Published:Updated:

`கேமியோ கிங்’ சுரேஷ் ரெய்னாவின் பெஸ்ட் 5 இன்னிங்ஸ்..! #HBDRaina

`கேமியோ கிங்’ சுரேஷ் ரெய்னாவின் பெஸ்ட் 5 இன்னிங்ஸ்..! #HBDRaina
`கேமியோ கிங்’ சுரேஷ் ரெய்னாவின் பெஸ்ட் 5 இன்னிங்ஸ்..! #HBDRaina

`கேமியோ கிங்’ சுரேஷ் ரெய்னாவின் பெஸ்ட் 5 இன்னிங்ஸ்..! #HBDRaina

ஃபார்ம் அவுட் காரணமாக சுரேஷ் ரெய்னா இன்று இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கலாம். ஒருகாலத்தில் அவர் இந்திய அணியின் பந்தயக் குதிரை. சி.எஸ்.கே-வின் செல்லப்பிள்ளை. டெஸ்ட், ஒருநாள், டி 20 என மூன்று ஃபார்மெட்களிலும் சதம் அடித்தவர். அவரின் பிறந்தநாளான இன்று அவர் ஆடிய சிறந்த 5 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம்.

81 ரன், எதிரணி: இங்கிலாந்து, ஆண்டு 2006

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் அடித்த இந்த அரைசதம்தான் இவரின் முதல் அரைசதம். ஏழு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் எளிதாக வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் தடுமாறியது. இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஸ்ட்ராஸ் தங்கள் பங்குக்கு அரைசதம் அடிக்க 226 என்ற ஸ்கோரை எட்டியது இங்கிலாந்து. எளிதான இலக்கை விரட்டிய இந்தியாவுக்குத் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 61/0 என்ற நிலையிலிருந்த இந்தியா, ஆண்டர்சன், ஃபிளின்டாப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 92/5 எனத் திணறியது. தோனியுடன் சேர்ந்து அணியை மெள்ளத் தூக்கி நிறுத்தினார் ரெய்னா. இருவருமே புதுமுக வீரர்கள். ஆட்டம் நடந்த ஃபரிதாபாத் பிட்ச் முழுக்க முழுக்க பௌலர்களுக்குச் சாதகமானது.

உயரம் குறைவாக இருந்த ரெய்னா ஷார்ட் பால்களை அடிக்கத் தெரியாமல் மிஸ் செய்கிறார். பின் சுதாரித்து, பவுண்டரி அடிக்காமல் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ஒவ்வொரு ரன்னாகச் சேர்க்கிறார். நேரம் வரும்போது மட்டும் அடிக்கிறார். எப்படியோ, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அரைசதம் கடந்த பின் அவரின் பேட்டிங் ஸ்டைல் அப்படியே மாறுகிறது. ப்ளெங்கட் மற்றும் ஃபிளின்டாஃப் ஓவர்களில் பவுண்டரிகளாக விளாசி, 81 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 19 வயது இளைஞன் தன் எட்டாவது போட்டியிலேயே இந்த அசாதாரணத்தை நிகழ்த்தியது அன்று வெகுவாகப் பேசப்பட்டது.

82 ரன், எதிரணி: மேற்கிந்திய தீவுகள், 2011

2011 உலகக் கோப்பை வென்ற கையோடு மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது இந்தியா. ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து தொடரை வென்ற ரெய்னா, டெஸ்டில் களமிறக்கப்பட்டார். முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடைபெற்றது‌. லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் வீரர் என்ற தன் இமேஜை உடைக்க வேண்டிய நிர்பந்தம். சொல்லி வைத்தாற்போல முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸின் சுழல் வலையில் சிக்கியது. ஸ்கோர் 85/5. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யாரும் இல்லாத நிலையில் மொத்த பொறுப்பையும் தன் தோளில் சுமந்து ஆடத் தொடங்கினார் ரெய்னா.

பிட்ச் பெளலிங்குக்கு சாதகமாக இருந்தது. பீஷூ, எட்வர்ட், சமி என பவுலர்கள் ரெய்னாவை அவுட்டாக்க ஓவர்டைம் பார்த்தனர். எதையும் பொருட்படுத்தாமல் ஜென்டிலாக ஆடினார் ரெய்னா. அவருக்கு ஹர்பஜன் கம்பெனி கொடுத்தார். இருவரும் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. பின் சீரான இடைவெளிகளில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் ரெய்னா 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 246 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா பொறுப்பாக ஆடி ஒரு வழியாக 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டர் என்ற இமேஜை ரெய்னா உடைத்த இன்னிங்ஸ் அது.

