Published:Updated:

``மிதாலிக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது” - கங்குலி ஓப்பன் டாக்

``மிதாலிக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது” - கங்குலி ஓப்பன் டாக்
``மிதாலிக்கு ஏற்பட்ட நிலைமை எனக்கும் ஏற்பட்டிருக்கிறது” - கங்குலி ஓப்பன் டாக்

இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்குத் தேர்வுசெய்யப்படாதது குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

ஐ.சி.சி நடத்தும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோற்று வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மிதாலி ராஜின் மேனேஜர் இந்திய அணியின் கேப்டன் கவுரை கடுமையாக விமர்சித்திருந்தார். மிதாலி தேர்வு செய்யப்படாததுக்கு கவுர் தான் காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். எனினும் இது தொடர்பாக கவுர் மற்றும் மிதாலி ராஜ் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அவர்,  ``இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் நான் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கேப்டன்கள் சில நேரம் இப்படி உட்காரவைக்கப்படுவார்கள். ஃபைசிலாபாத்தில் எனக்கும் நடந்தது. நான் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும்போதே என்னை 15 மாதங்கள் அணியில் இருந்து ஒதுக்கி வைத்தார்கள். சில நேரங்களில் திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். 

இதனால் மிதாலி அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. அவர் தேர்வாகாததை அறிந்தபோது, எங்கள் கூட்டத்துக்கு வரவேற்கிறேன் என்று  சொல்ல முடிந்தது. மிதாலி சோர்வடையக்கூடாது. அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும்.  அவர் தேர்வு செய்யப்பாடாததால் நான் ஏமாற்றமும் அடையவில்லை. ஆனால், இந்திய அணி அரையிறுதியில் அடைந்த தோல்வியால் ஏமாற்றம் அடைந்தேன். இந்த அணி இன்னும் உயரங்கள் தொடும் என எண்ணி இருந்தேன்” என்றார்.