக் கொண்டிருக்கின்றனர். அதைச் சரி செய்ய வேண்டும். இல்லையெனில், மிச்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் என ஆஸி உக்கிரமாகத் தாக்கும்போது திணற வேண்டியிருக்கும்.