34 ரன், எதிரணி: ஆஸ்திரேலியா, 2011 வருட உலகக் கோப்பை

2011 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி. ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் தன் பொறுப்பை உணர்ந்து ஆடி சதமடித்தார். மற்றொரு பக்கம் ஹாடின் அரைசதம் அடிக்க, ஆஸ்திரேலியா 261 ரன்கள் குவித்தது. எட்டக்கூடிய இலக்கு என்றாலும், உலகக் கோப்பை கனவு கலைந்துவிடும் என்பதால், இந்திய வீரர்களுக்கு ப்ரஷர் எகிறியது. கெளதம் கம்பீர், டெண்டுல்கர் தங்கள் பங்குக்கு அரைசதம் அடித்தனர். தோனி, கோலி சொதப்ப அணியை மீட்க வேண்டிய பொறுப்பு யுவராஜ், ரெய்னா தலையில் விழுந்தது‌. ரெய்னா களமிறங்கும்போது 12.3. ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 74 ரன்கள் தேவைப்பட்டது.

இன்னும் ஒரு விக்கெட் விழுந்தாலும் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் என்பது தெளிவாகத் தெரிந்தது. களமிறங்கிய ரெய்னாவோ முதல் எட்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். பிரட் லீயின் அடுத்த ஓவரை பவுண்டரிக்கு விரட்டி கணக்கைத் தொடங்கினார் ரெய்னா. மொத்தமாக அந்த ஆட்டத்தில் மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர் மட்டுமே அடித்திருந்தார். அதிகமாகப் பவுண்டரிகள் அடிக்காவிட்டாலும் விக்கெட்டுகளுக்கிடையே ஓடி ரன் ரேட்டை சீராக வைத்திருக்க, 74 ரன்களை இந்தியா 10.1 ஓவர்களிலேயே எட்டியது. 34 ரன்கள் என்பது சாதாரணமாகத் தெரியலாம். இக்கட்டான சூழலில் அன்று ரெய்னா எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவ்வளவு வொர்த். ஆரம்பத்தில் யார் பந்தை எதிர்கொள்ள தயங்கினாரோ, அதே பிரட் லீயின் பந்தை சிக்சருக்கு விரட்டி, ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை கனவுக்கு எண்டு கார்டு போட்டார் ரெய்னா.

36 ரன்... எதிரணி: பாகிஸ்தான், 2011 வருட உலகக் கோப்பை

அதே 2011 உலகக் கோப்பை. காலிறுதியைவிட அரையிறுதிக்கு இன்னும் நெருக்கடி. காரணம்... எதிரணி பாகிஸ்தான். முதல் பேட்டிங் இந்தியா. குறைந்தபட்சம் 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே கொஞ்சம் நம்பிக்கையோடு இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடியும் என்ற நிர்பந்தம். டெண்டுல்கர் மட்டுமே அடித்து ஆடுகிறார். கம்பீர், கோலி சொதப்ப, யுவராஜை பெரிதும் நம்பியது மொத்த இந்தியாவும். ஆனால், வகாப் ரியாஸ் வீசிய முதல் பந்து ஆஃப் ஸ்டெப்பை பதம் பார்க்க நடையைக் கட்டினார் யுவராஜ். தனி ஆளாகப் போராடிய சச்சினும் அவுட்டாக, இந்தியாவின் மீட்பனாக வருகிறார் ரெய்னா. 38-வது ஓவரில் 187/5 என்ற நிலையில் இருந்த ஸ்கோரை மெள்ள மெள்ள உயர்த்துகிறார். மறுபுறம் தோனி, ஹர்பஜன், ஜாகிர் என அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ரெய்னாவின் ஆட்டம்தான் இந்தியாவின் ரன்‌ரேட்டை சீராக உயர்த்துகிறது.

