Published:Updated:

தொடர் வெற்றிகளுக்கு செக் - டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா! #WT20

தொடர் வெற்றிகளுக்கு செக் - டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா! #WT20
தொடர் வெற்றிகளுக்கு செக் - டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா! #WT20

பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.


 Photo: Twitter/BCCI

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில், ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புடன் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கவுர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். லீக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பகல் ஆட்டமாக விளையாடினர். முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணி இரவு ஆட்டத்தில் விளையாடியது. 

தொடக்க வீராங்கனையான அதிரடி மந்தானா, தனது அதிரடியான ஆட்டத்தால் நல்ல தொடக்கம் அளித்தார் என்றே சொல்லலாம். முதல் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ரோட்ரிக்யூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் நிதானமாக விளையாடி 16 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் யாரும் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை. ஒருகட்டத்தில், 89 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த இந்தியா, அடுத்த 10 ரன்கள் சேர்க்க 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இறுதியில், இந்தியா 19.30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களே எடுத்தது. ஸ்ட்ராங் பேட்டிங் லைன் -அப் கொண்ட இந்திய அணியை இங்கிலாந்து எளிதில் கட்டுப்படுத்தியது, ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நைட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மந்தானா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். 

 Photo: Twitter/BCCI

பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீராங்கனை டாமி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு பந்து வீச்சிலும் நல்ல தொடக்கம் கிடைத்தது. நிதானமாக விளையாடிய டேனியெல்லே 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் களமிறங்கிய ஜோன்ஸ் மற்றும் நடலிய்யே ஸீவெர் அதிரடியாக விளையாடினார். இந்திய அணியின் சொதப்பலான ஃபீல்டிங்கைப் பயன்படுத்திக்கொண்ட அவர்கள், இருவரும் அரை சதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர். இறுதியாக, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கைத் துரத்திப்பிடித்தது. 

இதன்மூலம் தொடர் வெற்றிகளைக் குவித்துவந்த இந்திய அணி, இறுதிக் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.   இறுதிப்போட்டி வரும் ஞாயிறு அன்று ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற  உள்ளது.