உமர்குல்லின் யார்கர் அனைத்தையும் பவுண்டரிகளாக மாற்றினார் ரெய்னா. அடித்து ஆடுவதைவிட அவுட்டாகாமல் ஆட வேண்டும் என்பதை பல இக்கட்டான சூழ்நிலைகளில் ரெய்னா நிரூபித்துள்ளதைப்போல, இந்தப் போட்டியிலும் நிரூபிக்கிறார். முடிவில் இந்தியா 260 ரன்கள் குவித்தது. அடுத்து, பாகிஸ்தான் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  

87 ரன், எதிரணி: பஞ்சாப், 2014 ஐ.பி.எல் சீஸன்

ரெய்னா - ஐ.பி.எல்-லின் ராஜபாட்டை. 2014 சீஸனில், இரண்டாவது குவாலிஃபையர் பஞ்சாபுக்கு எதிராக. அந்த சீஸனில் மேக்ஸ்வெல்லின் எழுச்சி பஞ்சாப் அணிக்கு பெரும் பலம் சேர்த்தது. ஆனால், அந்தப் போட்டியில் அசுர ஆட்டம் ஆடியது சேவாக். 56 பந்துகளில் 122 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 226 ரன்கள் எடுத்தது. சென்னைக்கு 227 ரன்கள் இலக்கு. இரண்டாவது பந்திலேயே டூப்ளெஸ்ஸி அவுட்டாக, எதுவும் நடக்காததைப்போல களத்துக்குள் நுழைகிறார் ரெய்னா.

ஜான்சன் வீசிய முதல் பந்து எட்ஜ்ஜாகி பவுண்டரி. அடுத்து அவர் ஆடியது ஏலியன் லெவெல் ஆட்டம். ஜான்சன் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள். அடுத்து வந்த சந்தீப் சர்மாவின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தார் ரெய்னா. மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்சர். எக்ஸ்ட்ரா கவர், மிட் விக்கெட் எரியாவில் ரன் மழை பொழிந்தார். மீண்டும் ஜான்சன் ஓவரில் இரண்டு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் என 20 ரன்கள். 16 பந்துகளில் அரைசதம் கடந்து ஐ.பி.எல் வரலாற்றின் இரண்டாவது விரைவான அரைசதத்தைப் பதிவு செய்தார்.  

பவர்ப்ளேவின் கடைசி ஓவரை பர்விந்தர் அவானாவை வீசச் செய்தார் கேப்டன். பாவம், அவர் ஓவரில்தான் ருத்ர தாண்டவம் ஆடினார் ரெய்னா. இரண்டு சிக்சர்கள், தொடர்ச்சியாக ஒரு நோ பால் உட்பட ஐந்து பவுண்டரிகள் என அந்த ஓவரில் 33 ரன்கள் விளாசினார். பவர் ப்ளே முடிவில் 100 ரன்கள். இருபது ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் 6 ஓவர்களில் 100 ரன்களைத் தொட்டதில்லை. அதை சென்னைக்கு சாத்தியமாக்கினார் ரெய்னா.

பவர் ப்ளே முடிந்து அடுத்த ஓவரை வீசுகிறார் அக்சர் படேல். ஒவ்வொரு ரெய்னா ரசிகனுக்கும் கனவாகவே இருந்துவிட வேண்டும் என நினைக்கிற ஓவர். படேல் வீசிய பந்தை மெக்கல்லம் பாயின்ட்டில் அடிக்க, பந்து பெயிலியின் கைகளில் தஞ்சம் புகுந்தது. மெக்கல்லம் செய்த தவற்றால் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு ஓடுகிறார் ரெய்னா. ஆனால், அதற்குள் பந்து டைரக்ட் ஹிட்டாகிவிட, கத்தியபடி கண்ணீரை அடக்கிக் கொண்டு வெளியேறுகிறார் ரெய்னா. அதற்குப் பின்னர் எவ்வளவு முயன்றும் ரெய்னா ஏற்றிக் கொடுத்த ரன்ரேட்டை யாராலும் தக்கவைக்க முடியவில்லை. முடிவில், 202 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது சி.எஸ்.கே. தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும் ரெய்னா அவுட்டாகும்போது எதிரணியினரும் கலங்கிய இடத்தில் ஒரு ரியல் வீரராக ஜொலித்தார் ரெய்னா.

உங்களுக்குப் பிடித்த ரெய்னாவின் இன்னிங்ஸை கமென்ட்டில் பகிரலாமே!

அடுத்த கட்டுரைக்கு